கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன... அதிமுகவுக்கு அமித் ஷா அழைப்பு!

அமித் ஷா
அமித் ஷா

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருப்பதால் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்ததைத் தொடர்ந்தும், முதல்வர் வேட்பாளர் குறித்த அண்ணாமலையின் கருத்துக்கள் தொடர்பாகவும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொண்டது.

மீண்டும் அதிமுகவை தங்களது கூட்டணிக்கு கொண்டுவர பாஜக முயன்று வருகிறது. ஆனால் அதிமுகவோ பாஜக கூட்டணிக்கு தயாராக இல்லை. இருந்தாலும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மூலமாக அதிமுகவுக்கு பாஜக தூதுவிட்டது. அப்போதும் அதிமுக உறுதியுடன் மறுத்துவிட்டது.

இந்த நிலையில் அதிமுகவுக்காக பாஜகவின் கதவு திறந்தே இருக்கிறது என அமித் ஷா பேட்டி அளித்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம்  பேட்டி அளித்துள்ளார்.

அதில் தமிழ்நாடு அரசியல், கூட்டணி ஆகியவை குறித்தும் பல தகவல்களைத் தெரிவித்துள்ளார். "அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்குமே கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. அதிமுக கூட்டணி தொடர்பாகவும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம்.

நடிகர் விஜய் உட்பட நாட்டில் யாரும் கட்சியைத் தொடங்கலாம். எந்த கட்சியிலும் சேரலாம். அதே நேரத்தில் யாருக்கு வாக்குகள் என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் முடிவு செய்வார்கள். தமிழ்நாட்டில் ரயில் நிலையங்களில் ஏற்கெனவே தமிழில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழ் வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். நீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் கிடைக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மேற்கொண்ட முயற்சி நல்ல முயற்சியாகும்.

அமித் ஷா
அமித் ஷா

பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்னமும் தயாராகவில்லை. நாட்டில் தமிழ்நாடும் மிக முக்கியமான மாநிலம். தமிழ்நாட்டுக்கான நிறைய திட்டங்கள் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும்" என்று தெரிவித்தார்.

அமித் ஷாவின் இந்த பேச்சு அதிமுகவை  கூட்டணிக்குள் கொண்டு வரும் பாஜகவின் முயற்சிகளில் ஒன்று என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அதனால் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர்  பாஜக கூட்டணியில் அதிமுக இணையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in