வன்னியர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட பின்னணி என்ன?

ஜனநாயக, சட்டப் போராட்டம் ஒரு பார்வை
வன்னியர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட பின்னணி என்ன?
பாமக மாநாடு

வன்னியர்களுக்கான 10.5 சதவீத தனி இடஒதுக்கீட்டுச் சட்டம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையால் ரத்துசெய்யப்பட்டிருப்பது, வடமாவட்டங்களில் அதிர்ச்சியையும், தென்மாவட்டங்களில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இடஒதுக்கீட்டின் அடுத்த கட்டமாக, ஒவ்வொரு சாதிக்கும் தனி ஒதுக்கீடு வழங்குவதற்கான முதல்படி என்று கருதப்பட்ட, வன்னியர் இடஒதுக்கீடு எப்படி ரத்தானது? தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததால் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பாமக நிறுவனர் ராமதாஸும் எந்தெந்த விஷயங்களில் கோட்டைவிட்டார்கள் என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை.

115 சாதிகளின் சமூகநீதிக் கூட்டமைப்புக் கூட்டம்
115 சாதிகளின் சமூகநீதிக் கூட்டமைப்புக் கூட்டம்படம்: கே.கே.மகேஷ்

மக்கள் பார்வையில்...

மேலோட்டமாகப் பார்க்கும்போது, வன்னியர்களுக்கான 10.5 சதவீத தனி இடஒதுக்கீட்டுச் சட்டம் வரவேற்கத்தக்கதாகவே தெரியும். மருத்துவர் ராமதாஸ் போன்ற தலைவர்கள் ஒவ்வொரு சமூகத்திலும் இருந்தால், அந்தச் சமூகங்களுக்கும் அதிகாரமும் வாய்ப்பும் பரவலாகுமே எனும் ஏக்கம்கூட வரும். ஆனால், இந்தச் சட்டத்துக்கு எதிராக மதுரை, தேனி மாவட்டங்களில் பிரமலைக் கள்ளர் (சீர் மரபினர்) ஏன் போராட்டம் நடத்துகிறார்கள் என்று கவனித்தபோதுதான் புரிந்தது, இது வெறும் வன்னியர் தனி இடஒதுக்கீட்டுச் சட்டமல்ல, ஒட்டுமொத்த எம்பிசி பட்டியலையே 3 பிரிவாகப் பிரிக்கும் சட்டம்; ஒரே ஒரு சாதியின் தலைவர் கோரிக்கையை ஏற்று, எஞ்சியுள்ள 115 சாதிகளின் கருத்தைக் கேட்காமல் நிறைவேற்றப்பட்ட சட்டம் என்பது.

எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், வன்னியர்கள் இந்த இடஒதுக்கீட்டுக்கு முற்றிலும் தகுதியானவர்கள்தான். ஆனால், இந்தச் சட்டமானது எவ்வளவு அவசரமாக, பின்விளைவுகள் பற்றி யோசிக்காமல், தேர்தல் லாபத்தை மட்டுமே கணக்கில்வைத்து கொண்டுவரப்பட்டது என்பதைப் பிற சாதியினர் தங்கள் போராட்டங்களின் மூலம் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார்கள்.

பி.ராமசாமி
பி.ராமசாமி

பிரபல வழக்கறிஞர்கள்...

தென்தமிழகத்தில் இடஒதுக்கீடு குறித்த அக்கறையே இல்லாமல், ஆண்டசாதி பெருமிதத்துடன் இருந்த சில சமூகங்கள் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட பிறகு விழித்துக்கொண்டன. குறிப்பாக, அந்தச் சமூகங்களில் படித்து, பெரிய பெரிய அதிகாரியாகப் பணிபுரிந்தவர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். நிறைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என்றாலும், உரிய ஆவணங்கள் இருந்த 40 மனுக்கள் மட்டுமே விசாரணைக்கு ஏற்கப்பட்டன. இவர்கள் சார்பில் ஆஜரானவர்களில் விஜயன், சண்முகசுந்தரம் உள்ளிட்ட சில வழக்கறிஞர்கள் மட்டுமே பிரபலமானவர்கள். பலர் பெரிதாகக் கட்டணம் வாங்காத, சாதாரண வழக்கறிஞர்களே.

வழக்கில் பாமகவும் இணைந்துகொண்டதைத் தொடர்ந்து, அக்கட்சியின் சார்பில் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். ராமதாஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி ஆஜரானார். இவர் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கே சட்ட ஆலோசனை சொன்னவர். இஸ்லாமியர்களுக்கு அரசு 3.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவந்தபோது, இவர்தான் தலைமை அரசு வழக்கறிஞர். வன்னியர் சங்கம் சார்பில் ஆஜரான சோமயாஜி, ஜெயலலிதா ஆட்சியில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்தவர். திமுகவின் சட்டதிட்டங்களை உருவாக்கிய வி.பி.ராமனின் மகனும், பிரபல வழக்கறிஞருமான பி.எஸ்.ராமன், வழக்கறிஞர்கள் கே.பாலு, ஓம் பிரகாஷ் என்று ஆஜரான அத்தனை பேருமே வலுவான ஆட்கள். குறிப்பாக, சமூகநீதி விஷயத்தில் கரைகண்ட வழக்கறிஞர்கள். இந்த வழக்குகள் அரசுக்கு எதிரானவையும்கூட என்பதால், அரசு வழக்கறிஞர் இந்த வழக்கை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பாமக சார்பில் தனியே வகுப்பெடுக்கப்பட்டது.

சட்டத்தில் என்ன பிரச்சினை?

அப்படியிருந்தும், வன்னியர் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட காரணம் என்ன? வழக்கில் வெற்றிபெற்ற மனுதாரர்களில் ஒருவரும், சீர்மரபினர் நலச்சங்கச் செயல்தலைவருமான பி.ராமசாமியிடம் பேசினோம். “பழனிசாமி அரசு பிப்ரவரி 27-ல் சட்டம் போட்டது. மார்ச் 9-ம் தேதியே அதற்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். உடனே தடைவிதிக்க முடியாது; மாநில அரசிடம் கருத்து கேட்கிறோம் என்று கூறி, 6 வாரத்தில் பதில் சொல்லுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதற்குள்ளாகத் தேர்தல் வந்துவிட்டது. அதைக் காரணம் காட்டி, தமிழக அரசு கூடுதல் அவகாசம் வாங்கிவிட்டது. அடுத்துவந்த அரசாங்கமும், உச்ச நீதிமன்றத்தில் பதில் சொல்லாமல், வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை அமல்படுத்தத் தொடங்கிவிட்டது.

இதெல்லாம் நடக்கும் என்றறிந்து, சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குப் போட்டோம். 1983-ல் அமைக்கப்பட்ட அம்பாசங்கர் அறிக்கையின் அடிப்படையில்தான் இடஒதுக்கீடு கொடுப்பதாகச் சொல்லியிருந்தது அதிமுக அரசு. சட்டத்தை அமல்படுத்திய இன்றைய திமுக அரசும் அதையேதான் சொன்னது. எனவே, முதலில் அம்பாசங்கர் ஆணையத்தின் அறிக்கையைச் ‘சேலஞ்ச்’ செய்தோம். அந்த ஆணையத்தின் தலைவரான அம்பாசங்கர் ஒரு வன்னியர். மொத்தம் 21 உறுப்பினர்கள் கொண்ட அந்த ஆணையத்தில் 14 உறுப்பினர்கள், தலைவரின் அறிக்கை தவறானது என்று அப்போதே தனியே ஒரு அறிக்கையை அரசிடம் கொடுத்துவிட்டார்கள். ஆக, அது ஆணையத்தின் அறிக்கையல்ல, ஆணையத் தலைவரின் தனிப்பட்ட அறிக்கை என்று நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் நிரூபித்தோம்.

கூடவே, அதற்கு முன்பு போடப்பட்ட 1978 சட்டநாதன் ஆணையம் கொடுத்த சாதிவாரி மக்கள்தொகை குறித்த புள்ளிவிவரத்தை, எந்தக் கள ஆய்வும் செய்யாமல் அம்பாசங்கர் மாற்றிவிட்டார் என்பதையும் நிரூபித்தோம். அதாவது, 1978 அறிக்கையில் 27 லட்சமாக இருந்த வன்னியர் மக்கள் தொகையை 1983 அறிக்கையில் 67 லட்சம் என்று மாற்றிய அவர், சீர்மரபினரின் மக்கள் தொகையைப் பாதியாகக் குறைத்துவிட்டார் என்பதற்கான ஆதாரங்களைக் காட்டினோம். அம்பாசங்கர் ஆணையம் வன்னியர் 13 சதவீதம் இருப்பதாகச் சொன்னது தவறு என்று அப்போதே சர்ச்சை எழுந்ததால், அன்றைய அரசு மாவட்ட ஆட்சியர்களிடம் அறிக்கை கேட்டது. அவர்களோ வன்னியர்கள் 8.28 சதவீதம்தான் இருக்கிறார்கள் என்று அறிக்கை தந்தார்கள். அதையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம்.

கடைசியில் அரசுத் தலைமை வழக்கறிஞரே, ‘ஆமாம் அம்பாசங்கர் ஆணையத்தின் பரிந்துரையில் குளறுபடி இருக்கிறது’ என்று ஒப்புக்கொண்டார். இதேபோல இடஒதுக்கீடு தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் ஏற்கெனவே வந்த தீர்ப்புகள், சட்டங்கள் எல்லாவற்றையும் மேற்கோள் காட்டினோம். அதன் அடிப்படையில் நீதிமன்றம் 7 கேள்விகளைக் கேட்டது. அதற்கு பாமக தரப்பிலும், அரசு தரப்பிலும் சரியான விளக்கம் தர முடியவில்லை. எனவே, சட்டத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது” என்றார் ராமசாமி.

விஜயகுமார்
விஜயகுமார்படம் :கே.கே.மகேஷ்

நீதிமன்றம் கேட்ட கேள்விகள்

அந்த 7 கேள்விகள் என்ன என்பதை, வாசகர்களான நீங்கள் அறிந்திருப்பீர்கள். நீதிமன்றத்தில் பதில் சொல்ல முடியாத அந்தக் கேள்விகளுக்கு, எல்லாம் முடிந்த பிறகு ரொம்பச் சிரமப்பட்டு அறிக்கை வாயிலாக மருத்துவர் ராமதாஸ் கொடுத்த பதில்களையும் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். எனவே, இங்கே அதுபற்றி ஓரிரு வரிகளில் சொல்லிக் கடந்துவிடலாம்.

2018-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 102-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி, யார் பிற்படுத்தப்பட்டோர் என்று வரையறை செய்வதற்கான அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் உண்டு (அதாவது, நாடாளுமன்றத்தில் சட்டம் போட்டு அவரிடம் ஒப்புதல் பெற வேண்டும்). இதில் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்று கேட்டது நீதிமன்றம். “11.8.2021-ல் மீண்டும் அந்தச் சட்டம் திருத்தப்பட்டு (105) மாநில அரசுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுவிட்டதே” என்றது பாமக. ஆனால், புதிய திருத்தம் வருவதற்கு முன்பே வன்னியர் ஒதுக்கீட்டுச் சட்டம் போடப்பட்டது எப்படி என்று நீதிமன்றம் கேட்ட கேள்விக்குப் பதில் இல்லை.

“35 ஆண்டுகளுக்கு முன்புள்ள அம்பாசங்கர் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் இன்று இடஒதுக்கீடு தர முடியுமா? அப்போதைய கல்வி, பொருளாதாரச் சூழல் வேறு, இன்று வேறு. அப்டேட்டட் டேடா எங்கே?” என்று கேட்டது நீதிமன்றம். இதற்கும் திருப்தியான பதில் இல்லை. தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு தேர்தல் முடிவையே மாற்றுவதுபோல ஒரு சட்டம் போட்டால் அது செல்லாது என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறதே, தெரியாதா என்ற கேள்விக்கும் பதில் இல்லை. இதையடுத்து ரத்தானது வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டம்.

விதைப்பவன் ஒருவர், அறுவடை இன்னொருவருக்கா?

"இடஒதுக்கீட்டிற்காக, வன்னியர் சங்கமாக இருந்த காலத்தில் இருந்தே போராடிய கட்சி பாமக. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்காக, எத்தனையோ வன்னியர்கள் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். ஆனால், அதன் பலனை பிற 115 எம்பிசி, டிஎன்டி சமூகங்களும்தானே அனுபவிக்கின்றன? தங்கள் போராட்டத்தின் முழுப்பலனை அடையும் முயற்சியின் ஒரு பகுதிதானே பாமகவின் 10.5 சதவீத தனி ஒதுக்கீடு கோரிக்கை?" என்று கேட்டால், மற்ற சமூகத்தினரால் நேரடியாகப் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால், "அன்று நாங்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். இன்று எங்களுக்கும் விழிப்புணர்வு வந்துவிட்டது. எங்களது உரிமை பறிபோகிறபோது குரல் கொடுக்கிறோம். எம்பிசி பட்டியலுக்குள் சாதிய மேலாதிக்கம் செய்யப் பார்க்கிறது பாமக. எனவேதான் போராடுகிறோம்" என்கிறார்கள்.

இதுபற்றி நம்மிடம் விரிவாகப் பேசிய இன்னொரு மனுதாரரும், அனைத்து மறவர் நலக் கூட்டமைப்பு நிர்வாகியுமான செ.விஜயகுமார் (இவர் ஓய்வுபெற்ற அரசு உயரதிகாரியும்கூட), "தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவராக இதுவரையில் நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வன்னியர்கள். உயர் அதிகாரிகளும் வன்னியர்களே. இதனால், அந்தத் துறையே ஒரு சாதிக்கான துறை போல ஆகிவிட்டது. சம்பளம் வாங்குவது நம் வரிப்பணத்தில், ஆனால், விசுவாசம் காட்டுவது பாமகவிடத்தில் என்று செயல்படுகிறார்கள். சட்டநாதன் ஆணையம், அம்பாசங்கர் ஆணையம், எடப்பாடி அமைத்த குலசேகரன் ஆணையம் எல்லாவற்றின் தலைவர்களும் வன்னியர்கள்தான். இதுதான் இந்த ஒருதலைப்பட்சமான சட்டத்துக்கு அடிப்படைக் காரணம். எனவே, இனிவரும் காலங்களிலாவது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வன்னியர் அல்லாத பிற சாதியினரை தலைவராக நியமிக்க வேண்டும்” என்றார்.

மேலும், “எடப்பாடி அரசு செய்த தவறுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ஏற்று, சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. அந்த உத்தரவை தமிழக அரசு மதிக்க வேண்டும். ஆனால், மேல்முறையீட்டிற்குப் போயிருக்கிறது அரசு. உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் பதில் கேட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. அதற்கு இன்னமும் பதில் சொல்லாத அரசு, உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த மறுநாளே மேல்முறையீடு செய்ய முயல்வது நியாயமற்ற செயல்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியது கலைஞர். அதை இன்றைய திமுக அரசு உரிய காரணங்களோ, தரவுகளோ இல்லாமல் பிரிக்கக்கூடாது. உடனே சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும். மத்திய அரசு அறிவுறுத்தியும், ராமதாஸ் எதிர்த்தார் என்ற ஒரே காரணத்துக்காக நிறுத்தப்பட்டுள்ள சீர்மரபினர், நாடோடிகள், அரை நாடோடிகள் குறித்த கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும். முஸ்லிம்களுக்கும், வன்னியர்களுக்கும் உரிய கணக்கெடுப்பை நடத்தி ஆவணங்களின் அடிப்படையில்தான் கருணாநிதி உள்ஒதுக்கீடு கொடுத்தார். அதேபோல சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி, அதில் எம்பிசியில் 90 சதவீதம் பேர் வன்னியர்கள்தான் என்று முடிவு வந்தால்கூட, அதை அப்படியே செயல்படுத்த நாங்கள் மனப்பூர்வமாகச் சம்மதிக்கிறோம்" என்றார் விஜயகுமார்.

மணி பாலா
மணி பாலா

தேர்தல் நேரத்திலும் சரி, நீதிமன்றத்திலும் சரி இந்த விவகாரம் வன்னியருக்கும், முக்குலத்தோருக்கும் இடையிலான மோதல் போலவே காட்சியளிக்கிறது. உண்மையில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்போர், வண்ணார், மருத்துவர், குலாலர், போயர், ஒட்டர் போன்ற சிறுகுறு சமூகங்களே. இவர்களுக்கு முன்னுரிமை தருவது பற்றி யாருமே பேசவில்லை என்று வருந்துகிறார் டி.வி.பி. மக்கள் கட்சித் தலைவர் மணிபாலா.

"அரசியல், பொருளாதார பலம்மிக்க வன்னியர், மறவர், பிரமலைக் கள்ளர் போன்றோரோடு எங்களால் போட்டி போடவே முடியவில்லை. எங்களுக்கு முன்னுரிமை கேட்டால், ஓட்டுக்காக வன்னியருக்கு ஒதுக்கீடு தந்துவிட்டார் எடப்பாடி. ஸ்டாலினும் எங்கள் கோரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை. பெரும்பான்மையினருக்குத்தான் எல்லாச் சலுகையும் என்றால், நாங்கள் எல்லாம் என்ன செய்வது, இதுதான் சமூகநீதியா?" என்று வேதனையுடன் கேட்கிறார் மணிபாலா.

மருத்துவர் ராமதாஸ் நினைத்தால், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தாமலேயே தமிழ்நாடு அரசைப் பணிய வைக்க முடியும். தகுந்த வாதங்களை முன்வைத்தால் நீதிமன்றத் தீர்ப்பையும் சட்டப்படி முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அவர் ‘சமூகநீதிக் காவலர்’ அல்ல ‘ஒரு சாதிக்கான தலைவர்’ என்ற கூற்று மேலும் உறுதிப்படும். எனவே, எப்படிப் பார்த்தாலும் இது பாமகவுக்கு ஒரு சவாலான தருணம்தான்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in