
``பெட்ரோல் குண்டை அரசே வீச சொல்லுமா? இவர்களின் அரசியலை மக்கள் பார்த்துக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். இந்த அரசியல் நிச்சயம் எடுபடாது'' என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கருக்கா வினோத். இவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதனைப் பற்ற வைத்து நேற்று (25.10.2023) பிற்பகல் ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசியுள்ளார். உடனடியாக அங்கு இருந்த பாதுகாப்பு போலீஸார் விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் அவனை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மற்றும் அதிமுக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தன. சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ‘’ஆளுநர் மாளிகைக்கு வெளியே பெட்ரோல் குண்டு வீசப்பட்டவர் உடனே கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகைக்கு முழு பாதுகாப்பு உள்ளது. தமிழக அரசின் மீதும், தமிழக மக்கள் மீதும் வெறுப்புணர்வை தொடர்ந்து பரப்பி கொண்டிருக்கின்ற முதல் நபர் ஆளுநர் தான்.
நாங்கள் எப்போதும் ஆளுநர் மீது வெறுப்புணர்வை பரப்பவில்லை. எதிர்க்கட்சி தலைவர் போல் ஆளுநர் பிரச்சாரம் செய்கிறார். நாங்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீச வேண்டிய அவசியம் கிடையாது.
ஆளும்கட்சித்தான் பெட்ரோல் குண்டு வீசியது போல பேசுவது அவசியமற்றது. மக்களுக்கு நன்கு தெரியும் இவர்களின் அரசியல் என்னவென்று. நிச்சயமாக மக்களிடம் எடுபடாது. குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்துவோம். அரசின் சார்பில் ஆளுநர் மாளிகைக்கு முழு பாதுகாப்பு தரப்பட்டுள்ளது’’ என்றார்.