‘மக்கள் உயிரோடு விளையாடாதீர்கள்!’ - திமுக அரசுக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை

அம்மா மினி கிளினிக்குகளை மீண்டும் திறக்க கோரிக்கை
‘மக்கள் உயிரோடு விளையாடாதீர்கள்!’ -  திமுக அரசுக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை

“மக்களை தேடி மருத்துவம் என்ற செயல்படாத திட்டத்தின் மூலம் மக்கள் உயிரோடு விளையாடாமல் அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அம்மாவின் அரசால் 'அம்மா மினி கிளினிக்' என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சாதாரண காய்ச்சல், சளி, இருமல், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதன் மூலம் மருத்துவ உதவி பெற்று வந்தனர். அந்த அற்புதமான திட்டத்தை, மக்களிடம் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஒரு திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்கி வைத்துவிட்டு 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற ஒரு பயன் இல்லாத திட்டத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த விடியா திமுக அரசு ஆரம்பித்தது. தற்போது அந்தத் திட்டம் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளதா, இல்லையா என்று தமிழக மக்களுக்குத் தெரியவில்லை.

‘மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று மருந்து வாங்கி உட்கொள்ளும் 20 லட்சம் பேரின் இல்லங்களுக்கே மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் நேரில் சென்று மருந்து, மாத்திரைகளைக் கொடுக்க இருக்கிறோம்’ என்றும், ‘கிராமம், நகரம் எனத் தமிழகம் முழுவதும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை வீடு தேடிச் சென்று கண்டறிந்து, அதில் அரசு மருத்துவமனையில் மருந்து சாப்பிட விருப்பப்படுகின்ற ஒரு கோடி பேரைத் தேர்ந்தெடுக்க இருக்கிறோம்’ என்றும் இந்த விடியா அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் அப்போது தெரிவித்தார்.

ஆனால் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் இன்றைய அவல நிலை குறித்து பலதரப்பட்ட மக்களின் புலம்பல்களை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. அதன்படி பெரும்பாலான நோயாளிகள் இந்தத் திட்டத்தில் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை, யாரும் வீடு தேடி வந்து பரிசோதனை செய்வதில்லை, மருந்து மாத்திரைகள் தரவில்லை என்று புலம்புகின்றனர். இதுகுறித்து செவிலியர்களைக் கேட்டால் அவர்களும் சரியான பதில் சொல்வதில்லை’ என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

மேலும், ‘அம்மா அரசின் ஆட்சியில், கரோனாவிற்கு மருந்தே கண்டுபிடிக்கப்படாத காலத்தில், தனியார் மருத்துவமனைகள் பல இயங்காத நேரத்தில், இப்போதுள்ள அதே அரசு மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பணயமாக வைத்து கரோனாவிற்கும், மற்ற அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர். குறிப்பாக, அரசு மகப்பேறு மருத்துவமனைகள் மூலம் பயனடைந்த தாய்மார்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது. அதே அரசு மருத்துவர்கள்தான் இப்போதும் பணிபுரிகின்றனர். ஆனால் இன்று, அரசு மருத்துவமனைகளுக்கே மக்கள் செல்ல அஞ்சும் நிலையை இந்த விடியா திமுக அரசு ஏற்படுத்தி உள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.

வெற்று விளம்பரத்திற்காக மக்களைத் தேடி மருத்துவம் என்று அறிவித்துவிட்டு, முதலமைச்சரை வைத்து 'போட்டோ ஷூட்' நடத்திவிட்டு, மக்களை, மருத்துவத்தைத் தேடி அலைய வைக்கும் போக்கை இந்த விடியா அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

காழ்ப்புணர்ச்சி அரசியலை ஓரங்கட்டிவிட்டு, மக்களின் நலனுக்காக அம்மாவின் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 'அம்மா மினி கிளினிக்' திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்’ என்று தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in