'அமித் ஷா சொல்வது வேட்டு வைக்கும் செயல்!' : முதல்வர் ஸ்டாலின் காட்டம்

'அமித் ஷா சொல்வது வேட்டு வைக்கும் செயல்!' : முதல்வர் ஸ்டாலின் காட்டம்

" அமித்ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைத் தான் கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், இந்தி தான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும்" என்று நேற்று பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பேச்சுக்கு தமிழகத்தைச் சேர்ந்த கட்சி தலைவர்கள் பலர் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் அமித் ஷாவிற்கு இன்று கண்டனத்தைப் பதிவு செய்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில்," இந்தி மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித் ஷா நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது! ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், " 'ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்' என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்! இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது” என்று ட்விட்டரில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இந்தக் கருத்து திமுகவினர் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.

Related Stories

No stories found.