‘அம்பானி, அதானியால் ராகுலை வாங்க முடியாது’

அண்ணனுக்காக தங்கை பெருமிதம்
உபியில் ராகுலை வரவேற்று பேசும் பிரியங்கா
உபியில் ராகுலை வரவேற்று பேசும் பிரியங்கா

”அம்பானி மற்றும் அதானியால் பொதுத்துறை நிறுவனங்கள் முதல் ஊடகங்கள் வரை வாங்க முடியும்; முக்கிய தலைவர்களையும் வாங்க முடியும். ஆனால் என் அண்ணனை ராகுலை வாங்க முடியாது” என பாசப் பெருமிதம் பொழிந்திருக்கிறார் பிரியங்கா காந்தி.

கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை பயணம் அண்மையில் டெல்லியை வந்தடைந்தது. ஒரு சில தினங்கள் ஓய்வுக்குப் பின்னர், உத்திரபிரதேசம் மாநிலத்தில் இன்று நடைபயணம் தொடங்கியது. உத்திரபிரதேச எல்லைக்குள் ராகுல் காந்தி தலைமையிலான பாதயாத்திரைக் குழுவினரை வரவேற்ற பிரியங்கா காந்தி, ராகுல் காந்தியையும் காங்கிரஸின் நடைபயணத்தையும் புகழ்ந்து பேசினார்.

”ராகுல் காந்தியும் காங்கிரஸாரும் தேசத்தில் அன்பு, ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்கள். ராகுலின் பிம்பத்தை சிதைக்க பாஜக தலைவர்கள் பல்லாயிரம் கோடிகளை செலவிட்டு வருகின்றனர். அவர்களின் முயற்சிகளை உடைத்துக்கொண்டு இந்த நடைபயணத்தின் வாயிலாக ராகுல் காந்தி மீண்டு வந்திருக்கிறார்.

அம்பானி, அதானி ஆகியோர் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் முதல் ஊடகங்கள் வரை வாங்கிக் குவிக்கின்றனர். நாட்டுத் தலைவர்களையே வாங்குகின்றனர். ஆனால் அதுபோல எனது அண்ணன் ராகுலை அவர்களால் வாங்க முடியாது. இதில் உள்ளபடி பெரும் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன்” என்று பிரியங்கா காந்தி பேசினார்.

உத்திரபிரதேச மாநிலத்தில் 3 நாள் நடைபயணத்தை முடித்துக்கொண்டு, ஜன.6 அன்று ஹரியனாவுக்குள் ஜோடோ யாத்திரை பிரவேசிக்க உள்ளது. தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஜன.10 அன்றும், காஷ்மீர் மாநிலத்தில் ஜன.20 அன்றும் காலடி வைக்க இருக்கிறது. அங்கு ஜன.26 அன்று நடைபயணம் நிறைவு செய்யப்பட உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in