`விரைவில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்'- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

`விரைவில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்'- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Updated on
2 min read

"மிச்சம் இருக்கிற 15 சதவீத தேர்தல் வாக்குறுதியும் விரைவில் இந்த முத்துவேல் கருணாநிதி என்னும் ஸ்டாலின் நிறைவேற்றுவான்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவாரூரில் இன்று நடைபெற்ற தலையாமங்கலம் பாலு அவர்களின் இல்லத் திருமண விழாவுக்குத் தலைமையேற்று முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில், "தமிழ்மொழியில் திருமணம் நடைபெற்றது மகிழ்ச்சியை தருகிறது. சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது அண்ணா தலைமையிலான திமுக அரசு. தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் பற்றி நேரடியாக தெரிந்து கொள்ள வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி அதற்காக தான் உருவாக்கப்பட்டது முதலமைச்சருடைய கள ஆய்வு திட்டம். முதல் ஆய்வு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் அடங்கிய அதிகாரிகளை அழைத்து இரண்டு நாட்கள் ஆய்வுகள் நடத்தினேன். சட்ட ஒழுங்கு பிரச்சினை குறித்து காவல்துறை அதிகாரியுடன் ஆய்வு நடத்தினேன். அதற்கு அடுத்து இரண்டாம் கட்டமாக கொங்கு மண்டலத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி ஆய்வு நடத்தினேன். அதைத்தொடர்ந்து மூன்றாவதாக வரும் 5-ம் தேதி மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி ஆய்வை நடத்த இருக்கிறேன். அதேபோல் தஞ்சாவூர், திருவாரூருக்கு வரப்போகிறேன்.

எதற்காக நான் சொல்கிறேன் என்று சொன்னால், ஏதோ திட்டங்களை அறிவித்துவிட்டோம், அது நடந்து விடும் என்று ஓய்வெடுத்து விட்டு நாங்கள் ஒதுங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். அங்கு எப்படி திட்டம் நடக்கிறது, ஏன் நடக்கவில்லை என்பதை கூர்ந்து ஆழ்ந்து கவனித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கூடியவர்தான் இன்றைக்கு நீங்கள் பெற்றிருக்கிற முதலமைச்சர் இந்த மு.க.ஸ்டாலின் என்பதை உறுதியோடு சொல்கிறேன். நம்முடைய தோழர் முத்தரசன் பேசுகிறபோது, திடீரென ஏற்பட்ட மழையால் ஏற்பட்ட சேதாரங்கள் குறித்து சொன்னார். இதனால் விவசாயிகள் எந்த அளவுக்கு துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகி இருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. அதனால் தான் உடனடியாக ஈரோடு இடைத்தேர்தலில் அமைச்சர்கள் இருந்தாலும் நம்மளுக்கு உடனடியாக தேவை அங்கு பாதிக்கப்பட்டிருக்கிற விவசாயிகளுக்கு நிவாரணம். உடனடியாக வேளாண் துறை அமைச்சரும், உணவுத்துறைத்துறை அமைச்சரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் போன்ற மாவட்டங்களுக்கு நீங்கள் உடனடியாக செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டு பாதிக்கப்பட்ட இடங்களை எல்லாம் பார்த்தார்கள். நிவாரணம் என்ன வேண்டும் என்று அவர்கள் ஆய்வு நடத்தினார்கள். அதிகாரிகளுடன் சென்று அந்த பணியை நிறைவேற்றினார்கள். இன்னும் ஒரு வாரத்தில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்பதை உறுதியாக சொல்கிறேன்.

திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர்
திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர்

எதற்காக நான் இதை சொல்கிறேன் என்றால், எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். எதை நிறைவேற்றவில்லை. நிதி பற்றாக்குறையால் ஒன்று இரண்டு நிறைவேற்றப்படாமல் இருக்கக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. நிதி மட்டும் முறையாக இருந்திருந்தால், கஜானாவில் நீங்கள் ஒழுங்காக பணம் வைத்திருந்தால் நாங்கள் அதை நிறைவேற்றி இருப்போம். தமிழக அரசை கடனாளியாக ஆக்கிவிட்டு சென்ற காரணத்தினால்தான் அனைத்து சவால்களை சந்தித்து இருக்கிறோம். 85 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம் என்று தொடர்ந்து சொல்கிறோம். மிச்சம் இருக்கிற 15 சதவீத தேர்தல் வாக்குறுதியும் விரைவில் இந்த முத்துவேல் கருணாநிதி என்னும் ஸ்டாலின் நிறைவேற்றுவான் என்பதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்கிறேன். அந்த நம்பிக்கையோடு நீங்கள் இருங்கள்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in