தமிழக அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவராத நிலையில் அவரது அறையின் முன் துறைக்கான பெயர்ப்பலகை வைக்கப்பட்டு உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் இருந்தனர். தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டதன் மூலம் தமிழக அமைச்சரவையின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரித்து இருக்கிறது. தமிழக அமைச்சர்கள், திமுகவினர் மற்றும் தொண்டர்கள் அனைவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நேரத்தில் எதிர்க்கட்சியான எடப்பாடி பழனிசாமி இதனை கடுமையாக விமர்சித்து பேசினார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் தமிழகத்தில் பாலும் தேனும் ஓடப்போகிறதா என்று கிண்டல் அடித்தார்.
அதே நேரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த எதிர்ப்புக்கு மத்தியிலும் விமர்சனத்திற்கு மத்தியிலும் தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
ஆளுநர் மாளிகையிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் முன்பே சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறைக்கு முன்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த துறை ஏற்கெனவே அமைச்சர் மெய்யநாதனிடம் இருந்தது. தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.