உயர்கல்வி அமைச்சரின் வாக்குறுதியை அண்ணாமலை பல்கலைக்கழகம் மீறலாமா?: அன்புமணி ராமதாஸ் கேள்வி

உயர்கல்வி அமைச்சரின் வாக்குறுதியை  அண்ணாமலை பல்கலைக்கழகம் மீறலாமா?:   
அன்புமணி ராமதாஸ் கேள்வி

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தொகுப்பூதிய பணியாளர்கள் 205 பேரை  பணி நீக்கம் செய்யப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " 12 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பணியாளர்கள் 205 பேரை   நவம்பர் மாதம் முதல்  பணிக்கு வரக்கூடாது என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருக்கிறது. 12 ஆண்டுகளாக உழைத்தவர்களை மனிதநேயமின்றி பல்கலைக்கழகம் பணி நீக்கம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 22- ம் தேதி நடைபெற்ற ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில்  தொகுப்பூதிய பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டதாகவும், அக்டோபர் 31-ம்  தேதியுடன் அவர்களின் பணிக்காலம் முடிவடைவதாகவும் துணைவேந்தர் முனைவர் கதிரேசன் கூறியுள்ளார். பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு மனிதநேயமற்றது என்பது மட்டுமின்றி, தமிழக அரசின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது. இதை ஏற்கவே முடியாது. இம்முடிவை திரும்பப்பெற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

மேலும், " அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொகுப்பூதியர்கள் கோரியது பணிநிலைப்பும், காலமுறை ஊதிய நிர்ணயமும் தான். அதற்காக அவர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் அவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.  தமிழக சட்டப்பேரவையிலும் இந்த  கோரிக்கையை பாமக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து  தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கப்படமாட்டார்கள் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்.

ஆனால், உயர்கல்வி அமைச்சரின் வாக்குறுதியை பொருட்படுத்தாமல், 205 தற்காலிக  ஊழியர்களையும் பல்கலைக்கழக நிர்வாகம் இவ்வாறு பணி நீக்கம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.  அண்ணாமலை பல்கலைக்கழக தற்காலிகப் பணியாளர்கள் சலுகை கேட்கவில்லை. தங்களின் உரிமையைத்தான் கேட்கிறார்கள். 

2010-ஆம் ஆண்டில் ரூ.1500 ஊதியத்தில் பணியில் சேர்க்கப்பட்ட அவர்கள், 12 ஆண்டுகளான நிலையில், இப்போது தான் அவர்களின் ஊதியம் ரூ.5,000 ஆக உயர்ந்திருக்கிறது. அதுவே அவர்களுக்குப் போதுமானதல்ல எனும் போது, அதையும் பறிக்கத் துடிப்பது எந்த வகையில் நியாயம்?   அவர்களின் உரிமைகளை அரசு மறுக்கக் கூடாது.

தொகுப்பூதியர்களாக பணியாற்றி வரும் அனைவரும் பணி நிலைப்பு செய்வதற்கான தகுதியும், திறமையும் கொண்டவர்கள் தான். பணி நிலைப்பு செய்வதற்கு பதிலாக, அவர்களை பணியில் இருந்து நீக்குவதை அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அவர்களைப் பணி நிலைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்" என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in