70 வயதான ஜி.கே.மணியிடம் இருந்து பொறுப்பு பறிப்பு: பாமக தலைவரானார் அன்புமணி

70 வயதான ஜி.கே.மணியிடம் இருந்து பொறுப்பு பறிப்பு: பாமக தலைவரானார் அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற பா.ம.க சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸை அதன் தலைவராக இருந்த ஜி கே மணி முன்மொழிய ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அன்புமணி ராமதாஸ். இதன்மூலம் நடுத்தர வயதுள்ளவர்களை தலைவர்களாக கொண்டிருக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் வரிசையில் பாட்டாளி மக்கள் கட்சியும் சேர்ந்து இருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடுத்தர அல்லது மத்திய வயது கொண்டவர்களை தலைவராக கொண்டுள்ள அரசியல் கட்சிகளின் வரிசையில் பாட்டாளி மக்கள் கட்சியும் தற்போது சேர்ந்திருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தினகரன் என முக்கிய அரசியல் கட்சிகள் பலவற்றிலும் இளைஞர்களே தலைவர்களாக இருக்கிறார்கள்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் வயதானவராக இருந்தாலும் தோற்றத்திலும் செயல்பாட்டிலும் என்றும் இளமையாகவே இருக்கிறார். மதிமுகவைப் பொறுத்தவரை அதன் பொதுச்செயலாளர் வைகோ தான் என்றாலும், தலைமை நிலைய செயலாளராக அதிகாரமிக்க பதவிக்கு அவரது மகன் துரை வைகோ நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தேமுதிகவை பொறுத்தவரை தலைவர் விஜயகாந்த் என்றாலும் அவருக்கு உடல் நலம் சரியில்லாத நிலையில் அவரது மனைவி, மைத்துனர் மற்றும் மகன்களே கட்சியை நிர்வகித்து வருகின்றனர். திமுகவில் கருணாநிதியே தனது இறுதிக்காலம் வரை தலைவராக இருந்து வந்தார். அவரது காலத்திற்குப் பிறகு மு.க.ஸ்டாலின் தலைவராக முடிந்தது. 69 வயது என்றாலும் மு.க.ஸ்டாலின் 25 கிலோ மீட்டருக்கு மேல் மிதி வண்டி ஓட்டுவது, தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது என தன்னை இளையவராகவே வைத்திருக்கிறார்.

அப்படி இளமையாகவும் துடிப்பாகவும் இருக்கும் தலைவர்கள் தமிழ்நாட்டின் கட்சிகளுக்கு தலைவர்களாகும் சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதன்படி தமிழ்நாடு காங்கிரசுக்கும் ஒரு இளையவர், அதுவும் பெண் தலைவராக கூடும் என்பதை தற்போதைய தலைவர் கே.எஸ்.அழகிரி மறைமுகமாகக் கூறியிருக்கிறார்.

இப்படி அனைத்து கட்சியிலும் இளையவர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் வழியில் பாட்டாளி மக்கள் கட்சியில் 70 வயதான ஜி.கே.மணி கடந்த 25 ஆண்டு காலமாக தலைவராக இருந்து வருகிறார். தற்போது கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் உடல் வலுவோடு இருக்கிற இளைஞர்களை கவரக்கூடிய 53 வயதுடையவரான அன்புமணியை கட்சியின் தலைவராக ஆக்கியிருக்கிறார்கள். இது அந்தக் கட்சிக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பது போகப்போகத்தான் தெரியும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வயதில் முதியவர்கள் தான் அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருப்பது வழக்கம். அதை மக்களும் விரும்புவார்கள் என்று அவர்கள் நினைத்தனர். அந்த நிலை சமீப காலமாக மாறி வருவது தமிழக அரசியலில் இளைஞர்களின் ஆதிக்கம் அதிகமாகவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in