தமிழகத்திலும் தலையெடுக்கும் பாஜக... பிரசாந்த் கிஷோர் வாக்கு பலிக்குமா?

மோடியின் சென்னை ரோடு ஷோ
மோடியின் சென்னை ரோடு ஷோ

ஏப்ரல் 19 -ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழகம் உள்ளிட்ட பிராந்தியங்களில் இறுதிச்சுற்று பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இதனூடே, அறுதிப் பெரும்பான்மையை உறுதி செய்திருப்பதாக தோற்றமளிக்கும் பாஜக, அதன் வாக்குவங்கி நிறைந்திருக்கும் இந்தி இதய மாநிலங்களுக்கு அப்பாலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு, கர்நாடகம், தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிவைத்து களமாடி வருகிறது.

இவற்றுக்கு மத்தியில் தேர்தல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோர், இந்த மாநிலங்களில் பாஜகவுக்கு ஆச்சரியகரமான வரவேற்பு காத்திருப்பதாக கணித்துள்ளார். இது பாஜகவினருக்கு உற்சாகத்தையும், இந்தியா கூட்டணியருக்கு அதிர்ச்சியையும் தந்திருக்கிறது.

பாஜக ஜம்பம் எடுபடுமா?

பாஜக வாக்கு வங்கிக்கான இந்தி இதய மாநிலங்களை ஒட்டுமொத்தமாக சூறையாடும் இறுமாப்பில் பாஜக இதுவரை இருந்தது. ஆனால், பாஜக சார்பிலான சர்வேக்கள் மற்றும் உளவு அமைப்புகள் தந்த தரவுகள், மேற்படி உற்சாக பலூனில் பொத்தலிட்டுள்ளன. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, விவசாயிகள் போராட்டம், ஆளும் கட்சிக்கே உரிய அதிருப்தி அலை உள்ளிட்டவற்றால், பாஜக எதிர்பார்க்கும் அளவுக்கு அங்கே பெரும் வெற்றி சாத்தியமில்லை என தெரிய வந்திருக்கிறது.

பீகாரில் நிதிஷ் குமார் சம்பாதித்திருக்கும் அதிருப்தி, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களின் பங்கத்தை சுட்டும் கருத்துக்கணிப்புகள், பஞ்சாப் விவசாயிகளின் உணர்வுகளை எதிரொலிக்கக் காத்திருக்கும் ஹரியாணா போன்றவை பாஜக கணக்குகளை இடறச் செய்திருக்கின்றன. பாஜகவுக்கு பெரும்பாதகம் இல்லை என்றபோதும், அது எதிர்பார்த்திருக்கும் அபரிமிதமான வெற்றிக்கு இவை எல்லாம் அணைபோடக் கூடும். உத்தரபிரதேசம், உத்தராகண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் பாஜகவை அயோத்தி பால ராமர் காப்பாற்றலாம்.

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

பிராந்திய கட்சிகளை பிளந்தும், கூட்டணிகளை மாற்றியும் மகாராஷ்டிர அரசியலை சீட்டுக்கட்டு போல கலைத்துப் போட்டதில், பாஜகவின் சாணக்கியர் அமித் ஷாவே அதிரும் அளவிற்கு அங்கே அரசியல் களம் அல்லோலகல்லோலப்பட்டிருக்கிறது. இப்படி பாஜகவின் அதிக எதிர்பார்ப்புக்குரிய வடக்கும், மேற்கும் வியூகக் கணக்குகளில் சற்றே உதைக்கும் சூழல் எழுந்ததால், கிழக்கு மற்றும் மேற்கில் பாஜக கூடுதல் கவனம் செலுத்தக் காரணமானது. இவற்றையே பிரசாந்த் கிஷோரும் பிரதிபலித்திருக்கிறார்.

பிரசாந்த் கிஷோர் கணிப்பு என்ன?

பாஜக வெற்றி குறித்து பிரசாந்த் கிஷோருக்கு மாற்றுக்கருத்து இல்லை. எப்படியும் பாஜக 300 இடங்களில் வெல்லும் என ஆருடம் சொல்லியிருக்கிறார். இவற்றோடு கிழக்கிலும், தெற்கிலும் வாக்குவங்கியை உயர்த்துவதோடு, கணிசமான வெற்றிகள் மூலமாகவும் தனது இலக்கை பாஜக எட்டும் எனவும் கிஷோர் கணித்திருக்கிறார். குறிப்பாக, மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய கிழக்கு மாநிலங்களில் ஆளும் கட்சிகளைவிட அதிக இடத்தில் வென்று பாஜக முதன்மை பெறும் என அறிவித்திருக்கிறார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

மேற்கு வங்கத்தில் ஏற்கெனவே பாஜக ஏறுமுகத்தில் உள்ளது. அதற்கான அடித்தளத்தை உருவாக்குவதில் அமலாக்கத்துறை முதல் என்ஐஏ வரையிலான மத்திய விசாரணை அமைப்புகள் பாடுபடுவதாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. இந்த வகையில் உ.பி., மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான (42) எம்பி-க்களைக் கொண்டிருக்கும் மேற்கு வங்கத்தில் பாஜக உத்வேகம் பெற்றுள்ளது.

இதே போன்று ஒடிசாவில் பாஜகவுடன் இணக்கமாகவே சென்ற ஆளும் பிஜு ஜனதா தளம், திடீரென கூட்டணி பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு தனியாக தேர்தலை சந்திக்கிறது. ஆனாலும் பாஜக பெருமிதம் கொள்ளுமளவுக்கு ஒடிசா ரிசல்ட்டை எதிர்பார்க்கலாம் என்றும் கிஷோர் கணித்திருக்கிறார்.

அடுத்தபடியாக தென்னகத்தின் தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தலிலேயே வாக்குவங்கியில் பாய்ச்சல் காட்டிய பாஜக, இந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க நிலவரம் போன்றே இரண்டாவது அல்லது முதலிடத்துக்கு முன்னேறக் கூடும் என்றிருக்கிறார் கிஷோர். இவற்றோடு தமிழக ஆச்சரியமாக, இங்கே பாஜகவுக்கான வாக்கு சதவீதம் இரட்டை இலக்கத்தை எட்டும் என்றும் உறுதி தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் கிஷோர் வாக்கு பலிக்குமா?

மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு சில மாதங்கள் முன்பிருந்தே பிரசாந்த் கிஷோர் இவற்றை அவ்வப்போது பகிர்ந்து வந்திருக்கிறார். 2024 மக்களவையின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அளவுக்கு கிழக்கு - தெற்கு நிலவரம் பாஜகவுக்கு சாதகமாக மாறும் என்ற கணிப்பை, தேர்தல் நெருக்கத்தில் இன்னும் உறுதியாக தெரிவித்திருக்கிறார் கிஷோர். இவற்றில் குறிப்பாக, தமிழ்நாட்டில் அவரது கணிப்பு பலிக்குமா என்ற கேள்வி புதிய விவாதங்களுக்கு வித்திட்டிருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தளவில், நோட்டாவுடன் போட்டிபோடும் கட்சி என்ற நிலை பாஜகவுக்கு இப்போது இல்லை என்றாலும் பூத் ஏஜென்டுகளுக்கு தடுமாறும் கட்சி என்ற பரிகாசம் புதுசாக பாஜகவை துரத்த ஆரம்பித்திருக்கிறது. பொதுவெளியிலான இந்த பகடிகளுக்கு அப்பால், ’பாஜக இரட்டை இலக்கத்தில் வாக்கு வங்கியை கவரும்; ஓரிரு இடங்களில் வெல்லும்’ என்ற பிரசாந்த் கிஷோரின் கணிப்பு மட்டுமன்றி, அதையொட்டிய பல கணிப்புகள் பாஜகவினருக்கே ஆச்சரியம் தரக்கூடியவை. ஆனால், அண்ணாமலை பொறுப்பேற்றது முதலே அதற்கான பாதையில்தான் தமிழக பாஜக திட்டமிட்டு பயணித்து வருகிறது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

பிரசாந்த் கிஷோர் - பிரதமர் மோடி
பிரசாந்த் கிஷோர் - பிரதமர் மோடி

மலரத் துடிக்கும் தாமரை

மக்களவைத் தேர்தலை குறிவைத்து, கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் 7 முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு பறந்து வந்திருக்கிறார். தென்சென்னை, வேலூர், கோவை, நீலகிரி, விருதுநகர் மற்றும் பெரம்பலூர் தொகுதிகளை பாஜக குறிவைத்திருக்கிறது. இந்த தொகுதிகளில் ஒன்றிரண்டில் வெற்றி மற்றும் இரட்டை இலக்கத்தை நெருங்கும் வாக்கு சதவீதம் ஆகியவற்றை எட்டினாலே, அது தமிழக பாஜகவினருக்கு ’ஸ்வீட் எடு... கொண்டாடு’ ரகம் தான்.

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுகவை எதிர்க்கும் பிரதான எதிர்க்கட்சியாக பாஜகவை கட்டமைப்பதாக, டெல்லிக்கு உறுதி தந்திருக்கிறார் அண்ணாமலை. அதற்கு மக்களவைத் தேர்தலில் தமிழக பாஜக எதிர்பார்க்கும் வெற்றிகளே திருப்புமுனை தரும். 1967-க்குப் பின்னர் தமிழ்நாடு தேசிய கட்சிகளின் பிடியில் சிக்காதிருக்கும் சூழலை மாற்றி, 2026 சட்டப்பேரவை தேர்தலில், தமிழகத்தில் தாமரை மலர்வதற்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும் என தமிழக பாஜக திட்டமிடுகிறது.

மோடி ரோடு ஷோ
மோடி ரோடு ஷோ

இதற்காக வழக்கமான தேர்தல் களப்பணிகள், அரசியல் வியூகங்கள் ஆகியவற்றோடு மத்திய விசாரணை அமைப்புகளையும் வெகுவாய் நம்பியிருக்கிறது. மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு, தேசம் அதிரும் அளவுக்கு திமுக மட்டுமன்றி, அவசியமெனில் அதிமுக மீதும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் பாயக்கூடும். அதற்கு அஞ்சியே அதிமுகவின் இபிஎஸ் உள்ளிட்டோர் பாஜகவுக்கு எதிராக வாய் திறக்க பம்முகின்றனர்.

2009-ல் 18 தொகுதிகளில் போட்டியிட்டு 5.3 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக, அடுத்து வந்த 2014 தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு இடத்தையும், 5.5 சதவீத வாக்குகளையும் பெற்றது. ஆனால், 2019 தேர்தலில் 5 இடங்களில் போட்டியிட்டு 3.7 சதவீத வாக்குகளையே பெற்றது. 2009 தேர்தலுக்குப் பின்னர் அதிக எண்ணிக்கையிலான இடங்களில் தற்போது போட்டியிடும் பாஜக, கிஷோர் கணிப்பின்படி இரட்டை இலக்க வாக்கு வங்கி மற்றும் ஓரிரு இடங்களில் வெற்றி ஆகியவற்றை சாதித்து, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு பாய்ச்சல் காட்டலாம்.

அதற்காக தமிழகத்தில் அது கணித்திருக்கும் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப பாஜக துடிக்கிறது. ஆனால், தமிழ்நாட்டு தேர்தல் களம் என்றாலே திமுக - அதிமுக இடையில்தான் போட்டி என்பதில், இரு திராவிட கட்சிகளும் கூட்டணி வைக்காத குறையாக ஒரே குரலை எதிரொலிக்கின்றன. அவர்களின் மத்தியில், அண்ணாமலையின் பிரதாபங்கள் மேலிடத்து நற்பெயருக்கு அப்பால் வேறொன்றையும் பெயர்க்காது போகலாம். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான அடித்தளமும் வாய்ச்சவடாலோடு போனால், அடுத்த தமிழகத் தலைவருக்கு அண்ணாமலை வழிவிட வேண்டியிருக்கும்.

மற்றபடி, தற்போதைய நிலவரப்படி, அரும்பு அளவுக்கு துளிர்க்கத் தலைப்படும் தாமரை, தமிழகத்தில் முழுமையாக மலர சில மாமாங்க காலமும், பல அதிசயங்கள் சித்திக்கவும் காத்திருக்க வேண்டியிருக்கும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in