
ஜார்க்கண்டில் பறவைக் காய்ச்சல் பரவிவருவது கவலையளிக்கும் நிலையில், அம்மாநில சுகாதார அமைச்சர் பன்னா குப்தா, “பறவைக் காய்ச்சல் தொற்று பரவும்போது கோழியை அதிகம் சாப்பிடுவேன்” என்று ஒரு பரபரப்பான கருத்தைத் தெரிவித்தார்.
இது தொடர்பாகப் பேசிய ஜார்க்கண்ட் அமைச்சர் பன்னா குப்தா, " பயப்பட ஒன்றுமில்லை, பறவைக் காய்ச்சல் தொற்று பரவும் போது நான் கோழி இறைச்சியை அதிகம் சாப்பிடுவேன், சமைக்கும் போது அதை நன்றாக சூடாக்கினால் போதும். எனவே மக்கள் பீதி அடைய வேண்டாம். ஏனெனில் சுகாதாரத் துறை கால்நடை வளர்ப்புக் குழுவுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. இதனால் யாரும் பாதிக்கப்படாமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்வார்கள்" என்றும் அவர் கூறினார்.
பொகாரோ மாவட்டத்தில் 4,000 கோழிகள் மற்றும் வாத்துகள் அழிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வெள்ளிக்கிழமை பறவைக் காய்ச்சல் வெடித்தது. ராஞ்சியில் உள்ள கோழிகளுக்கு எச்5என்1 பறவைக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட மற்றும் கண்காணிப்பு பகுதிகளை அறிவிப்பது, பாதிக்கப்பட்ட வளாகங்களுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவது, பறவைகளை அழித்தல், இறந்த பறவைகள் மற்றும் பாதிக்கப்பட்டவற்றை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜார்கண்ட் அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடுமையான முதுகுவலி, காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், சளி மற்றும் சளியில் இரத்தம் ஆகியவை மனிதர்களிடையே பரவைக் காய்ச்சல் நோய்த்தொற்றின் அறிகுறிகளாகும்.