
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் ‛கல்தா' கொடுக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு மீண்டும் பாஜகவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். இந்நிலையில் தான் நவம்பர் 25ம் தேதி ஒரே கட்டமாக ராஜஸ்தான் சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 101இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
இந்நிலையில் தான் அங்கு ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை மீட்டெடுக்க பாஜகவும் முயன்று வருகிறது. இதற்கிடையே தான் பாஜக முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியாவுக்கும், பாஜக மேலிடத்துக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதனால் வசுந்தர ராஜே கட்சி பணிகளில் தீவிரம் காட்டாமல் ஒதுங்கியே இருந்தார்.
அதோடு பாஜகவின் தேர்தல் நிர்வாக குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆகியவற்றிலும் வசுந்தர ராஜே சிந்தியாவுக்கு இடம் வழங்கப்படவில்லை. இதனால் வரும் தேர்தலில் வசுந்தர ராஜேவுக்கு பாஜகவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என கூறப்பட்டது. இதனால் வசுந்தராவின் ஆதரவாளர்கள் சுயேட்சையாக களமிறங்குவார்கள் என்ற பேச்சும் அடிபட்டது. இந்நிலையில் தான் தற்போது பாஜக தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளது.
அதாவது ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இதில் 83 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி முன்னாள் முதல்வரான வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு ஜால்ராபதன் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் கடந்த 2003, 2008, 2013, 2018 என தொடர்ந்து 4 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் தான் தற்போது 5வது முறையாக அந்த தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.