அண்டை தேசத்தில் அண்ணாமலை: என்ன சொல்கிறது இலங்கைப் பயணம்?

அண்ணாமலை
அண்ணாமலை

மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர். அதுவும் அந்தப் பொறுப்புக்கு வந்தே சில மாதங்கள்தான் ஆகின்றன. அப்படியான ஒருவரின் அண்டை நாட்டுப் பயணம் பெரும் கவனத்துக்குள்ளாகுமா? ஆகும் என்று காட்டியிருக்கிறார் அண்ணாமலை.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து திரும்பியிருக்கும் அண்ணாமலையால், தமிழக அரசியல் களத்தில் அதிர்வுகள் ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அது அரசியல் மாற்றத்துக்கு வழிவகுக்குமா?

முந்திக்கொண்ட பாஜக

இலங்கையில் வசிக்கும் மலையகத் தமிழர்களின் முக்கிய அரசியல் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில், அந்நாட்டுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அண்ணாமலை. இந்தப் பயணம் குறித்த முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென அவர் இலங்கைக்குச் சென்றது தமிழகத்தில் பேசுபொருளாகியது.

இலங்கை மக்களுக்கு உதவிகளை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்குக் கடிதமாகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய சமயத்தில், அண்ணாமலை இலங்கைக்குச் சென்றது நிச்சயம் தற்செயலானதல்ல. இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு மார்ச் மாத இறுதியிலேயே மத்திய அரசிடம் கோரியிருந்தது. அதற்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்திக்கொண்டே வந்த மத்திய அரசு அண்ணாமலை மூலம் சாதுர்யமாகக் காய் நகர்த்தியது.

யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்துடன் அண்ணாமலை
யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்துடன் அண்ணாமலை

இலங்கை நெருக்கடி விஷயத்தில் திமுக அரசு தேவையில்லாமல் அரசியல் செய்வதாக பாஜகவினர் கூறிவந்த சூழலில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் அரசியல் ரீதியாக ‘செக்’ வைக்கவே அண்ணாமலையின் இலங்கைப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாகப் பேசப்படுகிறது. மேலும், இது இலங்கைப் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான பயணம் மட்டுமல்ல!

நன்கு திட்டமிடப்பட்ட பயணம்

அண்ணாமலையின் இலங்கைப் பயணத்துக்கான ஏற்பாடுகள் முன்பே தொடங்கிவிட்டன. அவர் ஒய் பிரிவு பாதுகாப்பின்கீழ் இருப்பவர் என்பதால் மத்திய உள் துறை அமைச்சகம் இலங்கை அரசுடன் இது தொடர்பாகப் பேசி ஏற்பாடுகளைச் செய்ததாக பாஜக ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். மோடியின் நேரடி உத்தரவின் கீழ்தான் அவர் இலங்கைக்குச் சென்றதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸே வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை என அரசின் முக்கியத் துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகளின் அறிவுறுத்தல்கள் வழிகாட்டுதல்கள் என ஏகப்பட்ட விஷயங்கள் அண்ணாமலையின் இலங்கைப் பயணத்தின் பின்னணியில் இருந்தன. என்னென்ன பேச வேண்டும், யாரைச் சந்திக்க வேண்டும் என்றெல்லாம் விரிவாகத் திட்டமிட்டே பயணம் ஏற்பாடானது.

அண்ணாமலையுடன் இலங்கைக்குச் சென்றவர்கள், அவரது பயண விவரம் குறித்து அறிந்தவர்கள் என எல்லோரும் இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். மலையகத் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் இரு தரப்பினரையும் கவரும் வகையில் அவரது பேச்சுகள் அமைந்திருக்கின்றன. மலையக அரசியல் தமிழர் தலைவர்கள், தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள் என இரு தரப்பினரையும் அவர் சந்தித்துப் பேசியிருப்பது முக்கியமானது. சீதா தேவி கோயில், யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் எனப் பல ஆன்மிகத் தலங்களுக்கும் சென்றிருந்த அண்ணாமலை இந்துத்துவ சித்தாந்த அடிப்படையிலான அரசியலையும் இலங்கையில் முன்னெடுத்திருக்கிறார்.

அரசியல் கணக்கு

கூடவே, 1970-களில் கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட நிகழ்வு, 2009 முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவம் ஆகியவற்றில் காங்கிரஸ் மற்றும் திமுகவின் பங்கைச் சுட்டிக்காட்டியிருப்பதன் மூலம் அக்கட்சிகளுக்கு அண்ணாமலை நெருக்கடி தந்திருக்கிறார்.

மலையகத் தமிழர்களுக்கு இந்திய அரசு கட்டிக்கொடுத்த வீடுகளைப் பார்வையிட்ட அண்ணாமலை, அங்கு மலையகத் தமிழர் தலைவர்களின் படங்களுடன் பிரதமர் மோடியின் படமும் இருப்பதைப் பெருமிதத்துடன் பதிவுசெய்திருக்கிறார். இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மே தின நிகழ்ச்சியில் பேசும்போது சஞ்சீவி மலையை அனுமார் சுமந்தது போல் இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சுமக்க பிரதமர் மோடி தயாராக இருப்பதாகக் கூறினார். ராமர் பாலத்தைக் கட்ட உதவிய அணில்கள் போல இலங்கைக்கு உதவ தான் ஒரு அணிலாக இருக்க விரும்புதாகவும் உருகினார். யாழ்ப்பாணம் கலாச்சார மையம், சர்வதேச விமான நிலைய நிலையம் போன்றவற்றை உருவாக்கியதிலும் அதற்குப் பெரும் தொகையை நிதியாக வழங்கியதிலும் மோடி அரசின் பங்களிப்பை பெருமிதத்துடன் எடுத்துரைத்தார்.

இதில் சர்வதேச விவகாரங்களும் அடங்கியிருக்கின்றன. உதவி கோரி பன்னாட்டு நாணய நிதியத்தை இலங்கை அரசு அணுகியது சீனாவைக் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது. கூடவே, கடனுதவி வழங்குவதற்குப் பன்னாட்டு நாணய நிதியம் விதித்திருக்கும் நிபந்தனைகள் இலங்கையைக் கூடுதல் நெருக்கடியில் தள்ளியிருக்கின்றன. குறிப்பாக, வாட் வரியை உயர்த்த வேண்டும் எனும் நிபந்தனையைப் பன்னாட்டு நாணய நிதியம் வைத்திருப்பதால் இலங்கை திணறிவருகிறது. இதனால் இந்தியாவைச் சார்ந்திருப்பது தவிர்க்க முடியாததாகிறது.

இதைப் பயன்படுத்தி இந்தியா காரியம் சாதித்துக்கொள்ள முடியும் என்றே பாஜகவினர் கருதுகிறார்கள். கச்சத் தீவு விவகாரம், இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, சிறைப்பிடிக்கப்படுவது எனத் தொடரும் அட்டூழியங்களுக்கு அண்ணாமலையின் பயணம் முடிவு கட்டுமா எனும் எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. இலங்கைச் சிறைகளில் இருக்கும் தமிழக மீனவர்களையும் அவர் சந்தித்துப் பேசியிருக்கிறார். பலாலி விமானத் தளத்தை மிக விரைவில் திறக்க வேண்டும், தென்னிந்தியாவிற்கும் வட இலங்கைக்கும் இடையில் படகு சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் எனும் கோரிக்கையைத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வைக்கும் அளவுக்கு அண்ணாமலைக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.

முரண்கள்

தமிழர்களுக்கு நில உரிமையைப் பெற்றுக்கொடுக்க இந்தியாவின் உதவி அவசியம் என்றும் அதற்கான உறவுப் பாலமாக அண்ணாமலை இருப்பார் என்று கூறியிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டைமான், ராஜபக்ச அரசுடனான உறவை முறித்துக்கொண்டுவிட்டதாக அறிவித்திருக்கிறார். 15 ஆண்டுகாலம் கூட்டணியில் இருந்த அக்கட்சி இம்முடிவை எடுத்திருக்கிறது. ஆக, இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சியின் அழைப்பின் பேரில் சென்ற அண்ணாமலை, அங்கு ராஜதந்திர ரீதியிலான அணுகுமுறையில் சிக்கலை ஏற்படுத்துகிறாரா எனும் கேள்வியும் எழுகிறது.

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்துக்குச் செல்ல தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்குகிறது. ஆனால், அங்கு செல்ல விசா வழங்க வேண்டும் என்று இலங்கை அரசைக் கேட்டுக்கொள்வதாக அண்ணாமலை கூறியிருப்பது ஏன் எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது. விசா என வந்துவிட்டால் அது இன்னொரு நாட்டின் பகுதி என்பது உறுதியாகிவிடுமே என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

கச்சத்தீவை மீட்பது, இலங்கைத் தமிழர் விவகாரம், இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் என ஏராளமான பிரச்சினைகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. இதில் வெறுமனே அடையாள அரசியல் மட்டும் செய்வது பாஜகவுக்கு அனுகூலம் தருமா என்பது இன்னொரு கேள்வி.

தமிழக அரசுக்குப் பாராட்டு

பழைய வலிகளையெல்லாம் கடந்து இனம், மொழி என எல்லாவற்றையும் துறந்து ஒன்றிணைந்து அரசுக்கு எதிராகப் போராடிவருகிறார்கள் இலங்கை மக்கள். ஆரம்பத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு உதவிகளை அனுப்ப விரும்புவதாகச் சொன்ன தமிழக முதல்வர் இலங்கை மக்களுக்கு உதவ விரும்புவதாகச் சொன்னதற்கு, மலையகத் தமிழர் சார்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியும், ஈழத் தமிழர் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முன்வைத்த கோரிக்கையே காரணம்.

மத்திய அரசின் அனுமதியுடன் தமிழக அரசின் உதவிகள் இலங்கையைச் சென்றடைந்துவரும் வேளையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் முற்போக்குக் கூட்டணி எம்பி-யான மனோ கணேசன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்ததுடன், ‘சமூக நீதிக் காவலன்’ என்றும் புகழ்ந்திருக்கிறார். மலையகத் தமிழர்கள் இலங்கைக்குச் சென்ற 200-வது ஆண்டுக் கொண்டாட்டங்கள் 2023-ல் நடக்கவிருக்கும் நிலையில் அதில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இது திமுகவுக்கு ஓரளவு திருப்தியளித்திருக்கிறது.

பொதுவாகவே அண்ணாமலை குறித்த தகவல்களுக்கு திமுக முக்கியத்துவம் அளிக்காது. அவர் அளிக்கும் புகார்களுக்கு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியே பதிலளித்துவிடுவார். தற்போது அண்ணாமலையின் இலங்கைப் பயணம் குறித்தோ அங்கு அவர் பேசிய வார்த்தைகள் குறித்தோ திமுக தரப்பில் எந்த எதிர்வினையும் இல்லை. மவுனமாக இருந்தாலும் மனதுக்குள் யோசனைகள் ஓடத்தானே செய்யும்?

பெட்டிச் செய்தி

இனி தமிழகத்தில் இலங்கைத் தமிழர் அரசியல் எடுபடாது!’

செந்தில் தொண்டைமான் திட்டவட்டம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை இலங்கைக்கு அழைத்த தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவர் செந்தில் தொண்டைமானிடம் ‘காமதேனு’ மின்னிதழ் சார்பில் பேசினோம். அவரது பேட்டி:

அண்ணாமலையை இலங்கைக்கு அழைத்த நோக்கம் என்ன? அவரது வருகையால் மலையகத் தமிழர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும்?

என்னதான் வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள், சமூக சேவை நிறுவனங்கள், அறக்கட்டளைகள் போன்றவை இருந்தாலும் இந்திய அரசு எங்களுக்கு உதவும் அளவுக்கு வேறு யாராலும் உதவ முடியாது. ஏனெனில் இந்திய அரசுதான் சட்டபூர்வமான அமைப்பு. தவிர, இந்தியா இலங்கையின் நெருங்கிய அண்டை நாடு. நாங்களெல்லாம் இந்தியாவிலிருந்து வந்த தமிழர்கள். 15 லட்சம் இந்தியத் தமிழர்கள் இங்கு வாழ்கிறார்கள். இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின் தமிழகப் பொறுப்பு அண்ணாமலையிடம் இருக்கிறது. எனவே எங்கள் பிரச்சினைகளை அவரிடம் சொல்ல விரும்பினோம். இலங்கை வந்த அண்ணாமலையிடம் அவற்றை எடுத்துரைத்தோம். அவற்றை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக அவர் உறுதியளித்திருக்கிறார். அதிகபட்ச உதவிகளைச் செய்வதாகவும் கூறியிருக்கிறார்.

செந்தில் தொண்டைமான்
செந்தில் தொண்டைமான்

அண்ணாமலை குறிப்பாக அளித்த உறுதிமொழி என்ன?

பொதுவாக இலங்கைப் பொருளாதாரப் பிரச்சினையில் உதவுவது குறித்த பல்வேறு வாக்குறுதிகளை அவர் அளித்தார். இந்திய வம்சாவளித் தமிழர்களில் கடைசி நபர் இருக்கும் வரை வீடு கட்டும் பணிகள் தொடரும் எனப் பிரதமர் மோடி உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டார். “இது அண்டை நாட்டின் பிரச்சினை அல்ல; என்னுடைய சொந்தப் பிரச்சினை” என மோடி சொன்னதாகவும் அண்ணாமலை எங்களிடம் கூறினார்.

இலங்கை மக்களுக்கு உதவ தமிழக அரசு முன்வந்திருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தமிழக முதல்வரின் முன்னெடுப்பு வரவேற்கத்தக்க விஷயம். முந்தைய காலங்களைவிட இப்போது இலங்கை மக்களுக்கு அதிகமாக உதவுகிறது தமிழக அரசு. இலங்கை மக்கள் அனைவருக்கும் உதவ முன்வந்த மு.க.ஸ்டாலினின் நல்லெண்ணத்தை இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பினரும் பாராட்டுகிறார்கள்.

இந்த நெருக்கடியான சூழலில், இலங்கையில் இன ரீதியாக நிலவிய வேறுபாடுகள் காணாமல்போய்விட்டதாகப் பேசப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

இதில் நான் வெளிப்படையாகவே பேச விரும்புகிறேன். இந்த வேறுபாடுகளை உருவாக்கியதே வட கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள்தான். சிங்கள மக்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஒற்றுமையற்ற சூழல் உருவானது. சிங்கள மக்களை அதிகமாகக் குடியேற்றுகிறார்கள் எனும் புகார்களைத் தமிழகத்திடம் கொண்டுவந்தது அங்குள்ள தமிழ் அமைப்புகள்தான். அவர்களே தற்போது இங்குள்ள இன பேதங்கள் காணாமல் போய்விட்டதாகச் சொல்கிறார்கள் என்றால், இனிமேல் சிங்களவர்கள் பற்றி அவர்கள் புகார் சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன். அதை வைத்துத்தானே தமிழகத்தில் அத்தனைப் போராட்டங்கள் நடந்தன?! சிங்களவர்கள் எங்களை ஒதுக்குகிறார்கள், கொடுமைப்படுத்துகிறார்கள், எங்களால் அவர்களுடன் வாழ முடியாது என்று அவர்கள்தான் இந்திய அரசிடம் கூறினர். இன்றைக்கு அவர்களே எங்களுக்குள் பேதமில்லை; பிரித்துப் பார்க்காதீர்கள் என்கிறார்கள். எனில், இனி இலங்கை பிரச்சினை தமிழக அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தாது அல்லவா!

மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையில் இணக்கமான சூழல் உருவாகவில்லையா?

இதுவரை எங்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கிறோம்.

அண்ணாமலையின் பயணத்தின் மூலம் இலங்கையில் பாஜக அரசியல் ரீதியாக வலுப்பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

அப்படிச் செய்யக்கூடிய வாய்ப்பு இல்லை. ஏனெனில், இது வேறு ஒரு நாடு. இன்னொரு நாட்டுக்குள் சென்று அரசியல் முடியாது அல்லவா! இந்தியா அரசில் அங்கம் வகிக்கும் கட்சி என்பதால் அவர்களால் எங்களுக்கு ஆதரவு மட்டுமே அளிக்க முடியும். அதைத் தாண்டி அவர்கள் எதுவும் செய்ய வாய்ப்பு இல்லை. இந்திய அரசியல் கட்சி எப்படி இலங்கையில் கட்சி தொடங்க முடியும்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in