ஆட்டம் காட்டும் ஈபிஎஸ்... அவ்வளவுதானா ஓபிஎஸ்!

ஜூலை 11 பொதுக்குழுவில் என்ன நடக்கும்?
ஆட்டம் காட்டும் ஈபிஎஸ்... அவ்வளவுதானா ஓபிஎஸ்!

அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரம்தான் தமிழகத்தில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக ஹாட் டாபிக். அதிமுகவின் பொதுக்குழு ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அணிதிரள, இரட்டைத் தலைமையைத் தொடர்ந்து வலியுறுத்திய ஓ.பன்னீர்செல்வம் தனிமைப்படுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே சசிகலா, டிடிவி தினகரனை சாதுர்யமாக ஓரங்கட்டிய ஈபிஎஸ், அந்த வழியில் ஓபிஎஸ்சையும் மூலையில் உட்காரவைத்துவிடுவாரோ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

2017-ல் சசிகலாவையும் தினகரனையும் தந்திரமாக ஓரங்கட்டிய பிறகு, கட்சிக்கு நான் ஆட்சிக்கு நீ என ஓபிஎஸ்சும் ஈபிஎஸ்சும் பாகம் பிரித்துக் கொண்டார்கள். கட்சியில் இருவருக்கும் சம அதிகாரம் என பொதுக்குழுவில் வைத்து கட்சி விதிகளில் திருத்தமும் செய்துகொண்டனர். ஆனாலும், இருவரும் தாமரை இலை தண்ணீராகவே ஒட்டாமல் கடந்த நான்கு ஆண்டுகளை கடந்தனர். முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் என்று ஈபிஎஸ் தான் நினைத்தை எல்லாம் சாதித்துக் கொண்டதால் மனப் புழுக்கத்தில் இருந்தார் ஓபிஎஸ். அதெல்லாம் ஒட்டுமொத்த ஈகோ யுத்தமாகவே மாறியதால் இப்போது இன்னொரு பூகம்பத்தைச் சந்தித்திருக்கிறது அதிமுக.

ஒற்றைத் தலைமை விவகாரத்தை ஈபிஎஸ் ஆதரவாளர்கள் உயர்த்திப் பிடித்ததைப் பார்த்து கொஞ்சம் பதறித்தான் போனார் ஓபிஎஸ். ஏனெனில், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஈபிஎஸ்சை முந்தமுடியாது என்பது அவருக்குத் தெரியும். அதனால், இரட்டைத் தலைமையே இருக்கட்டுமே என சொல்லிப் பார்த்தார். ஆனால், கேட்பதற்கு யாரும் தயாராய் இல்லை. விளைவு, தனது அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு நிராயுதபாணியாய் நிற்கிறார் ஓபிஎஸ்.

மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தனக்கு ஆதரவாக இருந்த போதும் ஓபிஎஸ்சை சமாதானப்படுத்தி அவைத் தலைவர் பதவியைத் தர ஈபிஎஸ் முயற்சித்தார். தம்பிதுரை, செங்கோட்டையன் உள்ளிட்டோர் ஓபிஎஸ்சிடம் இதை நேரிலேயே சென்று வலியுறுத்தினார்கள். அதை ஏற்க மறுத்த ஓபிஎஸ், “2017-ல் இரட்டைத் தலைமையை உருவாக்கியதே ஈபிஎஸ்தானே. பொதுச்செயலாளருக்கு இணையாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரங்கள் என்று பொதுக்குழுவில் விதிகளை திருத்த தீர்மானம் கொண்டு வந்ததும் அவர் தானே. ஆறு மாதங்களுக்கு முன்பு தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நிரப்பப்பட்ட பிறகு, இப்போது ஒற்றைத் தலைமை வேண்டும் என்று ஏன் கேட்கிறார்?” என்று தூதுவந்தவர்களிடம் வெடித்தார் ஓபிஎஸ்.

எனினும் எதார்த்த நிலையை எடுத்துச் சொன்ன தம்பிதுரையும் செங்கோட்டையனும், “நீங்க தான் கொஞ்சம் விட்டுக்குடுத்துப் போகணும்ணே” என்றார்கள். இதைக்கேட்டு இன்னும் சூடான ஓபிஎஸ், “இன்னும் எதையெல்லாம் நான் விட்டுத்தருவது? திரும்பத் திரும்ப என்னால் விட்டுத் தர முடியாது. இதையும் விட்டுக்கொடுத்தால், எனது அரசியல் வாழ்க்கையே முடிந்துவிடும். எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லி அவர்களை வழியனுப்பி இருக்கிறார்.

சமாதான முயற்சிகள் தோல்வியடைந்ததால், பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை தனித் தீர்மானமாக நிறைவேற்ற ஈபிஎஸ் தரப்பு முடிவு செய்தது. ஆனால், அதை நிறைவேற்றக் கூடாது என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருந்தார். இது தொடர்பாக தன்னுடைய ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களைச் சென்னைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார். அதன் ஒரு பகுதியாகத்தான் ஓபிஎஸ் ஆதரவாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது நடந்தது. அதோடு அதிமுக பொதுக்குழு நடந்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல் நிலையத்தில் மனு, பொதுக்குழு உறுப்பினர்களுக்குக் கடிதம் என்று ஓபிஎஸ் என்னென்னவோ முயற்சிகள் செய்தார்; எதுவும் கைகூடவில்லை.

இறுதி முயற்சியாக பொதுக்குழு கூடுவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்பாக நள்ளிரவில் மேல்முறையீட்டு வழக்கையும் தாக்கல் செய்தது ஓபிஎஸ் தரப்பு. அந்த வழக்கில், ‘பொதுக்குழுவில் 23 தீர்மானங்களைத் தவிர்த்து வேறு எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றக் கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புதான் ஓபிஎஸ்சுக்கு ஒரே ஆறுதலாக அமைந்தது.

அந்தத் தெம்பில்தான் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தார் ஓபிஎஸ். நீதிமன்ற உத்தரவுப்படி, ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது என்பதால், திடமாக வந்த ஓபிஎஸ்சுக்கு பொதுக்குழுவில் அதிர்ச்சிதான் காத்திருந்தது. பத்து நாட்களுக்கு முன்புவரை அவரை எழுந்து நின்று வரவேற்ற நிர்வாகிகள் எல்லாம் பொதுக்குழு மண்டபத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இதற்கு மாறாக, பிரம்மாண்ட வரவேற்புகளுக்கு மத்தியில் ராஜமரியாதையுடன் மேடைக்கு அழைத்துவரப்பட்டார் ஈபிஎஸ். அப்போது தனக்கு எதிராக ஈபிஎஸ் ஆதரவாளர்கள் எழுப்பிய கோஷத்தால் இன்னும் அதிர்ந்து போனார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ்சும் ஈபிஎஸ்சும் மேடையில் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக்கொள்ளாமல் இறுக்கமாகவே அமர்ந்திருந்தனர். உட்கட்சி விவகாரத்தை கோர்ட்டுக்கு எடுத்துச் சென்றதால் கட்சி நிர்வாகிகள் பலரும் ஓபிஎஸ் மீது காட்டத்தில் இருந்தனர். இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், ஈபிஎஸ் அணியின் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’காக 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக மாஜி அமைச்சர்கள் கே.பி.முனுசாமியும் சி.வி.சண்முகமும் அதிரடியாக அறிவித்தனர். மேலும், ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜூலை 11 அன்று மீண்டும் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும் என்றும் நிரந்தர அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மூலம் ஈபிஎஸ் தரப்பு சொல்ல வைத்தது.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க முடியாமல் பொதுக்குழுவிலிருந்து வெளிநடப்பு செய்த ஓபிஎஸ், மேடையில் ஏதோ பேச முயன்றார். அப்போது அவருடைய மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அரங்கை விட்டு வெளியேறிபோது ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தண்ணீர் பாட்டில்களை ஓபிஎஸ் மீது எறிந்தனர். வெளியே அவருடைய பிரச்சார வாகனத்தின் டயரை பஞ்சர் செய்தும் சிலர் வஞ்சம் தீர்த்தார்கள்.

ஜூன் 23-ல் நடந்த பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவு, அந்தப் பொதுக்குழுவுக்கு மட்டுமே செல்லும் என்பதால், ஜூலை 11 அன்று கூட்டப்பட உள்ள பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் உள்பட புதிய தீர்மானங்களை நிறைவேற்ற ஆயத்தமாகி வருகிறது ஈபிஎஸ் தரப்பு. அதன்படி கட்சியின் அதிகாரமிக்க பொதுச்செயலாளர் பதவி அல்லது ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஈபிஎஸ் உட்காருவார் என்கிறார்கள் அதிமுகவில். அதற்கேற்ப இப்போதே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகிவிட்டதாகப் பேசி அதிர வைத்திருக்கிறார் சி.வி, சண்முகம். ஈபிஎஸ் ஒற்றைத் தலைமையாகிவிட்டால் ஏற்கெனவே பொருளாளராக இருக்கும் ஓபிஎஸ் அந்தப் பதவியில் நீடிப்பாரா, அதை ஈபிஎஸ் விரும்புவாரா என்பதெல்லாம் விவாதத்துக்குரியது.

என்றாலும் இனியும் அமைதியாக இருப்பதில் பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்ட ஓபிஎஸ், மீண்டும் பாஜக தலைமையின் ஆதரவைப் பெறும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். ஆனால், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையுமே சம தூரத்தில் வைத்திருக்கும் பாஜக தலைமை இம்முறை ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக மத்தியஸ்தம் செய்ய முன்வருவது சந்தேகம் என்கிறார்கள்.

இதற்கிடையே, ஜூலை 11-ல் நடைபெற உள்ள பொதுக்குழுவை சட்ட விரோதம் என அறிவித்து, அதற்கு தடை கேட்டு தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ் தரப்பு மனு செய்திருக்கிறது. இதன்மூலம் அதிமுக விவகாரத்தை மீண்டும் தேர்தல் ஆணையத்திடம் கொண்டு சென்றிருக்கிறார் ஓபிஎஸ். அவரது இந்த சட்ட நகர்வுகளை முறியடிக்க ஈபிஎஸ் தரப்பும் சி.வி. சண்முகம் தலைமையில் வழக்கறிஞர் அணியை தயார் செய்து வைத்திருக்கிறது.

ஓபிஎஸ் எடுக்கும் அடுத்தகட்ட முயற்சிகள் அவருக்குப் பலன் தருமா என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். “ஏற்கெனவே சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த 90 சதவீதம் பேர்தான் இப்போது ஈபிஎஸ் வசம் இருக்கிறார்கள். அது ஒன்றும் புதிதில்லை. முன்பு ஓபிஎஸ்சிடம் இருந்த மைத்ரேயன், மாஃபா பாண்டியராஜன், செம்மலை போன்றோர் இடம்மாறி இருப்பதால் ஈபிஎஸ் சற்று கூடுதல் பலம் பெற்றிருக்கிறார். இதனால் அவர் தான் தாக்குப் பிடிப்பார் என்பது ஈபிஎஸ் பக்கம் சாய்பவர்களின் கணக்காக இருக்கலாம். மெஜாரிட்டியும் ஈபிஎஸ்சுக்குத்தான் இருக்கிறது. ஆனால், அடிப்படைத் தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற வாதத்தைத்தான் ஓபிஎஸ் தரப்பு முன்னிறுத்தும். ஒற்றைத் தலைமை வந்தால் ஓபிஎஸ் ஜீரோ. அப்படி நடந்தால் கட்சியை உடைத்து, இரட்டை இலையை முடக்கவே ஓபிஎஸ் அணி விரும்பும். சமாஜ்வாதி கட்சியில் நடந்த பிளவில் அகிலேஷ் யாதவுக்கு வழங்கிய தீர்ப்பா, ஜெயலலிதா - திருநாவுக்கரசு வழக்கில் வழங்கிய தீர்ப்பா - இந்த இரண்டில் எதை தேர்தல் ஆணையம் சொல்லும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்றார் அவர்.

ஏற்கெனவே 2016-ல் சசிகலாவை பொதுச்செயலாளராக்கிய அதிமுக பொதுக்குழு, அவரை பதவியை விட்டு அனுப்பியும் வைத்திருக்கிறது. அதே பாணியைத்தான் தற்போதும் கையில் எடுத்து இரட்டைத் தலைமையை ஒழிக்க ஈபிஎஸ் தரப்பு காய்நகர்த்துகிறது. அதிமுக பொதுக்குழு மூலம் ஓபிஎஸ்சின் பலம் என்ன என்பதும் பட்டவர்த்தனமாகியிருக்கிறது. என்றாலும், முஷ்டியை தூக்கிப் பார்க்க நினைக்கிறார் ஓபிஎஸ். இருப்பினும் இந்த விவகாரத்தில் ஈபிஎஸ்சுடன் சமாதானமாகச் செல்லும்படி ஓபிஎஸ்சை பாஜக தலைமை அறிவுறுத்தும் வாய்ப்புகளும் இருக்கின்றன.

இதையெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஏற்கெனவே தனக்குப் பரிட்சயமான ‘விட்டுக்கொடுக்கும்’ ஃபார்முலாவுக்கு மீண்டும் திரும்புவதே இப்போது ஓபிஎஸ்சுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு. “பேச்சுவார்த்தைக்குத் தயார்” என்று ஓபிஎஸ் முகாமிலிருந்து வைத்திலிங்கம் சொல்லியிருப்பதுகூட அதற்கான ஒரு குறியீடுதான். ஆனால், குதிரை (ஈபிஎஸ்) கிளம்பிவிட்டது. லாயத்தை எப்படிப் பூட்டுவார்கள் என்பதுதான் கேள்வி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in