'மடிக்கணினி திட்டம் கைவிடப்பட்டதா?’: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

'மடிக்கணினி திட்டம் கைவிடப்பட்டதா?’: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

கரோனா காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளாக மடிக்கணினி வழங்கப்படவில்லை. இந்த திட்டம் நிறுத்தப்படுவதாக பரவிய தகவலுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக அரசுப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. கரோனா பொது முடக்கம் காரணமாகக் கடந்த இரு ஆண்டுகளாக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டேப்(TAB) வழங்குவோம் எனத் தேர்தல் பரப்புரையின் போது திமுக வாக்குறுதி அளித்திருந்தது. திமுக ஆட்சி அமைந்து ஒரு வருடம் ஆன நிலையில் மடிக்கணினியும் வழங்கப்படவில்லை. திமுக வாக்குறுதி கொடுத்த டேப்பும் வழங்கப்படவில்லை. இதனால் ஏற்கெனவே இருந்த மடிக்கணினி வழங்கும் திட்டமும் கைவிடப்பட்டதாகத் தகவல்கள் பரவின.

சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் இன்று கலந்துகொண்ட அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இது தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர், “தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை. திமுக தேர்தல் வாக்குறுதியில் இலவச டேப் (TAB) வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தோம். இது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடைபெற்றது. அப்போது டேப்பை விட மடிக்கணினி வழங்கினால் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மடிக்கணினி வழங்குவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே வழங்கப்படாமலிருந்த மாணவர்களுக்கும் சேர்த்து 11 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in