கோவா தாவல் தாவா: காங்கிரஸைக் கரைக்கும் பாஜக!

கேள்விக்குறியாகும் கட்சி ஒற்றுமை: ராகுலின் புதிய தலைவலி!
கோவா தாவல் தாவா: காங்கிரஸைக் கரைக்கும் பாஜக!

ராகுல் காந்தியின் தேசம் தழுவிய ஒற்றுமைப் பயணம் முடிவதற்குள் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை பல மாநிலங்களில் காணாமல் போயிருக்கும் என்று பாஜக கிண்டலடித்து வருகிறது. கோவா காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பெருவாரியாக பாஜகவுக்கு தாவியதை அடுத்து இவ்வாறான அரசியல் சாடலை காங்கிரஸ் எதிர்கொண்டுள்ளது. இந்த வகையில் ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை பயணத்தின் ஐயப்பாடுகள் இப்போதே காங்கிரஸ் முகாமிலும் எழுந்துள்ளன.

2014 மக்களவை தேர்தலை குறிவைத்து ஆளும் பாஜகவுக்கு எதிரான அலையை உருவாக்குதல், கலகலத்து வரும் காங்கிரஸ் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புதல், மக்கள் ஆதரவை மீளப்பெறுதல்... உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுடன், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. பாஜக அரியணையேறிய 8 ஆண்டுகளில் தேசம் தழுவிய பெரும் இயக்கச் செயல்பாடாக பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் இந்த எழுச்சி பார்க்கப்படுகிறது.

கேரளாவில் ராகுலுக்கு கூடிய கூட்டமும், வரவேற்பும் பாஜகவுக்கு அப்பால் மாநிலத்தை ஆளும் சிபிஎம் கட்சியை சீண்டும் அளவுக்கு கவனம் ஈர்த்தது. தமிழகம் உள்ளிட்ட இதர மாநிலங்களில் தோள் சேர்ந்திருக்கும் சிபிஎம், ராகுலின் கேரள யாத்திரைக்கு கூடுதல் நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்ததை ரசிக்கவில்லை. ’பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் 2 நாள்; பாஜகவை எதிர்க்கும் சிபிஎம் ஆட்சிக்குட்பட்ட கேரளத்தில் 18 நாள்; இதுதான் காங்கிரஸ் ஒற்றுமை பயணத்தின் பாஜக எதிர்ப்பு வியூகமா’ என்ற சிபிஎம்மின் கேள்வி அங்கே அதிர்வுகளையும் எழுப்பியது.

கேரளத்தின் எதிர்ப்புக்கு அப்பால், கோவா காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 8 பேர் பாஜகவுக்கு தாவியது காங்கிரஸ் தலைமைக்கு இடியாய் இறங்கியுள்ளது. கோவாவில் முதல்வர் பிரமோத் சவாந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கோவா முன்னாள் முதல்வரும் காங்கிரசின் மூத்த தலைவருமான திகம்பர் காமத் தலைமையிலான 8 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் நேற்று (செப்.14) பாஜகவுக்கு தாவினர். கட்சி தாவும் மக்கள் பிரதிநிதிகள் ஒரே அணியாகவும் மூன்றில் 2 பங்காகவும் இருப்பதால், கட்சித் தாவல் சட்டத்திலிருந்து காபந்து பெறுவார்கள் என்ற கணிப்பு இவர்களுக்கு சாதகமாக இருக்கிறது.

இதன் மூலம் 40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 33 ஆக உயர்ந்துள்ளது. தேர்தலின் வாயிலாக 20 தொகுதிகளில் வென்றுள்ள பாஜக, சுயேச்சைகள் உள்ளிட்ட 5 எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் அங்கே ஆட்சி அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கோவா எதிர்க்கட்சி முகாமின் பலம், காங்கிரஸ் 3 ஆம் ஆத்மி 2 உட்பட 7 உறுப்பினர்களாகச் சுருங்கியுள்ளது.

கோவா தாவலை அடுத்து ராகுலை தாக்கும் பாஜவின் வேகம் அதிகரித்துள்ளது. ஒற்றுமை பயணத்தின் தொடக்கமாக ஆர்எஸ்எஸ் சேவகர்களின் சீருடையான காக்கி கால்சட்டைக்கு தீ வைத்ததான மீம் ஒன்றை காங்கிரஸ் கட்சி பரப்பியது. அப்போது கொதித்த பாஜக ஆதரவாளர்கள், தற்போதைய கோவா கலகம் வாயிலாக ஆறுதல் அடைந்துள்ளனர். ’ராகுலின் ஒற்றுமை பயணம் முடிவதற்குள் பஞ்சாப், குஜராத், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை கரைந்து போயிருக்கும்’ என்றும் பாஜக ஆதரவாளர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதற்கு பதிலடி தரும் காங்கிரஸ், ‘பாஜகவால் காங்கிரஸ் கட்சியை உடைக்கவே முடியும்; நேரிடையாக மக்கள் மனங்களை வெல்வதற்கு பதிலாக குறுக்கு வழியிலும் குதிரை பேர அரசியலிலும் மட்டுமே பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது’ என்று சாடி வருகிறது. ராகுலின் இந்திய ஒற்றுமை பயணத்துக்கு மக்கள் மத்தியில் திரண்ட ஆதரவை செரிக்க முடியாத பாஜக தலைமை இது போன்று எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி திருப்தியடைகிறது’ என்றும் காங்கிரசார் தாக்கி வருகின்றனர்.

கோவா முதல்வர் பிரமோத் சவாந்த் முன்னிலையில் , பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள்...
கோவா முதல்வர் பிரமோத் சவாந்த் முன்னிலையில் , பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள்...

காங்கிரசின் குற்றச்சாட்டை உறுதிபடுத்துவது போல பாஜகவுக்கு எதிராக பஞ்சாப்பிலிருந்தும் புதிய புகார் எழுந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் 10 எம்எல்ஏ-க்களுக்கு தலா ரூ.25 கோடி பேரம் பேசி பாஜகவுக்கு இழுக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது. இந்த வகையில் ஆஆக எம்எல்ஏ-க்களுக்கு லஞ்சம் தர முயன்றதாக, பாஜகவுக்கு எதிரான காவல்துறை விசாரணைக்கும் ஆளும் ஆஆக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவா அரசியலைப் பொறுத்தவரை அண்மை ஆண்டுகளில் காங்கிரஸ் உறுப்பினர்களின் கட்சி தாவல் அதிகரித்து வருகிறது. கடந்த ஆட்சியின்போது (2019) காங்கிரஸின் 15 உறுப்பினர்களில் 10 பேர், ஒரே நாளில் பாஜகவுக்கு தாவி கட்சி தலைமைக்கு அதிர்ச்சி அளித்தனர். எனவே, அடுத்து வந்த தேர்தலை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் காங்கிரஸ் தலைமை முன்னெடுத்த புதிய ஏற்பாடு நாடு முழுக்க அதிகப்படி விமர்சனத்துக்கு ஆளானது.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் 37 பேரையும் கோயில்கள், தேவாலயம் மற்றும் மசூதிக்கு அழைத்துச் சென்று, ’கட்சிக்கும் வாக்களித்த மக்களுக்கும் விசுவாசமாக இருப்பதாகவும், கட்சி தாவலுக்கு எதிராகவும்’ கடவுள் முன்னிலையில் சத்திய பிரமாணம் எடுக்கச் செய்தனர். அப்படியும் தற்போது காங்கிரசின் கோவா மூத்த தலைவர்களை உள்ளடக்கிய எம்எல்ஏ-க்கள் 8 பேர் அந்த சத்தியத்தை மீறிவிட்டார்கள்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொண்ட முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், “நாங்கள் கோயிலுக்கு மீண்டும் சென்றோம். மறுபடியும் வேண்டிக் கொண்டோம். உங்களுக்கு சரியெனப்படுவதை செய்யுமாறு கடவுள் உத்தரவிட்டார். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம்” என்று பதிலளித்துள்ளார்.

ஆக, இந்திய ஒற்றுமை பயணத்தின் ஊடாக, கேள்விக்குறியாகும் கட்சியின் ஒற்றுமையை கட்டிக்காக்க வேண்டிய சவாலும் ஆகப்பெரும் அழுத்தமாக ராகுல் காந்தியின் தலையில் ஏறியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in