ஜனவரி மாதத்தில் 11 மாநிலங்களுக்கு அதிரடி விசிட்: 2024 தேர்தலுக்கான பணிகளை தொடங்கும் அமித்ஷா!

ஜனவரி மாதத்தில் 11 மாநிலங்களுக்கு அதிரடி விசிட்: 2024 தேர்தலுக்கான பணிகளை தொடங்கும் அமித்ஷா!

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை பாஜக விறுவிறுப்பாக செய்துவரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மாதத்தில் மட்டும் 11 மாநிலங்களுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தொகுதிகளைப் பார்வையிடுவதற்காக "லோக்சபா பிரவாஸ்" என்ற இயக்கத்தை பாஜக திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர் அமித் ஷா ஜனவரி மாதம் 11 மாநிலங்களுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நாடு தழுவிய சுற்றுப்பயணத்தின் மூலம் 2024- ம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாஜக மேலும் தீவிரப்படுத்த உள்ளது.

இதன்படி, திரிபுரா, நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்கு ஜனவரி 5 மற்றும் 6-ம் தேதிகளில் அமித் ஷா செல்கிறார். அதன்பின்னர் ஜனவரி 7-ம் தேதி, அவர் சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்குச் செல்கிறார்.

ஜனவரி 8-ம் தேதி ஆந்திர பிரதேசத்தில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கும் அமித் ஷா, அதன்பின்னர் உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு ஜனவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் செல்கிறார். இந்த மாத இறுதியில், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கும் அவர் செல்லவுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகாவிற்கு ஏற்கனவே டிசம்பர் 30-ம் தேதி சென்றிருந்த அமித்ஷா, மீண்டும் ஜனவரி 28-ம் தேதி அம்மாநிலத்துக்குச் செல்கிறார்.

அமித் ஷாவின் இந்த பிரச்சாரம் 2024-ம் ஆண்டிற்கான பாஜகவின் "மிஷன் 350" திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன்படி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் குறைந்தது 350 இடங்களையாவது வெல்ல வேண்டும் என்பதே அந்தக் கட்சியின் நோக்கமாகும். இதற்காக பாஜக தோல்வியடைந்த அல்லது குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 160 தொகுதிகளை அக்கட்சி கண்டறிந்து வருகிறது.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை காரணமாக காங்கிரஸ் மீதான கிரேஸ் அதிகரித்துவரும் நிலையில், அதற்கு சவால் விடும் வகையில் சூறாவளி சுற்றுப்பயணங்களை பாஜக திட்டமிட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in