'கோடைகாலத்திலும் தூர்வாரும் பணி மேற்கொள்ள வேண்டும்' - அன்புமணி ராமதாஸ்

அன்புமணியிடம் முறையிடும் விவசாயி ராஜதுரை
அன்புமணியிடம் முறையிடும் விவசாயி ராஜதுரை

மழைக்காலத்தில் மட்டுமல்லாது கோடைகாலத்திலும் தூர்வாரும் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று மாலை பார்வையிட்டார். 

சீர்காழி மற்றும் கொள்ளிடம் வட்டாரங்களில் மழையால்  பாதிக்கப்பட்டுள்ள மக்களையும் விளைநிலங்களையும் பார்வையிட்ட அன்புமணி,  அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 11-ம் தேதி பெய்த அதீத கனமழையால் சீர்காழி தாலுகா பகுதியில் பயிரிடப்பட்ட  பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கி முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உடனடியாக தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாய விளைநிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயும்,  குடும்ப அட்டைக்கு 10,000 ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டும்.

மழைக்காலம் வந்தால் மட்டுமே அரசு வாய்க்கால்களைத் தூர்வாருகிறார்கள் ஆனால் கோடைகாலத்திலும் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை மேற்கொண்டால்தான் மழைக் காலத்தில் பாதிப்புகள் இருக்காது.

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்” என்றார்.

மேலும், “ஒரு சில நிறுவனங்கள் 33 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்குவோம் என கூறுகிறார்கள். அதற்கும் அரசு அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவாக செயல் படுகிறார்கள்.  எனவே அரசு தனிக்கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தைப் பேரிடர் மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும் . ஏனென்றால் அனைத்து மாவட்டங்களிலும் பெய்யும் மழை நீர் அனைத்தும்  இந்த இரண்டு மாவட்டங்களில் வழியாக வடிகின்றது. ஒட்டுமொத்த டெல்டா பகுதியில் தற்போது பெய்துள்ள மழையால் இரண்டு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள்  பாதிக்கப்பட்டுள்ளன.  ஆனால் அரசு வெறும் 88 ஆயிரம் ஏக்கர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட அனைத்து விவசாய நிலங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்" என்று அன்புமணி தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in