அதிமுக ஆட்சியில் லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்ததாக புகார்: தமிழகம் முழுவதும் ஆவினில் 236 ஊழியர்கள் பணிநீக்கம்

அதிமுக ஆட்சியில் லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்ததாக புகார்: தமிழகம் முழுவதும் ஆவினில் 236 ஊழியர்கள் பணிநீக்கம்

அதிமுக ஆட்சியின் போது 2020,2021-ம் ஆண்டுகளில் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் ஆவின் தலைமையகங்களில் நேரடியாக நியமிக்கப்பட்ட 236 ஊழியர்களை ஆவின் நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது.

அதிமுக ஆட்சியின் போது ஆவின் நிர்வாகத்தில் பெருமளவு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக பணிநியமனங்களில் விதிமுறை மீறல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆகஸ்ட் 2020 முதல் மார்ச் 2021-ம் ஆண்டு வரை, மேலாளர் (கணக்கு, விவசாயம், பொறியியல், தீவனம், பால்பண்ணை- தரக்கட்டுப்பாடு) மற்றும் துணை மேலாளர் (கணினி, பால்வளம் மற்றும் சிவில்), தொழில்நுட்பவியலாளர் (குளிர்பதனம்- கொதிகலன்), நிர்வாக, இளநிலை பொறியாளர், தொழிற்சாலை உதவியாளர்கள், ஓட்டுநர்கள் என 236 பேர் விதிகளை மீறி நேரடியாகப் பணியமர்த்தப்பட்டதாக புகார் எழுந்தது.

அத்துடன் திருப்பூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், விருதுநகர், திருச்சி, தேனி மற்றும் சென்னையில் உள்ள ஆவின் தலைமையகத்தில் இவர்களின் நியமனத்துக்குப் பிறகு, தகுதியில்லாத பலர் பணி நியமனம் செய்யப்பட்டு, விதிகளை மீறி வேலை வழங்கப்படுவதாக ஆவின் நிர்வாகத்துக்கு புகார்கள் குவிந்தன. அத்துடன் பணிநியமனம் பெற 10 லட்சம் முதல் 30 லட்ச ரூபாய் வரை லஞ்சம் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து ஜூலை 2021-ம் ஆண்டு அப்போதைய ஆவின் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி தலைமையிலான நடைபெற்ற விசாரணையில், தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் 1985-ல் பரிந்துரைக்கப்பட்ட பல முறைகேடுகள் மற்றும் ஆட்சேர்ப்பு விதிமுறைகளின் மீறல்கள் கண்டறியப்பட்டன. மேலாளர் மற்றும் துணை மேலாளர்களின் 48 பணியிடங்கள் தகுதியின்றி மாவட்ட தொழிற்சங்கங்கள் மூலம் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நிரப்பப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுடன் சட்டவிரோதமாக வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு உடந்தையாக இருந்ததாக 26 அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆவின் நிர்வாகம் தற்போது பரிந்துரைத்துள்ளது. விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகத்தின் விசாரணைக்குப் பிறகு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் விருதுநகர்,தேனி, திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களின் நிர்வாகக் குழுக்களைக் கலைத்து, கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்காத திருப்பூர் மாவட்டச் சங்க செயல் அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் ஆவின் பரிந்துரைத்துள்ளது. மேலும், விருதுநகர், திருச்சி, நாமக்கல் மாவட்ட தொழிற்சங்கங்களில் பணிபுரிய தகுதியற்ற 6 பணியாளர்களுக்கு ரூ.2.47 லட்சம் அபராதம் விதிக்கவும் ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in