தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் எங்கே? 21 நாட்களாக வெளியே தலைகாட்டாததன் மர்மம் என்ன?

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ்
தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ்
Updated on
2 min read

தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் சூழலில், முதல்வர் சந்திரசேகர் ராவின் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்ந்திருக்கும் மர்மங்கள் தெலங்கனாவுக்கு வெளியேயும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளன.

தெலங்கானா மாநிலம் உதயமானது முதல் தொடர்ந்து 2 முறை வென்று ஆட்சியை பிடித்தவர் கே.சந்திரசேகர் ராவ். இம்முறை ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்து அவரது கட்சியினர் உழைத்துக் கொண்டிருக்க, பொதுவாழ்க்கையில் இருந்து கடந்த 3 வாரங்களாக கேசிஆர் ஒதுங்கியிருப்பது, அங்கே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

கட்சிக் கூட்டத்தில் கேசிஆர்
கட்சிக் கூட்டத்தில் கேசிஆர்

பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணி உருவாகும் முன்னரே அது போன்ற கூட்டணிக்காக அயராது உழைத்தவர் கேசிஆர். மோடிக்கு எதிரான அரசியல் நிலைப்பாடுகளிலும் தீவிரம் காட்டினார். தனிப்பட்ட வகையிலும் தாக்குதல்களை தொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் களமாடப் போவதாக அறிவித்ததுடன் அதற்காக தனது டிஆர்எஸ் கட்சியை, பிஆர்எஸ் என தேசிய கட்சியாக பெயர் மாற்றி கட்டமைத்தார்.

தெலங்கானாவில் சந்திரசேகர் ராவை மூன்றாம் முறையாக முதல்வராக அனுமதிக்கக் கூடாது என பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்கனவே களத்தில் மெனக்கிட்டு வருகின்றன. இந்த சூழலில் கடந்த 21 நாட்களாக கேசிஆர் பொதுவெளியில் தலைகாட்டவில்லை. அவரது மகனும் கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமராவ், ஆட்சி - கட்சி என அனைத்திலும் முடிவுகளை எடுத்து வருகிறார்.

கேசிஆர் வாரிசுகள் கேடிஆர் மற்றும் கவிதா
கேசிஆர் வாரிசுகள் கேடிஆர் மற்றும் கவிதா

69 வயதாகும் கேசிஆர் தீவிர காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல உபாதைகள் காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்துவருவதாக கே.டி.ராமராவ் அறிவித்த பின்னரும், முதல்வரின் இருப்பு குறித்தான மர்மம் அடங்கியபாடில்லை. இதனிடையே, கேசிஆர் விருப்பத்துக்கு மாறாக அவரது வாரிசுகள், பாஜகவுடன் இணங்கிப் போக முடிவெடுத்திருப்பதாகவும் அண்மைக் காலமாக எழுந்திருக்கும் வதந்திகள், கேசிஆர் அமைதியில் ஆழ்ந்திருப்பதற்கு இன்னொரு அர்த்தம் சேர்க்கின்றன.

கேசிஆர் மகள் கவிதாவுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகள் தீவிரம் காட்டும் மதுபான ஊழல் வழக்கு காரணமாக, பாஜக எதிர்ப்பில் மென்போக்கை கடைபிடிப்பதாக கட்சிக்குள்ளாகவே புகைச்சல் எழுந்திருந்தது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் அண்மையில் லண்டன் சென்ற கவிதா அங்கே, பாஜக அரசின் மகளிர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட முன்னெடுப்புகளை பாராட்டி பேசியிருப்பதும் தெலங்கானா அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in