
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று வெளியான செய்திக்கு விஜய் மக்கள் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக திடீரென கூட்டணியை முறித்துக்கொண்டது. இது பாஜக மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அதன் கூட்டணி கட்சிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டணி முறிவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைதான் காரணம் என்று அதிமுக பகிரங்கமாக குற்றம்சாட்டியது. இந்த கூட்டணியை மீண்டும் சேர்க்க புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் இரண்டு கோடி தொண்டர்களின் விருப்பப்படியே பாஜக உடனான கூட்டணியை முறித்திருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். இருந்தாலும் பாஜகவுடன் கூட்டணி சேர்க்கும் முயற்சியை அதன் கூட்டணி கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளை தக்க வைத்துக்கொள்ள பாஜக காய் நகர்த்தி வருகிறது.
இந்தநிலையில், அடுத்த நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட நடிகர் விஜய் தனத மக்கள் இயக்கத்தை தயார் செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் அவர் பாஜகவுடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவல்களை விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், "இன்றைய தினமலர் நாளிதழில் நடிகர் விஜய் அவர்களது பெயரை இரண்டு அரசியல் கட்சிகளோடு அவ்வாறு தொடர்புபடுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ள செய்தி எள்ளளவும் அறமற்ற பொய்யான செய்தி.
நடிகர் விஜய் அவர்களது பெயரை உள்நோக்கத்தோடு அவரது அரசியல் நிலைப்பாடு என்று தொடர்புபடுத்தி துளியும் உண்மை இல்லாத தகவல்களை கொண்டு தினமலர் நாளிதழில் வெளியாகியுள்ள இந்த பொய்யான செய்திக்கு நடிகர் விஜய் அவர்கள் சார்பாக அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வந்தாச்சு... டிசம்பர் 3-ல் வாக்கு எண்ணிக்கை!
புதிய மதுக்கடைகள் திறக்கவேண்டும்... முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கும் எம்எல்ஏக்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு திடீரென வெளியேறிய பவா செல்லதுரை... புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னையில் சோகம்: பயிற்சியின் போது ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம்!