
அண்ணாமலை வீட்டு வாசலில் பாஜக கொடி மரம் நட்டபோது ஏற்பட்ட தகராறு தொடர்பாக கைது செய்யப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர். அதனால் தானோ என்னவோ அவர் மீதுள்ள ’பாசத்தில்’ அடுத்தடுத்து வழக்குகளைப் போட்டு தாக்குகிறது போலீஸ்.
அமருக்கு கொடுக்கும் ட்ரீட்மென்டில் அண்ணாமலைக்கு குணமாக வேண்டும் என நினைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அதனால் அமரை அநியாயத்துக்கு அலைக்கழிக்கிறது போலீஸ்.
அம்பாசமுத்திரத்தில் எப்போதோ பதிவான வழக்கு ஒன்றிலும் அமரைக் கைது செய்திருக்கும் போலீஸார், அதற்காக அவரை அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நேற்றிரவு அழைத்துச் சென்றனர். வழக்கமாக இதுபோன்ற கைதிகளை போலீஸ் வேனில் அழைத்துச் செல்வதுதான் வழக்கம். ஆனால், அதற்கு அதிகம் செலவாகும்(?) நினைத்தார்களோ என்னவோ அரசுப் பேருந்தில் அமரை அம்பைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அதிலேயே அமருக்கு பாதி கழன்றுவிட்டது.
அதிகாலை 3 மணிக்கு அம்பையை அடைந்தவர்கள் அந்த நேரத்தில் அம்பை கிளைச் சிறை அதிகாரிகளை எழுப்பி அங்கு கொண்டுபோய் அமரை அடைத்திருக்கிறார்கள். அடுத்ததாக இன்று காலையில் அமரை குளிக்கவைத்து அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தயாரான போலீஸ், அரை கிலோ மீட்டர் தொலைவுதானே என அவரை கொட்டும் மழையில் நனைந்தபடி பொடிநடையாகவே அழைத்துச் சென்றிருக்கிறது.
அம்பை வழக்கில் அமருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. அடுத்தடுத்த வழக்குகளில் ஜாமீன் பெற்று வெளியே வருவதற்குள் அவரை ஒருவழி பண்ணிவிடுவார்கள் போலிருக்கிறது!