`பயங்கரவாதத்துக்கு கிடைத்த வெற்றி'- அமெரிக்கை நாராயணன் கடும் விமர்சனம்

`பயங்கரவாதத்துக்கு கிடைத்த வெற்றி'- அமெரிக்கை நாராயணன் கடும் விமர்சனம்

பேரறிவாளவனின் விடுதலையை கடுமையாக எதிர்த்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமெரிக்கை நாராயணன், "சட்டம் என்ற கழுதையின் சந்து பொந்துகளில் புகுந்து வந்த பணநாயகத்துக்கு பயங்கரவாதத்துக்கு கிடைத்த வெற்றி" என்று கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அனைவருக்கும் கீழமை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில் 9 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகியோருக்கும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதனிடையே, 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் முடிவு எடுக்காத ஆளுநர், தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தார். மத்திய அரசு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தது. ஆனால் இது குறித்து குடியரசுத் தலைவர் எந்த முடிவு எடுக்காமல் தீர்மானத்தை கிடப்பில் போட்டுவிட்டார். இந்நிலையில், தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து காரசாரமான வாதங்களை முன்வைத்து வந்தன. அப்போது மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் சரமாரியான கேள்விகளை நீதிபதிகளும் எழுப்பியிருந்ததோடு, தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாக அதிரடியாக கூறியது.

இதனிடையே, பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமெரிக்கை நாராயணன் கடுமையாக விமர்சித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "சட்டம் என்ற கழுதையின் சந்து பொந்துகளில் புகுந்து வந்த பணநாயகத்துக்கு பயங்கரவாதத்துக்கு கிடைத்த வெற்றி'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in