
சமூக நீதிக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும், உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மை அமர்வுக்கும் எதிரானதாக ஒன்றிய அரசின் சட்டத் திருத்தம் அமைந்துள்ளதை நாம் எதிர்க்க வேண்டியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என மூன்று நீதிபதிகள் ஆதரவாகவும், 10 சதவீத இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பு வழங்கினர்.இந்த தீர்ப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துத் தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 340-வது பிரிவில் சமூகத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவர்கள் என வரையறையில் உள்ளது. அதே சொல்தான் அரசியல் அமைப்பு சட்டத் திருத்தத்திலும் சொல்லப்பட்டது. சமூக நீதி என்று சொல்லப்படும் இட ஒதுக்கீடே சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியவருக்குத் தர வேண்டும் என்பதுதான் இந்திய அரசியலமைப்பு சட்ட வரையறை. அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பொருளாதார அளவுகோலைப் புகுத்த நினைக்கிறது ஒன்றிய அரசு. அதன்படி ஒரு சட்டத்தை 2019-ம் ஆண்டு இயற்றினார்கள். அந்த சட்டத்தைத் தான் தற்போது உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் மூன்று நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு தீர்ப்பு அளித்துள்ளனர். சமூகத்தில் முன்னேறிய சாதி உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதுதான் பாஜக அரசின் திட்டம். இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய் விட்டது, திறமை போய்விட்டது என இதுவரை சொல்லி வந்த சிலர் இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். எந்த நோக்கம் அவர்களுக்குள் இருந்தாலும் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு முரணானது. அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானது.
முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்த போது பொருளாதாரத்தின் பின் தங்கியவர்கள் என்ற சொல்லையும் சேர்க்கச் சொல்லி சிலர் வலியுறுத்தினர். இதனைப் பிரதமர் நேரு ஏற்கவில்லை. சட்ட அமைச்சர் அம்பேத்கர் அவர்களும் ஏற்கவில்லை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 5 சதவீத வாக்குகள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவாகக் கிடைத்தது.
இந்திய நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட கருத்துதான் பொருளாதார அளவுகோல். இன்று 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 3 நீதிபதிகள் 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் 1992-ம் ஆண்டு ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வானது பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு செல்லாது என்பதை நினைவூட்டக் கடமைப் பட்டிருக்கிறேன். எனவே, தான் சமூக நீதிக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும், உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மை அமர்வுக்கும் எதிரானதாக ஒன்றிய அரசின் சட்டத் திருத்தம் அமைந்துள்ளதை நாம் எதிர்க்க வேண்டியதாக இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். முன்னேறிய வகுப்பினருக்கு உதவி செய்வதைத் தடுப்பதாக யாரும் இதைக் கருத வேண்டாம் ” என்று பேசினார்.