அதிமுகவைத் தாண்டி வளர்ந்துவிட்டதா பாஜக?

பற்றி எரியும் பொன்னையன் பற்றவைத்த நெருப்பு!
அதிமுகவைத் தாண்டி வளர்ந்துவிட்டதா பாஜக?

பாஜக மீதான அதிமுக மூத்தத் தலைவர் பொன்னையனின் அட்டாக்தான் தற்போது தமிழக அரசியலில் ஹாட் டாபிக். பாஜக எதிர்க்கட்சி போல தன்னை முன்னிறுத்திக் கொள்வதையும் அதைச் சமூக வளைதளங்களில் பிரசாரமாக முன்னெடுப்பதையும் அம்பலப்படுத்த வேண்டும் என்று பொன்னையன் பேசியிருப்பது அதிமுக - பாஜக கூட்டணியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. வரிசையாக பாஜக தலைவர்கள் பொன்னையனை விமர்சனங்களால் அர்ச்சிக்கும் வேளையில் அதிமுகவில் மயான அமைதி நிலவுகிறது. அதிமுகவை பாஜக விழுங்கப் பார்க்கிறது என்று ஏற்கெனவே பலரும் எச்சரித்து வரும் சூழலில், பொன்னையனின் பேச்சு உணர்த்துவது என்ன?

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தலைவர்களாக உருவெடுத்த ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் பாஜகவின் செல்லப் பிள்ளைகளாகவே மாறிபோனார்கள். தமிழகத்தில் மெஜாரிட்டி எம்எல்ஏ-க்களை அதிமுக வைத்திருந்தபோதும் ஒரு எம்எல்ஏகூட இல்லாமல் இருந்த பாஜகவின் மேலிடத்தை அனுசரித்து ஆட்சி செய்யத் தொடங்கினர். ஜெயலலிதா காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே பாஜக அல்லாடியது. ஆனால். ஓபிஎஸ் -ஈபிஎஸ் காலத்தில் பாஜகவுடனான கூட்டணியை அவர்களே தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

பாஜகவின் பாய்ச்சல்

தமிழக அரசியலின் முதன்மை முகங்களாக 30 ஆண்டுகளாக இருந்த ஜெயலலிதாவும், கருணாநிதியும் மறைந்த பிறகு பாஜகவை வளர்க்கும் பொறுப்பை அக்கட்சியின் மேலிடம் தீவிரப்படுத்தியுள்ளது. கருணாநிதிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் பின்னால் திமுக திரண்டு, வென்றும் காட்டிவிட்டது. ஆனால். அதிமுகவில் சரியான ஒற்றை தலைமையை அடையாளம் காண முடியவில்லை. தொடர் தோல்விகளால் தள்ளாடி வருகிறது அக்கட்சி. இதையெல்லாம் கணக்குப் போட்டுதான் பாஜக மேலிடம், தமிழகத்தில் பழைய பாஜக முகங்களை எல்லாம் சைலண்டாக ஓரங்கட்டிவிட்டு, புதிய வரவுகளை களத்தில் இறக்கியது. எல்.முருகன், அண்ணாமலை போன்றோரை அடுத்தடுத்து களத்துக்கு வந்ததும் அப்படித்தான்.

காங்கிரஸ் கட்சித் தலைவராக ஈவிகேஸ் இளங்கோவன் இருந்தபோதெல்லாம், அக்கட்சி பரபரப்பாக இருக்கும். ஏதாவது ஒன்றை இளங்கோவன் பேசுபொருளாக்கிக்கொண்டே இருப்பார். தற்போது தமிழக பாஜகவும் அப்படித்தான் பரபரப்பாக இருக்கிறது. திமுகவைப் போல அழுத்தமான திராவிடக் கொள்கைகளைப் பின்பற்றும் கட்சி அதிமுக அல்ல என்று எண்ணும் பாஜக, தமிழகத்தில் திமுகவைக் குறி வைத்துத்தான் தங்களை வளர்க்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது. அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதே எதிர்க்கட்சியான திமுகவைதான் கடுமையாக விமர்சித்தது பாஜக. தற்போது திமுகவே ஆளுங்கட்சியாகிவிட்ட நிலையில், கேட்கவே வேண்டாம். காலில் சலங்கைக் கட்டி ஆடிக்கொண்டிருக்கிறது பாஜக.

எதிர்க்கட்சி யார்?

உண்மையான எதிர்க்கட்சி அதிமுகவா அல்லது பாஜகவா என்று கேட்கும் அளவுக்கு மிகத் தீவிரமாக திமுக அரசை விமர்சித்து வருகிறது தமிழக பாஜக. நாள்தோறும் ஏதாவது ஒரு பிரச்சினையை முன் வைத்து திமுக அரசு மீது காட்டமான விமர்சனங்களை அண்ணாமலை முன் வைக்கிறார். திமுக அமைச்சர்களை கேள்வி கேட்டு குடைகிறார். ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குளேயே திமுக அரசு மீது ஊழல் புகார்களைக் கூறும் அளவுக்கு ஆதாரங்கள் இருப்பதாக திமுகவை மிரட்டி வருகிறது பாஜக. இன்னொரு பக்கம், திமுக இந்து விரோத அரசு என்பதை நிறுவவும் பாஜக தவறவில்லை. அதற்கான வாய்ப்புகள் அமையும்போது அதையும் ஊதிப் பெரிதாக்கி பேசுபொருளாக்கி விடுகிறது.

கடந்த 50 ஆண்டுகளாக திமுக Vs அதிமுக என்பதுதான் தமிழக அரசியலின் களம். ஆனால், அதை திமுக Vs பாஜக என்று ஆக்க வேண்டும் என்ற பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறது பாஜக. அதன் ஒரு பகுதியாக ஆளுங்கட்சியான திமுகவுக்கு எதிராக தொடர்ச்சியாக பாஜகவினரின் விமர்சனங்கள், போராட்டங்கள், அணுகுமுறைகள் அமைந்துள்ளன. இதுபோன்ற தோற்றங்கள்தான் சமூக வளைத்தளங்களிலும் காட்சி ஊடக விவாதங்களிலும் உண்மையான எதிர்க்கட்சி அதிமுகவா அல்லது பாஜகவா என்று பேசும் அளவுக்கு போயிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் சென்னையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி (ஐ.டி. விங்) நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாமில் அதிமுக மூத்தத் தலைவர் பொன்னையன் வெளிப்படுத்திய ஆதங்க வார்த்தைகள்.

சைலண்ட் மோடில் அதிமுக

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக நிர்வாகிகள் பலர், “தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மீதுதான் ஃபோகஸ் இருக்க வேண்டும். ஆனால், பாஜகதான் எப்போதும் லைம் லைட்டில் இருக்கிறது. திமுகவினரும் பாஜகவோடுதான் கருத்து மோதல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால், அதிமுக எதிர்க்கட்சியாக இருப்பது போலவே தெரியவில்லை” என்று புலம்பித் தீர்த்திருக்கிறார்கள். இந்தப் புலம்பல்களுக்கெல்லாம் பதிலாகத்தான், “தமிழ்நாட்டில் நாம்தான் எதிர்க்கட்சி. ஆனால், பாஜக தன்னை எதிர்க்கட்சி போல முன்னிறுத்த பார்க்கிறது. அதை முறியடிக்க வேண்டும். இதேபோல நீட் தேர்வு, காவிரி, முல்லை பெரியாறு விவகாரங்களில் தமிழக நலன்களுக்கு எதிராக செயல்படும் பாஜகவை சமூக வலைதளங்களில் அம்பலப்படுத்துங்கள். இதற்கு அதிமுக ஐ.டி. விங் இணையத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும்.” என்ற அட்வைஸை வழங்கினார் பொன்னையன். அந்தப் பேச்சுதான் ஊடகத்தில் வெளியாகி, அதிமுக - பாஜக கூட்டணிக்குள் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

பொன்னையனின் இந்தப் பேச்சுக்குப் பிறகு அண்ணாமலை தொடங்கி எச். ராஜா, கரு. நாகராஜன், நாராயணன் திருப்பதி, வி.பி. துரைசாமி என எல்லோரும் பொன்னையனை வசைப்பாடிவிட்டார்கள். வி.பி.துரைசாமி எக்ஸ்ட்ராவே ஒருபடி மேலே போய், “அதிமுகவினருக்கு ரெய்டு பயம் அதனால் வாய் திறக்காமல் இருக்கிறார்கள். எங்களுக்கு அப்படியான எந்தப் பயமும் இல்லை” என்று அதிமுகவை அதிரடியாகத் தாக்கினார். கடந்த காலத்தில் அதிமுக தோல்விக்கு பாஜகதான் காரணம் என்று சி.வி.சண்முகம் பேசியபோதும், பாஜக இப்படித்தான் பதிலடி கொடுத்தது. ஆனால், இதுபோன்று அதிமுக தலைவர்கள் மீதான பாஜகவின் விமர்சனங்களுக்கு பதில் சொல்லக்கூட அதிமுக தலைமை இன்னமும் தயாராக இல்லை.

கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொன்னையன் பேசிய பேச்சை, “அது அவருடைய சொந்தக் கருத்து. அவருடைய கருத்துக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை” என்கிறார் ஓபிஎஸ். எடப்பாடி பழனிசாமியோ, வி.பி.துரைசாமிக்கு மட்டும் பதில் சொல்கிறார். “வி.பி. துரைசாமி எந்தக் கட்சியில் (திமுக) இருந்து எந்த கட்சிக்கு (பாஜக) சென்றிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் எங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.” என்பதோடு ஈபிஎஸ் முடித்துவிட்டார்.

பிரதிபலித்த பொன்னையன்

ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் வெளிப்படையாக எதுவும் பேசாவிட்டாலும், தமிழக பாஜகவின் செயல்பாடுகள் குறித்து அதிமுக கட்சித் தலைவர்கள் அடிக்கடி விவாதம் நடத்தி வருவதாக அதிமுகவில் பேசப்படுகிறது. இது குறித்து உண்மையில் அதிமுக என்ன நினைக்கிறது? அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம்.

“பொதுவெளியில் ஓபிஎஸ் -ஈபிஎஸ் பொத்தாம் பொதுவாக பேசினாலும், இருவருக்கும் நிறைய வருத்தம் இருக்கிறது. அதிமுகவைத் தாண்டி தமிழகத்தில் பாஜக வளரப் பார்க்கிறது. எல்லா கட்சியுமே வளரத்தான் நினைக்கும். அது தவறில்லை. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கும்போது கூட்டணியில் இருந்துகொண்டே தங்களைப் பாஜக எதிர்க்கட்சி போல முன்னிறுத்துவது தவறில்லையா? திமுக கூட்டணியில் இப்படி ஏதாவது ஒரு கட்சி செயல்பட முடியுமா? உடனே வெளியே தள்ளிவிடுவார்கள். அதிமுக பலமாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் வளர பாஜக தீவிரம் காட்டுகிறது. இதெல்லாம் ஓபிஎஸ் - ஈபிஎஸ்ஸுக்கு தெரியாதது அல்ல.

தமிழகத்தில் 25 எம்பி-க்களைப் பெறுவோம் என்று அண்ணாமலை அடிக்கடி கூறுகிறார். அதிமுக கூட்டணியில் போட்டியிட்டுத்தான் பாஜக 4 எம்எல்ஏ-க்களைப் பெற்றது. பிறகு எப்படி 25 எம்பி-க்களைப் பெற முடியும்? இதெல்லாம் ஓபிஎஸ் - ஈபிஎஸ்ஸுக்கு தெரியாதது அல்ல. பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித்ஷாவுக்காக அமைதி காக்கிறார்கள்” என்று சொல்லும் அதிமுக வட்டாரங்கள், “உண்மையில் அதிமுக தலைமையின் எண்ணத்தைத்தான் பொன்னையன் அந்தக் கூட்டத்தில் பிரதிப்பலித்தார். நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்திலேயே பொன்னையன் பேசினார் என்றால், கட்சித் தலைவர்கள் அதைப் பற்றி விவாதிக்காமலா இருக்கப் போகிறார்கள்?” என்கின்றன.

உணருமா அதிமுக தலைமை?

பாஜகவை பொறுத்தவரை மோடி - அமித்ஷா காலத்துக்குப் பிறகு பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை காலி செய்தோ அல்லது ஒரு மாநிலத்தில் உள்ள பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்தோ, அந்தக் கட்சியைத் தாண்டி பெரிய கட்சியாக வளர்ந்திருக்கிறது. இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அதிமுகவுக்கும் அதுபோன்ற ஒரு நிலை ஏற்படும் என்று பலரும் அக்கட்சியை எச்சரித்து வரவே செய்கிறார்கள். அதன் நீட்சியாக அதிமுகவைத் தாண்டி பாஜகவும், அண்ணாமலையும் திமுக அரசுக்கு எதிராக செயல்படும் விதம் அதிமுக தொண்டர்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அவர்களின் சமூக வலைதளப் பதிவுகளே இதை அப்பட்டமாக உணர்த்துகின்றன.

2006-11 காலக்கட்டத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக ஜெயலலிதா போராட்டக் களத்தில் இறங்காவிட்டாலும் நாள்தோறும் போராட்டங்களை அறிவித்து கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் பம்பரமாகச் சுழல வைத்தார். சட்டப்பேரவைக்கு தொடர்ந்து வராவிட்டாலும், வரும் நாளில் திமுக அரசை அதிர வைக்கும் அளவுக்கு அரசியல் களத்தை சூடேற்றினார்.

எப்போதும் போர்க்குணமிக்க தலைவர்களைத்தான் தொண்டர்கள் விரும்புவார்கள், ஆதர்ஷமாக நினைப்பார்கள். அதை அதிமுக தலைமை உணர வேண்டும். பாஜக வளர்கிறது என்று அதிமுக தொண்டர்கள் போல கட்சித் தலைவர்களும் நினைத்தால் ஆபத்து அதிமுகவுக்குத்தான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in