நீட் விலக்கு மசோதா: ஆழம் பார்க்கிறாரா ஆளுநர்?

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் கடந்த சில மாதங்களாகக் கடும் மோதல்கள் நடந்துவந்த நிலையில், நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்தத் தகவலைத் தன்னிடம் ஆளுநரின் செயலாளர் தெரிவித்ததாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபோது பேரவையில் ஒரே மகிழ்ச்சி ஆரவாரம்.

இதையடுத்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதில் தமிழகம் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறதா எனும் விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன. பேரறிவாளன் விடுதலை வழக்கு, குடியரசுத் தலைவர் தேர்தல், நீட் தேர்வு, மருத்துவ மாணவர் சேர்க்கை என எல்லாமே கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் அடுத்தடுத்து நடப்பதால் நீட் விவகாரம் ஏறத்தாழ க்ளைமாக்ஸை நெருங்கிவிட்டது என்றே கருதப்படுகிறது. இதுவரை என்ன நடந்தது? இனி என்ன நடக்கும்?

தொடர் முயற்சிகள்

அதிமுக ஆட்சிக் காலத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் பார்வைக்காக ஆளுநர் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதை பல மாதங்கள் மத்திய அரசு கிடப்பில் போட்டது பின்னர்தான் தெரியவந்தது. இதற்கிடையே, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவையின் அதிகாரம் மற்றும் நீதிமன்றங்களின் ஆதரவுடன் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி அமல்படுத்துவோம்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார். தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வு விலக்கு சட்டம் குறித்த வாக்குறுதியைத் திமுக அளித்திருந்தது. திமுக அரசு பொறுப்பேற்றதும் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர், நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு கோரும் சட்ட மசோதா 2021 செப்டம்பர் 13-ல் நிறைவேற்றப்பட்டது.

அந்த மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்குமாறு ஆளுநருக்கு ஆரம்பம் முதலே மு.க.ஸ்டாலின் அழுத்தம் கொடுத்துவந்தார். சட்டம் இயற்றும் அதிகாரத்தின் கீழ் சட்டப்பேரவை நிறைவேற்றும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதுதான் மக்களாட்சியின் தத்துவம் என்றும் ஆளுநருக்கு அவர் சுட்டிக்காட்டினார். ஆனாலும் ஆளுநரோ மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவோ சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.

இவ்விவகாரம் தொடர்பாக, கடந்த டிசம்பர் மாதம் அமித் ஷாவைச் சந்திக்கச் சென்ற தமிழக அனைத்துக் கட்சி எம்பி-க்கள் அவரைச் சந்திக்க முடியாமல் திரும்பியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. சில நாட்கள் கழித்து அமித் ஷாவைத் தமிழக எம்பி-க்கள் சந்தித்து, அம்மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டனர். ஆளுநரோ அந்த மசோதா மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என்பதில் விடாப்படியாக நின்றார். சட்ட மசோதா, அனைத்துக் கட்சித் தீர்மானம் எனத் தமிழக அரசு ஒரு பக்கம் முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்க, மறுபக்கம் ஆளுநரின் ஆழ்ந்த மவுனம் அரசுக்கு அழுத்தத்தை அதிகரித்தது.

இந்தச் சூழலில், பிப்ரவரி 3-ல் இந்த மசோதாவை ஆளுநர் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி அதிர வைத்தார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காரணம்காட்டி, ஆளுநர் அந்த மசோதாவில் கையெழுத்திடாமல் திருப்பியனுப்பியிருந்தார். மசோதா குறித்து மறுபரிசீலனை செய்யுமாறும் தமிழக அரசிடம் அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து பிப்ரவரி 8-ல் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தி, மீண்டும் ஒரு மசோதாவைத் தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. மருத்துவ இளநிலைப் படிப்பில் அரசு ஒதுக்கீடு இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு செய்யும் இடங்கள் ஆகியவற்றுக்கு ப்ளஸ் 2 தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த அந்த மசோதாவில் முன்மொழியப்பட்டிருக்கிறது. அரசியல் ரீதியாக ஆளுங்கட்சியுடன் மோதினாலும், நீட் விலக்கு மசோதாவை ஆதரிக்க அதிமுக தயங்கவில்லை. தமிழக பாஜக கூட சட்ட வடிவில் கொண்டுவரப்பட்டால் நீட் விலக்கை ஆதரிப்பதாகவே கூறியது. எனினும், அந்த மசோதா தொடர்பான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் அக்கட்சி வெளிநடப்பு செய்தது.

அதிகரித்த கசப்பு

இந்த முறை பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் சந்தித்து இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்க வழிசெய்யுமாறு மு.க.ஸ்டாலின் கோரியிருந்தார். இந்த மசோதாவும் பல நாட்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தது தமிழக அரசைக் கொந்தளிக்க வைத்தது. ஏப்ரல் 14-ல் ஆளுநர் ஏற்பாடு செய்த தேநீர் விருந்தைப் புறக்கணிக்க அதை ஒரு காரணமாகவும் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்தார்.

இதற்கிடையே, மாநில உரிமை தொடர்பான குரல்கள் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின. ஊட்டியில் ஆளுநர் ஏற்பாடு செய்திருந்த துணைவேந்தர்கள் மாநாடு ஆளுங்கட்சியைக் கொந்தளிக்க வைத்தது. இதற்குப் பதிலடி தரும் வகையில், துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்ட மசோதாவைத் தமிழக அரசு நிறைவேற்றியது. இதற்கிடையே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஜாமீனில் வெளிவந்திருக்கும் பேரறிவாளனுக்கு விடுதலை அளிப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வைத்த வலுவான குட்டு ஆளுநரையும் மத்திய அரசையும் அதிர வைத்தது.

இந்தச் சூழலில்தான் 86 நாட்கள் தன் கையில் வைத்திருந்த நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பியிருக்கிறார். பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்திய அதிருப்தி இதில் முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. முன்னதாக டெல்லி சென்ற ஆளுநர் இதுதொடர்பாக அமித் ஷாவிடம் ஆலோசித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பான வார்த்தைகளைத் தவிர்க்கவே இந்த முடிவுக்கு மத்திய அரசும் ஆளுநரும் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆனாலும், இவ்விஷயத்தில் அத்தனை எளிதில் மத்திய அரசு விட்டுக்கொடுக்காது என்பதில் சந்தேகமில்லை. நீட் தேர்வு ஏழை மாணவர்களின் பொருளாதாரச் சுரண்டலைத் தடுப்பதாகவும் சமூக நீதியை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது என்றும் ஆளுநர் முன்பு கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நீட் விவகாரத்தைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றத்தின் இதுவரையிலான கருத்துகளும் மத்திய அரசின் கருத்தையே எதிரொலிக்கின்றன. குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் வழங்க மாட்டார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடித்துச் சொல்கிறார். ஆனால், ஜல்லிக்கட்டுக்குத் தனிச் சட்டம் இயற்றியது போல நீட்டுக்கும் தமிழகத்துக்கு என விலக்குப் பெற முடியும் என திமுக கருதுகிறது.

இனி என்ன?

ஜூலை மாதம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது. இடைப்பட்ட சில நாட்களில் இவ்விஷயத்தில் அவர் உடனே முடிவெடுக்க வாய்ப்புகள் மிகக் குறைவு. பொதுவாகவே முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சினைகளில் குடியரசுத் தலைவர் பொறுமையாகவே முடிவெடுப்பது வழக்கம். அந்த வகையில் இம்மசோதாவை அவர் உடனே கையில் எடுக்கப்போவதில்லை. மோடி தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றும் எந்த ஒரு சட்டத்துக்கும் உடனுக்குடன் ஒப்புதல் அளித்துவரும் ராம்நாத் கோவிந்த் இந்த விஷயத்தில் தாமதம் செய்வார் என்றே கருதப்படுகிறது.

மறுபுறம், அடுத்து குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கவிருப்பவர் இவ்விஷயத்தில் என்ன முடிவெடுப்பார் என்பதும் கவனத்துக்குரியது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. சுரேஷ் பிரபு, ஆரிஃப் முகமது கான், முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டாலும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கே வாய்ப்பு அதிகம் எனக் கருதப்படுகிறது. அவரும் தனக்கான ஆதரவைத் திரட்டும் விதமாக அனைத்துக் கட்சியினரையும் அனுசரித்துச் செல்லும் வகையில் பேசிவருகிறார். சமீபத்தில் சென்னையில் ‘மெப்ஸ்’ சிறப்புப் பொருளாதார மண்டல நிகழ்ச்சியில் பேசும்போது, “தொழில் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொழில் துறையில் முன்னேறி செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது” என அவர் பாராட்டியதை ஓர் உதாரணமாகச் சொல்கிறார்கள்.

ஆனால், திமுக கடுமையாக எதிர்க்கும் புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருபவர் அவர். அதுமட்டுமல்ல, ஆரம்பம் முதலே நீட் தேர்வுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பவரும்கூட. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிகழும் ஆரோக்கியமற்ற போக்குகளுக்கு நீட் தேர்வு முடிவுகட்டும் எனப் பாராட்டியவர். கூடவே, குடியரசுத் தலைவராக யார் இருந்தாலும் மத்திய அரசின் கொள்கைளுக்கு ஆதரவாகத்தான் நடந்துகொள்வார்கள் என்பதால், வெங்கய்ய நாயுடுவும் விதிவிலக்காகிவிட மாட்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேறொருவர் குடியரசுத் தலைவரானாலும் இதே நிலைதான். ஒருவேளை, எதிர்க் கட்சிகளின் சார்பில் ஒருவர் குடியரசுத் தலைவர் பதவியில் அமர்ந்தால் திமுக அரசு நினைப்பது நடக்கலாம். அதுவரை நீட் விஷயத்தில் நிரந்தரத் தீர்வுக்கு வழியில்லை. ஜூலை 17-ல் நீட் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதுபோல் மாணவர்கள், இந்த அரசியல் நகர்வுகளால் குழப்பமடையாமல் நீட் தேர்வுக்கு முழு வீச்சில் தயாராவதே நல்லது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in