கைகூடாத சந்திப்பு... கவலையில் ஓபிஎஸ் - ஈபிஎஸ்!

அதிமுகவை அந்தரத்தில் சுற்றிவிடுகிறதா பாஜக?
கைகூடாத சந்திப்பு... கவலையில் ஓபிஎஸ் - ஈபிஎஸ்!

மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தனித்தனி ஆவர்த்தனம் நடத்தி வரும் சூழலிலும் போட்டிக்குக் குறைவில்லாமல் இருவரும் நடந்துவருகிறார்கள். தங்களின் இந்தச் சதுரங்க விளையாட்டுக்கு மத்தியில் பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் யார் ஆதர்சம் என்ற போட்டியிலும் இருவரும் சளைக்காமல் ஈடுபட்டு வருகிறார்கள். டெல்லியில் நடக்காத சந்திப்பை சென்னையில் நடத்திக் காட்ட வேண்டும் என்று ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரு தரப்புமே முட்டி மோத, இருவரையுமே கண்டுக்கொள்ளாமல் டீலில் விட்டுச் சென்றிருக்கிறார் பிரதமர் மோடி. ஓபிஎஸ் - ஈபிஎஸ்சின் பாஜக பாசமும், இருவருரையுமே பாஜக கண்டுக்கொள்ளாத நகர்வும் உணர்த்துவது என்ன?

பதறும் ஈபிஎஸ் முகாம்

கடந்த 2017-ல் தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக இருந்தது பாஜக. அதனால்தான், பாஜக விரும்பாத சசிகலாவை உதறித்தள்ளிவிட்டு பாஜகவின் கரிசனப் பார்வையை ஈபிஎஸ்சும் எதிர்பார்த்தார். அது பாஜகவுக்கு பிடித்துபோகவே, ஓபிஎஸ்சையும் ஈபிஎஸ்சையும் சேர்த்து வைத்தது. கடந்த ஜூலை 11-ல் பொதுக்குழு கூட்டம் மூலம் ஈபிஎஸ் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஆனதையும், கட்சியை விட்டு ஓபிஎஸ்சை விலக்கி வைத்ததையும் பாஜக ரசிக்குமா என்ற எண்ணம் அதிமுக முக்கிய தலைகளுக்கு உண்டு. அதனால்தான், பிரதமர் மோடியைச் சந்தித்து பேசுவதன் மூலம், ரூட் கிளியர் ஆகும் என்று ஈபிஎஸ் கணக்குப் போட்டார். ஆனால், ஓபிஎஸ்சும் அதே கணக்கை போட, இருவருமே பாஜகவின் பரிபூரண ஆசியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம்

தகித்துக்கொண்டிருந்தபோது குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு வேட்புமனுத்தாக்கல் செய்யும் நிகழ்வுக்கு சென்ற ஓபிஎஸ், பிரதமர் மோடியைத் தனியாகச் சந்திக்க கடும் பிரயத்தனம் செய்து பார்த்தார். ஆனால், அவருக்கு பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கித் தரவில்லை. இதனால், ஈபிஎஸ் தரப்பு தெம்பானது. ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஈபிஎஸ் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆன பிறகு, திடீரென நடக்கும் ரெய்டுகளால் ஈபிஎஸ் தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்து கிடைக்கிறது. ஈபிஎஸ்சுக்கு நெருக்கமான தொழிலபதிபர் செய்யாதுரை, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான சந்திரசேகர், தற்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஈபிஎஸ்சால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமாருக்கு நெருக்கமான அன்னை பாரத் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடியாக ரெய்டு நடத்தியது. இன்னொரு பக்கம் குட்கா வழக்கில் மாஜி அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐ அனுமதி கோரியது. இதெல்லாமும் ஈபிஎஸ் முகாமில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நடக்காத சந்திப்பு

அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்வுகளால், குறிப்பாக, ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்சுக்கு ஈபிஎஸ் நெருக்கடி கொடுத்த பிறகு இதெல்லாம் நடந்ததால், ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக பாஜக இருக்கிறதோ என்ற சந்தேகம் ஈபிஎஸ் தரப்புக்கு வந்ததாக அதிமுகவில் சொல்கிறார்கள். இதனையடுத்துதான் ராம்நாத் கோவிந்துக்கு நடக்கும் பிரிவு உபச்சார விழா, திரெளபதி முர்மு பதவியேற்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்க 5 நாட்கள் டெல்லியில் டேரா போட ஈபிஎஸ் முடிவு செய்தார். அப்போது பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து அவர்களுடைய ஆதரவை தங்களுக்குப் பெறவும், திடீர் ரெய்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஈபிஎஸ் தரப்பு காய் நகர்த்தியதாக சொல்கிறார்கள்.

ஆனால், ராம்நாத் கோவிந்த் பிரிவு உபச்சார விழாவில் பங்கேற்ற ஈபிஎஸ்சை அண்ணாமலையுடன் சேர்ந்து சில நிமிடங்கள் மட்டும் பிரதமர் மோடி சந்தித்தார். அவரை தனியாகச் சந்தித்து பேச ஈபிஎஸ் முயற்சி செய்து பார்த்தும் அப்பாயின்மென்ட் எதுவும் கிடைக்கவில்லை. அமித் ஷாவையாவது சந்திக்கலாம் என்று நினைத்த ஈபிஎஸ்சின் எண்ணமும் ஈடேறவில்லை. இதனால்தான், ஐந்து நாட்கள் டெல்லி பிளானோடு சென்றவர், இரண்டே நாளில் சென்னைக்குத் திரும்பினார்.

ஈபிஎஸ்ஸின் டெல்லி நகர்வுகளை கூர்மையாகக் கவனித்துக்கொண்டிருந்த ஓபிஎஸ், மோடியும் அமித்ஷாவும் ஈபிஎஸ்சை பெரிதாகக் கண்டுகொள்ளாததால் உற்சாகமடைந்தார். அதன்பிறகுதான் கட்சிக்கு இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து வேகம் காட்டத் தொடங்கினார் ஓபிஎஸ். ஈபிஎஸ் - ஓபிஎஸ் என இருவரின் அடுத்த திட்டமாக, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்காக சென்னை வரும் மோடியை எப்படியும் சந்திப்பது என்பதாகத்தான் இருந்தது. செஸ் ஒலிம்பியாட் விழா முடிந்த பிறகு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கிய மோடியை இரு தரப்பும் சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

ஒபிஎஸ் - ஈபிஎஸ்சின் பாஜக பாசம்

குறிப்பாக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற கட்சியின் லெட்டர் பேடில் தமிழகத்தின் சில கோரிக்கைகளை முன் வைத்து பிரதமரைச் சந்திக்கும்போது கட்சி தொடர்பாகவும் பேச ஈபிஎஸ் திட்டமிட்டிருந்ததாக அதிமுக வட்டாரங்களில் சொல்கிறார்கள். இதுதொடர்பாக பாஜக தலைவர்கள் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை மனதில் வைத்துதான் அன்று நள்ளிரவு வரை மீடியாக்கள் ராஜ்பவான் வாசலில் தவம் கிடந்தன. ஆனால், எதிர்பார்த்த சந்திப்பு எதுவும் நடக்கவில்லை. மாறாக, பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியின் மூத்த நிர்வாகிகள், பழைய ஜனசங்கத்தினர் ஆகியோரைத்தான் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

பிரதமர் சென்னைக்கு வந்தபோது விமான நிலையத்தில் ஈபிஎஸ் வரவேற்றதோடு தனியாகச் சந்திப்பு நிகழவில்லை. மீண்டும் குஜராத் சென்ற பிரதமரை வழியனுப்பும்போது பிரதமரை ஈபிஎஸ் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முதல் நாளே, பிரதமரை வழியனுப்பும் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் பங்கேற்பார் என்று செய்திகள் வெளியானது. இதனாலும் பிரதமரைத் தனியாகச் சந்திக்க தனக்கு அனுமதி கிடைக்காத மன வருத்தத்திலும் வழியனுப்பு நிகழ்வுக்கு ஈபிஎஸ் செல்லவில்லை என்கிறார்கள்.

எதிர்பார்த்தது போலவே பிரதமரை வழியனுப்ப வந்தார் ஓபிஎஸ் அப்போது அவரது உடல்நிலையைப் பற்றி மட்டுமே கேட்டுவிட்டு நகர்ந்துவிட்டார் மோடி. அதிமுகவில் களேபரங்களுக்கு மத்தியில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரு தரப்புமே பாஜகவின் ஆசியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. இரு தரப்புமே பாஜகவுடன் இணக்கமாக இருப்போம் என்பதையும் தனித்தனி சந்திப்புகள் மூலம் உணர்த்திவிட்டு சென்றிருக்கின்றன.

இரட்டையர்களை தவிர்க்கும் பாஜக

ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவருமே அதிமுக என்ற பேரியக்கத்தை பாஜகவின் நிழலில் நடத்தும் அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார்கள். ஆனால், பாஜக தலைமை தற்போது இரு தரப்பையும் சம தூரத்தில் வைத்திருப்பதையும் உணர முடிகிறது. இதுதொடர்பாக மூத்த அரசியல் செய்தியாளர் எஸ்.குமரேசனிடம் பேசினோம். “2017-ல் அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இணைப்பின் பின்னணியில் பாஜகதான் இருந்தது என்பதை இவர்கள் இருவருமே உணர்த்திவிட்டார்கள். குறிப்பாக, பிரதமர் மோடி சொல்லித்தான் துணை முதல்வரானேன் என்று ஓபிஎஸ் பேட்டியும் கொடுத்துவிட்டார். திரை மறைவில் நடக்கும் நிகழ்வுகளை பொதுவெளியில் போட்டு உடைக்கும்போது உயர்ந்த பதவியில் இருக்கும் மோடியோ, அமித்ஷாவோ அதை விரும்புவார்களா? ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு பிறகு இவர்களைத் தனியாகச் சந்திப்பதை பாஜக தலைமை தவிர்க்க இது ஒரு முக்கிய காரணம்.

அடுத்தது, பாஜகவின் அடுத்தகட்ட வளர்ச்சி தென்னிந்தியாதான் என்று அக்கட்சி பிரகடனப்படுத்தியிருக்கிறது. முன்பு போல அல்லாமல் தற்போது பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருவதாக அக்கட்சி தலைமை நம்புகிறது. தனித்து வெல்லும் அளவுக்குக் கட்சியைக் கட்டமைக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் திமுக Vs பாஜக என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றும் அக்கட்சி உழைத்து வருகிறது. தற்போது சென்னை வந்தபோது சுமார் இரண்டு மணி நேரம் தமிழக பாஜக தலைவர்களோடு ஆலோசனை நடத்தினார் மோடி. முழுக்க முழுக்க தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியைப் பற்றிதான் அப்போது பேசியிருக்கிறார்.

நிலைமை இப்படியிருக்க, அதிமுகவில் அணிகள் பிரிந்து அடித்துக்கொண்டால், அதைத் தங்களுக்கு சாதமகாகத்தான் பாஜக பார்க்கும். இவர்களை சமாதானப்படுத்தவா பாஜக முயற்சி செய்துக்கொண்டிருக்கும். தற்போது தேர்தல் எதுவும் இல்லை. 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்திலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் எம்பி-க்கள் வர வேண்டும் என்று எண்ணினால்தான் கூட்டணி பலமாக இருப்பதைப் பற்றி பாஜக சிந்திக்கும். மற்றப்படி பாஜக தன்னுடைய சுய வளர்ச்சியைப் பற்றிதான் நினைக்கும். இது ஓபிஎஸ் - ஈபிஎஸ்சுக்குப் புரியவில்லை.” என்றார் குமரேசன்.

பல மாநிலங்களில் கூட்டணி கட்சிகளைத் தாண்டி பாஜக பெரிய வளர்ச்சியைப் பெற்றுக் காட்டியிருக்கிறது. தமிழகத்திலும் அதுபோன்ற வளர்ச்சிக்காக பாஜக தலைமை காத்திருக்கிறது. ஆனால், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவருமே குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாக நடந்துகொள்வதால் அதிமுகவுக்கு என்ன பயன் என்பதுதான் கேள்வி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in