அம்மா உணவகத்தின் பெயர் நிலைக்க திமுக தொண்டர்களே காரணம்!

அம்மா உணவகத்தின் பெயர் நிலைக்க திமுக தொண்டர்களே காரணம்!

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில், அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படத்தோடு கருணாநிதியின் படத்தை வைக்கும் அளவுக்கு உடன்பிறப்புகள் குழம்பிப்போய்க்கிடக்கிறார்கள். அந்தப் படத்தை நீக்க கட்சி உத்தரவிட்ட பிறகு, உடனே மாற்றப்பட்டது. ஆனால், ஏன் இந்த வீண் வேலை எனத் திமுக அபிமானிகளையே அதிருப்தியடையச் செய்திருக்கிறது திமுக தொண்டர்களின் இந்தச் செயல்.

திமுக ஆட்சி அமைந்தும் ‘அம்மா உணவகம்’ எனும் பெயரை மாற்ற முடியவில்லை; முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் படங்களை வைக்க முடியவில்லை என்ற ஆதங்கம் திமுகவினருக்கு நிரம்பவே உண்டு. ஆனால், உண்மையில் அம்மா உணவகம் பெயர் மாறியிருக்க வேண்டியதுதான். எனினும், அந்தப் பெயரை நிலைக்க வைத்ததே திமுக தொண்டர்கள்தான். எப்படி?

வழக்கமாகக் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதாவின் திட்டங்கள் மெல்ல முடங்கிவிடும். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், கருணாநிதியின் கனவுத் திட்டங்கள் வெளிப்படையாகவே தூக்கி தூர வைக்கப்படும். ஒருவேளை, திட்டங்களை அப்படியே வைத்துக்கொண்டாலும், பெயர் மாற்றம் அரசியல் தமிழகத்துக்குப் புதிதல்ல. உதாரணமாக 2006-2011 ஆட்சிக் காலத்தில் கருணாநிதி தொடங்கிய ‘கலைஞர் காப்பீட்டுத் திட்ட’த்தைச் சொல்லலாம். 2011 ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ஜெயலலிதா ஆட்சியில் காப்பீடு திட்டம் தொடர்ந்தாலும், பெயர் மாறியது. ‘தமிழக முதல்வரின் காப்பீடு திட்டம்’ என்றானது.

இப்போது அம்மா திட்டங்களுக்கு வருவோம். கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் அம்மா பெயர் சூட்டப்படாத திட்டங்களே இல்லை. அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா மினி கிளினிக், அம்மா சிமென்ட் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். திமுக ஆட்சிக்கு வந்தால், அம்மா பெயர் காணாமல் போகும் என்றே திமுக தொண்டர்கள் நினைத்தார்கள். அந்தப் பெயர் மாறும் என்பதை 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை உணர்த்தியது. அப்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘ஏழைகளுக்கு உணவு வழங்க அண்ணா உணவகம் அமைக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது. அதாவது, திமுக ஆட்சி அமைந்திருந்தால் அம்மா உணவகம், அண்ணா உணவகம் ஆகியிருக்கும். ஆனால், அதிமுக ஆட்சியே தொடர்ந்ததால், அம்மா பெயருக்கு பங்கம் ஏற்படவில்லை.

அம்மா சிமென்ட் ‘வலிமை சிமென்ட்’ ஆகிவிட்டது. அம்மா மினி கிளினிக் இழுத்து மூடப்பட்டுவிட்டது. இன்னும் வலுவாக அந்தப் பெயர் ஒட்டியிருப்பது மருந்தகத்திலும் உணவகத்திலும்தான்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் அம்மா உணவகத்தின் பெயர் மாறுவதற்கான சமிக்ஞை கொடுக்கப்பட்டிருந்தது. ‘ஏழை மக்கள் பசி தீர, முதல் கட்டமாக 500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும்’ என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அண்ணா பெயரில் உணவகம் அறிவித்தபோது கருணாநிதி உயிரோடு இருந்தார். கலைஞர் என்ற பெயரில் உணவகம் அறிவித்தபோது கருணாநிதி இல்லை. அதனால், திமுக தேர்தல் அறிக்கையில் பெயரும் மாறியிருந்தது. ஆக, திமுக ஆட்சிக்கு வந்ததால், கலைஞர் உணவகம் எனும் பெயரில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கலாம். அப்போது அம்மா உணவகம் பெயர் மாறியிருக்கும். அல்லது சர்ச்சையைத் தவிர்க்க 2016 திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல அண்ணா உணவகம் என்றுகூட வைத்திருக்கலாம்.

ஆனால், 2 பெயர்களையுமே வைக்க முடியாமல் போனதற்குக் காரணமே திமுக தொண்டர்கள்தான். 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், சென்னை முகப்பேர் கிழக்கு ஜேஜே நகர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் பெயர் பலகையை வெளியே எடுத்துவந்து சாலையில் வீசி எறிந்தும், அம்மா உணவகத்தில் நுழைந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி, அம்மா உணவகம் என்ற பெயர்ப்பலகையைத் தொங்கவிடக் கூடாது என அங்கிருந்த ஊழியர்களை எச்சரித்துச் சென்றதும் சமூக ஊடகங்களில் வைரலானது. திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் அட்டகாசம் செய்வார்கள் என்று எதிர்க்கட்சிகள் செய்த தேர்தல் பிரச்சாரத்தை, இந்த நிகழ்வு உறுதிப்படுத்தியதைப் போல அமைந்தது. அதுவும் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் முன்பே நடந்த இந்த நிகழ்வு, திமுகவுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

அதன் வெளிப்பாடாக, அம்மா உணவகம் அந்தப் பெயரிலேயே செயல்படும் என்று அறிவிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. அப்படி திமுகவினர் சிலர் செய்த செயலால் நிலைத்த ‘அம்மா உணவகத்தில்’தான், வேறு வழியில்லாமல் கருணாநிதியின் படத்தை வைக்கும் அளவுக்கும் சென்றுள்ளார்கள். அம்மா குடிநீர்த் திட்டம் கரோனா வந்தபிறகு நிறுத்தப்பட்டது. அம்மா சிமென்ட் ‘வலிமை சிமென்ட்’ ஆகிவிட்டது. அம்மா மினி கிளினிக் இழுத்து மூடப்பட்டுவிட்டது. இன்னும் வலுவாக அந்தப் பெயர் ஒட்டியிருப்பது மருந்தகத்திலும் உணவகத்திலும்தான். அது நிலைக்குமா, இல்லையா என்பதெல்லாம் திமுக அரசின் கையில், குறிப்பாகச் சொன்னால் திமுக தொண்டர்களின் கையில்தான் உள்ளது!

Related Stories

No stories found.