’தனித்து நிற்போம்; தனிப்பெரும்பான்மையில் ஆட்சியை தக்க வைப்போம்’

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு அமித் ஷா அறுதி!
’தனித்து நிற்போம்; தனிப்பெரும்பான்மையில் ஆட்சியை தக்க வைப்போம்’

’குஜராத்தை பின்பற்றி கர்நாடக சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக அறுதி பெரும்பான்மை பெரும்’ என்று அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் 2023, ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி கட்சி நிர்வாகிகளுக்கு உத்வேகம் அளிக்கும் சந்திப்புகளை, பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையில் அங்கே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெங்களூருவில் இன்று கூடிய தேர்தல் பூத் ஏஜெண்டுகளுக்கான கூட்டம் ஒன்றில் பேசிய அமித் ஷா, சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் வியூகங்கள் பலவற்றை பட்டியலிட்டார். பின்னர், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனித்து நிற்கும் என்பதை திட்டவட்டமாக அறிவித்தவர், குஜராத் மாடலில் கர்நாடகத்திலும் பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற வலியுறுத்தினார்.

மேலும் அமித் ஷா பேசும்போது “பத்திரிக்கைகள் மும்முனைப் போட்டி நடைபெறும் என்று எழுதுகின்றன. தேசபக்தர்கள் நிரம்பிய பாஜகவுடனான போட்டியில் காங்கிரஸ் கட்சிக்கு இடமே இல்லை. இன்னொரு பக்கம் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் இணைந்து போட்டியிடப் போவதாக செய்திகளை பரப்பி வருகிறது. ஜ.த(எஸ்) உடன் பாஜக கூட்டணி அவசியமில்லை. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனித்து நின்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைக்கும்” என்று முழக்கமிட்டார்.

அமித் ஷாவின் உத்வேகம் கட்சி நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. கர்நாடகத்தை ஆளும் அரசு மீதான 40% ஊழல் குற்றச்சாட்டுகள், மகாராஷ்டிர மாநிலத்துடனான எல்லை பிரச்சினைகள் ஆகியவற்றின் மத்தியில், குஜராத் பாணியில் அதிகாரத்தை தக்க வைக்க களமிறங்குகிறது பாஜக.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in