
கூட்டணி கட்சியான பாஜகவுடன் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
அதிமுக - பாஜக இடையே நடைபெற்று வரக்கூடிய சர்ச்சையில் அதிமுக எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு குறித்தான வழக்கில் உச்ச நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த முடிவுகளை கட்சி ரீதியாக எடுக்கப்பட தேவை உள்ளது.
இதற்காகத்தான் அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அழைத்து நாளை ஆலோசனை நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிடப்பட்டுள்ளார். நாளை நடைபெறும் கூட்டத்தில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து இன்று ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பாஜகவில் இருந்து பலர் விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் அதிமுக, பாஜகவிற்கு ஏற்பட்டுள்ள மோதலை எப்படி எதிர்கொள்வது, பாஜகவுடன் கூட்டணியில் தொடர்வதா என்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.