‘தேவையில்லாமல் ரெய்டுகள் நடத்தி மக்களை துன்புறுத்தினால்...’ - மத்திய ஏஜென்சிகளுக்கு சத்தீஸ்கர் முதல்வர் கடும் எச்சரிக்கை

பூபேஷ் பகேல்
பூபேஷ் பகேல்படம்: பிடிஐ

தேவையில்லாமல் யாரையாவது குறிவைத்து மத்திய ஏஜென்சிகள் ரெய்டுகள் நடத்துவதாக மக்கள் புகார் அளித்தால், மத்தியன் ஏஜென்சி அதிகாரிகள் மீது மாநில காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் தெரிவித்துள்ளார்

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்மாநில முதல்வர் பூபேஷ் பகேல், "அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அல்லது வருமான வரித் துறைகளுக்கு மக்கள் பயப்படத் தேவையில்லை. சத்தீஸ்கர் அரசின் தலைவர் என்ற முறையில் நீங்கள் தேவையில்லாமல் குறிவைக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது மாநிலத்தின் ஏதேனும் காவல் நிலையத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இது தொடர்பாக மத்திய ஏஜென்சிகளின் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

மேலும், “நாம் உண்மைப் போரில் போராட வேண்டும். யாராவது தவறு செய்தால் அவர் தண்டிக்கப்பட வேண்டும், அச்சத்தை உருவாக்கி அரசாங்கத்தை நடத்த முடியாது. அனைத்து மத்திய ஏஜென்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் அவர்களை எதிர்க்கவில்லை. ஏதேனும் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மக்கள் துன்புறுத்தப்பட்டால் மற்றும் இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளித்தால், மத்திய முகமைகளின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பூபேஷ் பகேல், தனக்கு அதுகுறித்து அதிகம் தெரியாது என்றும், இந்தப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என நம்புவதாகவும் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in