
மகாராஷ்டிரா அமைச்சரவை இன்று(ஜூலை 14) விரிவாக்கம் கண்டதில், தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவது தொடர்பான இழுபறி ஒருவாராக முடிவுக்கு வந்தது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில், அதன் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் தலைமையில் பெருமளவு எம்எல்ஏ மற்றும் எம்எல்சிக்கள், ஜூலை 2 அன்று ஆளும் சிவசேனா - பாஜக கூட்டணியில் ஐக்கியமானார்கள். உடனடியாக அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி ஒதுக்கப்பட்டது. தேசியவாத கட்சியின் எம்எல்ஏக்களில் 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
கடந்த 10 நாட்களாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின், அஜித் பவார் உள்ளிட்ட 9 அமைச்சர்களும் இலாகா இல்லாதவர்களாக நீடித்தனர். இலாகா ஒதுக்குவது தொடர்பாக கூட்டணியில் பிரச்சினை எழுந்ததே இதற்கு காரணம். பிரதான இலாக்கள் பலவற்றை அஜித் பவார் தலைமையிலானோர் கோரியதில், அவற்றை வகித்திருந்த சிவசேனா கட்சியினர் ஆட்சேபம் தெரிவித்து வந்தனர்.
வழக்கம்போல அமித் ஷா வசம் பஞ்சாயத்து சென்றதில் ஒருவழியாக தீர்வு காணப்பட்டு, இன்று மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் கண்டிருக்கிறது. துணை முதல்வரான அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டத்துறைகள் வழங்கப்பட்டன. அவர் அடம் பிடித்த உள்துறை, அதனை தன் வசம் வைத்திருந்த பாஜக துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மனமிறங்காததில் தட்டிப் போனது. மற்றபடி தேசியவாத கட்சியின் 8 இதர அமைச்சர்களில் கணிசமானோருக்கு கேட்ட இலாகாக்கள் கிடைத்துள்ளன.