
பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்பட 6 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பனையூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக கொடிக் கம்பத்தை அகற்றுவதற்காக சென்ற அரசு ஊழியரை தாக்கிய புகாரில், பாஜக மாநில விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு இருக்கிறார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாகவும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் கொடிக்கம்பத்தை அகற்ற கொண்டு வந்த ஜேசிபி இயந்திரத்தை கற்களை கொண்டு தாக்கி கண்ணாடிகளை உடைத்து பொது சொத்துக்கு சேதம் விளைவித்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அமர் பிரசாத் ரெட்டி தாக்கல் செய்த மனுவை செங்கல்பட்டு கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு அமர் பிரசாத் ரெட்டி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, பொக்லைன் வாகனத்தை சேதப்படுத்தியதற்காக எத்தனை நாட்கள் சிறையில் வைப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியதோடு, 55 அடி உயர கொடிக்கம்பம் காக்கா, குருவி அமரதான் பயன்படும் என்று கூறினார். மேலும், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி கொடிக்கம்பம் வைக்க மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, ஜேசிபி இயந்திரத்தை சேதப்படுத்தியதற்காக அதன் உரிமையாளர்களுக்கு 12,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறி அமர் பிரசாத் ரெட்டி உள்பட 6 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.