2024-ல் பாஜகவுக்கு எதிரான மாற்று அணி நிச்சயம் உருவாகும் ! - சீதாராம் யெச்சூரி

2024-ல் பாஜகவுக்கு எதிரான மாற்று அணி நிச்சயம் உருவாகும் ! - சீதாராம் யெச்சூரி
பொதுக்கூட்டத்தில் சீதாராம் யெச்சூரி பேசுகையில்...

``2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வலுவான மாற்று அணி நிச்சயம் உருவாகும். 2004-ல், எப்படி வாஜ்பாய் அரசு தூக்கியெறியப்பட்டதோ அப்படி மோடியின் அரசும் வீழ்த்தப்படும்'' என்று மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியிருக்கிறார்.

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு நடந்துகொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகில் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் திடலில் நேற்றிரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநாட்டில், கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசியதாவது:

தமிழ் மண்ணில் சமூக நீதி இயக்கம் வேரூன்றி இருக்கிறது. அத்தகைய விழுமியங்களை நாம் பாதுகாக்க வேண்டியுள்ளது. பாஜக அரசு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறது. அதனை காக்க வேண்டிய போராட்டத்தில் தமிழகமும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் முன்வரிசையில் நிற்கிறார்கள். சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்துப் பேசினேன். அப்போது பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் கூட்டம் நடத்துவற்கு முன்முயற்சி எடுக்க வேண்டும். தமிழகத்தில் நலன் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் நலன் அதில் அடங்கியிருக்கிறது. அத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பேசினோம்.

மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைவரும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர். இப்போராட்டங்கள் மத்திய அரசுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை தந்துகொண்டிருக்கின்றன. மக்களின் இந்த எதிர்ப்பு அலை எழுச்சியாக மாற வேண்டும். அந்த எழுச்சியானது 2024 பொதுத்தேர்தலில் பாஜகவை தனிமைப்படுத்தும் முயற்சியாக மாற வேண்டும். பாஜகவை ஆட்சியிலிருந்து தூக்கி எறிய வேண்டும்.

பாஜகவை வீழ்த்தும் மாற்று அணிக்கு யார் தலைமை தாங்குவது என்பது தற்போதைய பிரச்சினை இல்லை. 2004-ம் ஆண்டு தேர்தலில் இந்தியா ஒளிர்கிறது என்று பிரச்சாரம் செய்த வாஜ்பாய் அரசாங்கத்தை வீழ்த்த மாற்று அணிச் சேர்க்கை உருவானது. அதன் விளைவாக வாஜ்பாய் அரசாங்கம் தூக்கி எறியப்பட்டு மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 10 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது. அதேபோல், 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிரான மாற்று அணிச் சேர்க்கை நிச்சயம் உருவாகும். தேர்தலுக்கு முன்பு அல்ல, தேர்தலுக்கு பின்பும் மாற்று அணி சேர்க்கை உருவாகும். அப்போது மோடி படுதோல்வி அடைந்திருப்பார்.

தமிழகத்தில் எப்படி பாஜகவுக்கு எதிராக ஒரு வலுவான மாற்று அணி உருவானதோ, அதேபோல அகில இந்திய அளவில் 2024 தேர்தலுக்கு முன்பு அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஓரணியில் திரட்ட வேண்டும். அது தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான வலுவான மாற்று சக்தியாக நிச்சயம் உருவாகும். ஜனநாயக மதச்சார்பற்ற அணி உருவாகும். அந்த அணியை உருவாக்குவதில் தமிழக முதல்வருக்கு பங்கு இருக்கிறது. 2024 தேர்தலுக்கு முன்பு மாற்று அணி சேர்க்கையை மார்க்சிஸ்ட் கட்சியும் மேற்கொள்ளும். பாதுகாப்பான இந்தியாவை வருங்கால சந்ததியினருக்கு ஒப்படைக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டுக்கு மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் வரவேற்றார். முன்னதாக திரைப்பட நடிகர் ரோகிணி கலைநிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன், உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்பி ஆகியோர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாநிலக்குழு உறுப்பினர் ரா.விஜயராஜன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.