வடகிழக்கு தேர்தல்களில் வாய்ப்பைப் பெறுமா காங்கிரஸ்?

பலமுனை போட்டிகளால் பலன்பெறத் துடிக்கும் பாஜக!
வடகிழக்கு தேர்தல்களில் வாய்ப்பைப் பெறுமா காங்கிரஸ்?

வடகிழக்கின் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மூன்று மாநிலங்களிலும் தேர்தல் ஜூரம் தகிக்கிறது. இந்த மூன்று மாநிலங்களிலுமே தற்போது பாஜக அல்லது பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சியில் இருப்பதால், வரும் தேர்தலிலும் அதே நிலை தொடரவேண்டும் என விரும்புகிறது பாஜக தலைமை. முக்கிய திருப்பமாக இம்முறை திரிபுராவில் இடதுசாரிகள் - காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஆனாலும், இம்மாநிலங்களில் முக்கிய கட்சியாக உள்ள திரிணமூல் காங்கிரஸ், தனித்து நிற்பது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு சவாலாக நிற்கிறது.

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடகம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 9 மாநிலங்கள் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்கின்றன. யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின்னர் ஜம்மு - காஷ்மீருக்கும் இந்த ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதில், முதல்கட்டமாக திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கு இந்த மாதத்தில் தேர்தல் நடக்கிறது. இந்த ஆண்டில் தேர்தல் நடைபெறவுள்ள இந்த 9 மாநில தேர்தலிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற வேண்டும் என பாஜக விரும்புகிறது. ஏனென்றால், இந்தத் தேர்தல்களில் பெறக்கூடிய வெற்றியை அடித்தளமாகக் கொண்டே மக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றிக்கொடியை பறக்கவிட முடியும் என கணக்குப் போடுகிறது தாமரைக்கட்சி.

மேலும், அதிகளவில் சட்டமன்றத் தேர்தல்களில் வென்றால்தான், மாநிலங்களவையிலும் பெரும்பான்மையை பெறலாம் என்பதும் பாஜகவின் பார்வை. இந்த சூழலில் பிப்ரவரி 17-ல் திரிபுராவில் தொடங்கும் தேர்தல் மாரத்தான் 2024 மக்களவைத் தேர்தல் வரை தொடரும். இதனால்தான் மக்களவைத் தேர்தலுக்கான எனர்ஜி டானிக்காக இந்த மூன்று மாநிலத் தேர்தல்களை பாஜக பார்க்கிறது.

இந்த மூன்று மாநிலத் தேர்தல்கள் ஏன் முக்கியம் என பாஜகவுக்குச் சொன்ன அத்தனை காரணங்களும், தேவைகளும் காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கிறது. 10 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டுமென்றால், இந்த 3 மாநிலத் தேர்தல் முதலே வலுவாகவும், நம்பிக்கையுடனும் முன்னேறி மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

வெயில், மழை, பனியை பொருட்படுத்தாது 5 மாதங்களாக சுமார் 3,500 கிலோ மீட்டர் தூரம் பாரத் ஜோடோ யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு பெருத்த நம்பிக்கையோடு இருக்கிறார் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி. ராகுலின் யாத்திரை நாடு முழுவதும் எழுச்சியை உருவாக்கி இருப்பதாக காங்கிரஸ் கட்சி சொல்கிறது. நடைப்பயணத்துக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி முதன்முதலாக இம்மூன்று மாநில தேர்தல்களைத் தான் எதிர்கொள்ளவுள்ளது.

ராகுல் காந்தியின் இந்த யாத்திரையில் பல்வேறு எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டன, பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. எனவே வரும், மக்களவைத் தேர்தலுக்குள் எப்படியும் வலுவான கூட்டணியை அமைக்கவேண்டும் என்பதே காங்கிரசின் விருப்பம். அதற்கான முதல்படியாக இந்த தேர்தல்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கணக்குப் போட்டது கதர் கட்சி. ஏனென்றால், வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலங்களில் பாஜகவுக்கு அடுத்தபடியாக பலமாக இருப்பது காங்கிரஸ்தான். அதனால்தான் இந்த தேர்தல் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தேர்தலை எதிர்கொள்ளவுள்ள இந்த வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடியின மக்கள் அதிகமாக உள்ளனர். அதுபோல பழங்குடியின கட்சிகளும், போராட்ட இயக்கங்களும், தனி மாநிலம் - தனி நாடு கேட்கும் பல அமைப்புகளும் இங்கே செயல்பட்டு வருகின்றன. பண்பாடு, தட்பவெப்பம், வாழ்க்கைத்தரம், சூழலியல் என முற்றிலும் தனித்துவமான அரசியல் சூழல் வடகிழக்கில் நிலவுகிறது. எனவே, தேசிய கட்சிகள் வடகிழக்கின் அரசியலை மிகவும் லாவகமாகவே கையாண்டு வருகின்றன.

முன்பெல்லாம் இம்மாநிலங்களில் பழங்குடியின கட்சிகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தின. ஆனால், அசாம் மாநிலத்தில் ஆட்சியை பாஜக கைப்பற்றிய பின்னர், வடகிழக்கிலும் இதன் கரங்கள் நீண்டன. இப்போது இம்மாநிலங்களில் பாஜகவும் முக்கிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அதுபோல தேர்தலை எதிர்கொள்ளும் 3 மாநிலங்கள் உட்பட பல்வேறு வடகிழக்கு மாநிலங்களில் வங்கமொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். எனவே, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் இங்கே வளர்ந்துள்ளது.

நான்கு முனைப் போட்டியில் திரிபுரா:

திரிபுராவில் வெறும் 1.4 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் கடந்த 2018-ல் தனது 25 ஆண்டுகால ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. 2013 திரிபுரா தேர்தலில் வெறும் 1.54% சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 43.6% வாக்குகளுடன் அம்மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்றி அதிர வைத்தது. இதன் காரணமாகவே இந்த முறை வாக்குகளை சிதறவிடக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியையும் உள்ளடக்கி கூட்டணியை அமைத்துள்ளது சிபிஎம்.

திரிபுரா தேர்தலில் கம்யூனிஸ்ட் 47 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இது தேசிய அளவிலான கூட்டணிக்கான முக்கிய சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம், திரிபுராவில் முக்கிய கட்சியாக வளர்ந்துள்ள மற்றொரு எதிர்க்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் இங்கே தனியாக களம் காண்கிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து 2019-ல் பிரிந்து மாநிலக் கட்சியாக வளர்ந்து வரும் டிப்ரா மோதா கட்சியும் தனித்துப் போட்டியிடுகிறது. இதனால் 4 முனை போட்டியில் திரிபுரா தேர்தல் களம் சூடுபறக்கிறது.

மீண்டும் ‘கை’ வசம் வருமா மேகாலயா!

2018 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மேகாலயாவில் நடந்த அரசியல் கூத்துகள் காங்கிரஸை நிலைகுலையச் செய்தன. ஏனென்றால், மொத்தம் 60 இடங்கள் கொண்ட அம்மாநிலத்தில் 21 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் இருந்தது. மற்றொருபுறம் தேசிய மக்கள் கட்சி(என்பிபி) 20 இடங்களில் ஜெயித்திருந்தது. ஒருங்கிணைந்த ஜனநாயகக் கட்சி( யுடிபி) 6 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வென்றிருந்தது. இந்த சூழலில் யாரும் எதிர்பாராத வகையில் என்பிபி, பாஜக, யுடிபி கட்சிகள் சேர்ந்து ஆட்சியமைத்தன.

அத்தோடு விளையாட்டு முடியவில்லை. காங்கிரஸில் இருந்த 12 எம்எல்ஏ-க்கள் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி அந்தஸ்தை இழந்தது, திரிணமூல் எதிர்க்கட்சியானது. காலப்போக்கில் எல்லாரும் மாற்றுக் கட்சிகளில் இணைய 21 பேரில் ஒரு எம்எல்ஏ கூட இப்போது காங்கிரஸ் வசம் இல்லை.

இந்தத் தேர்தலில் ஆளும் என்பிபி கட்சி தனித்து போட்டியிடுகிறது. அதுபோல காங்கிரஸ், பாஜக, திரிணமூல் காங்கிரஸ், யுடிபி போன்ற முக்கிய கட்சிகளும் தனித்தனியாக களம் காண்கின்றன. இதனால் இங்கு 5 முனை போட்டி நிலவுகிறது. மேலும், பிடிஎஃப், ஹில்ஸ்டேட் பிடிஎஃப் போன்ற கட்சிகளும் தனித்தனியாக களம் காண்கின்றன. எனவே, இந்த முறையும் 2018 போல யாருக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றே கணிப்புகள் சொல்கின்றன.

நாகாலாந்தில் யாருக்கு வெற்றி?

இப்போதைக்கு எதிர்க்கட்சியே இல்லாத சட்டமன்றம் என்றால் அது நாகாலாந்துதான். மொத்தமுள்ள 60 இடங்களில் 41 எம்எல்ஏ-க்களை கைவசம் வைத்துள்ள என்டிபிபி கட்சியின் நெய்பியு ரியோ நாகாலாந்து முதல்வராக உள்ளார். பாஜக 12, என்பிஎஃப் 4, ஐஎன்டி 2 என அனைத்து எம்எல்ஏ-க்களும் ஒரே கூட்டணியில் உள்ளனர். தற்போதைய தேர்தலில் என்டிபிபியும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. என்பிஎஃப், காங்கிரஸ் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. அதேசமயம், பிஹாரில் காங்கிரஸின் கூட்டாளியாக உள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் இம்மாநிலத்தில் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இங்கு தனித்தே போட்டியிடும் எனத் தெரிகிறது. இதனால், நாகாலாந்திலும் நான்கு அல்லது ஐந்து முனை போட்டி ஏற்படும் சூழல் இருக்கிறது.

இந்த மூன்று மாநில தேர்தல்களில் காங்கிரஸ் நினைத்ததில் ஒன்று மட்டுமே நடந்துள்ளது. அதாவது, திரிபுராவில் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கூட்டணி சாத்தியமாகியுள்ளது. ஆனால், மற்றொரு முக்கிய எதிர்க்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சியை அவர்களின் கூட்டணிக்குள் கொண்டுவர முடியவில்லை. அதுபோல ஜேடியு, என்சிபி, ஆர்ஜேடி கட்சிகளை ஒருங்கிணைப்பதிலும் காங்கிரஸ் தடுமாறுகிறது. இதனால் மூன்று மாநிலங்களிலும் பலமுனை போட்டி வெடித்துள்ளது.

இந்த பலமுனை போட்டி பாஜகவுக்கே சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. இதனால் ஒன்று பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் அல்லது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனாலும், பாஜக தனக்கு சாதகமான அரசை உருவாக்கும். எனவே, காங்கிரஸ் இனியாவது தனது கூட்டணி அணுகுமுறை மற்றும் உத்திகளை மாற்ற வேண்டும், இல்லையெனில் 2024 மக்களவைத் தேர்தலிலும் பலமுனை போட்டி உருவாகி பாஜகவுக்கே பலன்கொடுக்கும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in