பெயர்களை மாற்றியது யார்?: தங்கம் தென்னரசு தரும் பதிலடி விளக்கம்!

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு

நந்தனம் வளாகத்தின் பெயர் சர்ச்சையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கண்டன அறிக்கைக்கு பதிலடியாக, கண்டனம் கலந்த விளக்கத்தை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தந்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தின் பெயர், அம்மா வளாகம் என்றிருந்ததை, பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை என பெயரிட்டதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் கூட்டாக இன்று(டிச.19) கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதற்கு பதிலடியாக, அதிமுக தலைவர்களின் புரிதலையும், பொறுப்பையும் விமர்சித்து விளக்கம் தந்துள்ளார் தங்கம் தென்னசு. அதில் ’திராவிட இயக்கம் மற்றும் தமிழக வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பேராசிரியர் க.அன்பழகனின் பெயர் சூட்டலை ஏற்றுக்கொள்ள முடியாத கல் மனம் படைத்தவர்கள்’ என ஓபிஎஸ் -ஈபிஎஸ்-ஐ தாக்கும் தங்கம் தென்னரசு, இருவரையும் ’திராவிட இயக்கச் சிந்தனைகள் அறவே நீர்த்துப் போனவர்கள், பத்தாண்டு பதவி சுகம் அனுபவித்து இன்று ஏமாற்றத்தின் விளிம்பில் நிற்பவர்கள்’ என்றெல்லாம் சாடியுள்ளார்.

பேராசிரியர் சிலை திறப்பு விழாவில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள்
பேராசிரியர் சிலை திறப்பு விழாவில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள்

மேலும் நந்தனம் வளாக பெயர் சூட்டல் குறித்த சர்ச்சையை விளக்கும் வகையில், ’கால்நடை பராமரிப்புத் துறை, ஒருங்கிணைந்த நிதித்துறை மற்றும் மீன்வளத்துறை போன்ற பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களின் கட்டிடங்கள் அமைந்துள்ள ‘அம்மா வளாகத்தில்’ உள்ள ஒரு கட்டிடமான ஒருங்கிணைந்த நிதித்துறை கட்டிடத்திற்குத்தான் ’பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் பெயரிடப்பட்ட அம்மா வளாகம் என்ற பெயரையோ அதற்கான அரசாணையையோ மாற்றவில்லை’ என தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். கூடுதலாக ’நிறையக் கட்டிடங்கள் அமைந்துள்ள வளாகத்திற்கு ஒரு பெயரும், அந்த வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடங்களுக்கு தனித்தனி பெயரும் வைக்கப்பட்டுள்ளது’ தொடர்பாக உதாரணங்களையும் அடுக்கியுள்ளார்.

மேலும், திமுக ஆட்சியில் சூட்டப்பட்ட பல்வேறு பெயர்கள் மற்றும் அடையாளங்களை அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் அரசியல் காழ்ப்புணர்வோடு அகற்றியதையும், மாற்றியதையும் அந்த அறிக்கையில் பட்டியலிட்டுள்ளார் அமைச்சர். நிறைவாக ”பொறுப்புள்ள பதவி வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும் இதுபோன்ற அறிக்கைகள் வெளியிடும்போது குறைந்தபட்சம் உண்மை என்னவென்பதை அறிந்துகொண்டு அறிக்கை விடும்படி கேட்டுக்கொள்கிறேன். பல்லாண்டுகால அரசியல் அனுபவம் எங்களுக்கும் இருக்கிறது என்று மேடையில் பேசினால் மட்டும் போதாது, செயல்களிலும் தங்களின் அறிக்கைகளிலும் அது தலைகாட்ட வேண்டும்” என்ற இடித்துரைப்புடன் முடித்திருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in