கிருஷ்ணசாமி நடத்திய அனைத்துக் கட்சி கூட்டம்: பேசப்பட்டது என்ன?

கிருஷ்ணசாமி நடத்திய அனைத்துக் கட்சி கூட்டம்: பேசப்பட்டது என்ன?
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி சென்னையில் இன்று அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். தமிழகத்தில் நடைபெறக்கூடிய நாடாளுமன்ற, சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்களில் நடைபெறும் மிதமிஞ்சிய பணப்பட்டுவாடாவைத் தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தை மீட்டெடுப்பது தொடர்பான இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும்படி பல்வேறு கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இக்கூட்டத்தில், பாரதிய ஜனதா கட்சி, அமமுக, சமாஜ்வாடி கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, தேசிய மக்கள் கட்சி, தென்னிந்திய பார்வர்டு பிளாக், இந்து மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி, தமிழ்நாடு நாடார் பேரவை, தமிழ் தன்னுரிமை இயக்கம் ஆகிய 15 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் என்ன பேசப்பட்டது, என்ன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி பத்திரிகையாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது: ஜனநாயகம் என்பது ஒவ்வொரு தனி மனிதருடைய பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமையோடு சுருங்கி விடுவதில்லை. அது தங்களுக்கான ஓர் அரசை தாங்களே சுதந்திரமாக தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் உள்ளடக்கியதே. எவ்விதமான வெளித்தூண்டுதல்களுக்கும் ஆளாகாமல் வாக்குரிமைபெற்ற அனைவரும் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தங்களுடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதே உலகெங்கும் ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கக் கூடிய நடைமுறையாகும்.

எங்கிருந்தோ வந்தவர்கள் நம்மை அடக்கி ஆண்ட நிலைகளை மாற்றி, நம்மை நாமே ஆண்டுகொள்வதற்காக, ஏறக்குறைய 200 ஆண்டுகாலம் போராட்டம் நடத்தியே இந்த வாக்குரிமைச் சுதந்திரத்தைப் பெற்றோம். அதற்காக நாம் அதிக விலை கொடுத்து இருக்கிறோம். பலரது உயிர்த் தியாகங்களால் போராடிப் பெற்ற அந்த வாக்குரிமையை அண்மைக்காலமாக தமிழகத்தில் காசு, பணம், பரிசுப் பொருட்கள் என ஆசை வார்த்தைகள் காட்டி அபகரிக்கும் ஆபத்தான போக்குகள் அதிகரித்துவிட்டன.

மக்களிடம் கொள்கை- கோட்பாடுகளை எடுத்துச்சொல்லி வாக்குகளைப்பெற்று மக்களுக்கு பணியாற்றும் இடத்திற்கு வர முடியும் என்பதுதான் ஜனநாயகம். ஆனால், அதை எல்லாம் அடியோடு அழித்தொழித்து கோடி கோடியாகப் பணத்தை வாரி இரைக்கக்கூடியவர்களே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற சூழலும், வாக்காளர்களுக்கு பணமாகவும் பரிசுப் பொருட்களாகவும் கொடுத்து அவர்களை ஊழல் படுத்தி, அவர்களது மனங்களை மாற்றி வாக்குகளை பெறும் அவல நிலையும் இன்று உருவாகியிருக்கிறது.

இடைத்தேர்தல்களில் ஒளிந்தும் மறைந்தும் மூலைமுடுக்குகளில் வாக்குக்கு பணம் கொடுக்க தொடங்கிய அந்த நோய், இப்போது நாடாளுமன்ற, சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் பெரும் தொற்றாகப் பரவி இருக்கிறது. வாக்காளர்களே விரும்பாவிட்டாலும் அவர்களுடைய கைகளிலும், பைகளிலும் வலிந்து காசு பணங்களை, பரிசுப் பொருட்களைத் திணித்து அவர்களுடைய மனங்களை மாற்றியதால், இப்போது வாக்காளர்களே அரசியல் கட்சிகளிடம் பணத்தைக் கேட்டுபெறும் நிலை உருவாகி இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் என்றால் தொகுதிக்கு ரூபாய் 50 முதல் 100 கோடி, சட்டமன்ற தேர்தல் என்றால் ரூபாய் 25 முதல் 50 கோடி, உள்ளாட்சித் தேர்தல் என்றால் ரூபாய் 5 முதல் 10 கோடி என செலவழிக்க வாய்ப்புள்ள புதிய நிலப்பிரபுக்கள், நிலச்சுவாந்தார்கள், அரசியலால் முதலாளிகள் ஆனவர்கள் மட்டுமே தேர்தல்களில் போட்டியிட முடியும்; வெற்றி பெற முடியும் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வார்டுக்கு ரூபாய் 2 கோடி முதல் 10 கோடி வரையிலும் பணம், ஹாட் பாக்ஸ்கள், கொலுசுகள், டோக்கன்கள் என இன்னும் வேறு பல விதங்களிலும் வழங்கப்பட்டிருக்கின்றன. இது போன்ற முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய தேர்தல் ஆணையங்கள் எப்படியாவது அந்த குறிப்பிட்ட தேர்தலை நடத்திவிட வேண்டும் என்று கருதுகிறார்களே தவிர, தேர்தல்கள் ஜனநாயக ரீதியாகவும், நேர்மையாகவும், முறையாகவும் நடத்த வேண்டும் என்று நினைப்பதே இல்லை. இதைவிட ஜனநாயகத்திற்கு கேடான, தீங்கான செயல் வேறெதுவும் இருக்க முடியாது.

எனவே, இனிவரும் காலங்களில் தமிழகத்தில் நடைபெறக்கூடிய நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் பொதுத்தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்களில் மிதமிஞ்சிய பணப்பட்டுவாடா முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தை மீட்டெடுக்க இந்திய தேர்தல் ஆணையமும், தமிழக தேர்தல் ஆணையமும் மிக விரிவான திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றம் செல்லவும், தமிழகம், டெல்லியில் போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ’வாக்குகள் விற்பனைக்கு அல்ல’ என்ற கருத்தை இயக்கமாக கொண்டு செல்லவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்க மே மாதம் முதல் தமிழகத்தில் முதற்கட்டமாக 100 பொதுக்கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in