கள்ளத் துப்பாக்கியிலிருந்து ஏவுகணைக்கு: புந்தேல்கண்ட் கண்ட மாற்றம்!

கள்ளத் துப்பாக்கியிலிருந்து ஏவுகணைக்கு: புந்தேல்கண்ட் கண்ட மாற்றம்!
புந்தேல்கண்ட் பிரச்சார களத்தில் அமித் ஷா

சட்டவிரோத துப்பாக்கிகள் தயாரித்த புந்தேல்கண்ட் பிராந்தியம், இன்று தேசபாதுகாப்புக்கான ஏவுகணைகளை தயாரிக்கும் முனையமாக மாற்றம் பெற்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் சட்டப்பேரவை தேர்தலின் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு பிப்.23 அன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநிலத்தின் புந்தேல்கண்ட் பிராந்தியத்தில் பாஜக சார்பிலான பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இப்பகுதியில் தொடர் வாக்கு சேகரிப்புக்கான பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

தேர்தல் பிரச்சாரங்களைப் பொறுத்தவரை பிராந்தியத்தின் பிரச்சினைகள், சிறப்புகள், மக்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை முன்வைத்தும் கட்சிகள் தங்களது வாக்கு சேகரிப்பை முன்னெடுக்கும். அப்படி புந்தேல்கண்ட் பிராந்தியத்தில் வாக்கு சேகரித்த அமித் ஷா, அப்பகுதியின் பூர்வாசிரம பின்னணியை தொட்டுப் பேசினார்.

உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை அச்சுறுத்தி வந்த, சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களுக்கான சட்டவிரோத துப்பாக்கிகள், புந்தேல்கண்ட் பகுதியில் அப்போது தயாராகி வந்தன. சம்பல் கொள்ளையர்கள் பலரும் புந்தேல்கண்டில் செல்வாக்குடன் வலம் வந்திருக்கிறார்கள். தேர்தல்களில் அவர்கள் கைகாட்டும் வேட்பாளர்களையே மக்கள் தேர்வு செய்யும் வழக்கமும் அங்கே இருந்தது. அந்த சம்பல் கொள்ளையர்களின் வாரிசுகள் பலரும் நேரடியாக தற்போதைய தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும் உண்டு. சம்பல் கொள்ளையர்கள் முழுவதுமாக ஒடுக்கப்பட்டதில் சம்பல் கொள்ளையர் தொடர்பான சம்பவங்கள், அடுத்த தலைமுறையினருக்கு நினைவாகவே எஞ்சியுள்ளன. புந்தேல்கண்டில் வலம் வரும் அமித் ஷா இந்த சம்பல் பின்னணியை தொட்டும் வாக்கு சேகரித்து வருகிறார்.

’காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் முந்தைய ஆட்சிக் காலத்தில் புந்தேல்கண்ட் பகுதியில் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் தயார் செய்யப்பட்டு வந்தன. பாஜக ஆட்சிக் காலத்தில் இதே பிராந்தியத்தில் தேசத்தின் பாகுதிகாப்புக்கான ஏவுகணைகள் முதல் பீரங்கி குண்டுகள் வரை தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுதான் முந்தைய ஆட்சியினருக்கும் பாஜக ஆட்சிக்கும் இடையிலான வேறுபாடு’ என்று தொடங்கி புந்தேல்கண்ட் கண்டிருக்கும் மாற்றங்களை பட்டியலிட்டு வருகிறார் அமித் ஷா. மாநில எதிர்க்கட்சிகளால் தொட முடியாத இந்த பிரச்சார உத்தி மற்றும் அமித் ஷாவின் அணுகுமுறைக்கு, புந்தேல்கண்டில் கணிசமான வரவேற்பும் கிடைத்து வருகிறது.

Related Stories

No stories found.