‘அதிக மரியாதை கிடைக்கும் கட்சிக்கு செல்லுங்கள்’ - சித்தப்பாவை எச்சரிக்கும் அகிலேஷ் யாதவ்!

‘அதிக மரியாதை கிடைக்கும் கட்சிக்கு செல்லுங்கள்’ - சித்தப்பாவை எச்சரிக்கும் அகிலேஷ் யாதவ்!

அதிக மரியாதை கிடைக்கும் இடத்துக்கு நீங்கள் சுதந்திரமாக போகலாம் என தனது சித்தப்பாவும், ஜஸ்வந்த்நகர் எம்எல்ஏவுமான ஷிவ்பால் சிங் யாதவுக்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கடிதம் எழுதியுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணி வேட்பாளரை ஆதரவாக செயல்பட்ட காரணத்தால் சமாஜ்வாதி எம்எல்ஏ ஷிவ்பால் யாதவ் மற்றும் எஸ்பிஎஸ்பி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் ஆகியோர் மீது சமாஜ்வாதி கட்சி கடும் கோபத்தில் உள்ளது.

சமாஜ்வாதி கட்சி இன்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கடிதத்தில், "ஷிவ்பால் சிங் யாதவ் ஜி, உங்களுக்கு வேறு எங்காவது அதிக மரியாதை கிடைக்கும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் சுதந்திரமாக வெளியேறலாம்" என்று தெரிவித்துள்ளது.

அக்கட்சி ட்விட்டரில் வெளியிட்டுள்ள மற்றொரு கடிதத்தில், “ஓம் பிரகாஷ் ராஜ்பார் ஜி, சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக போராடி வருகிறது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து கட்சியை வலுப்படுத்த நீங்கள் பாடுபடுகிறீர்கள். வேறொரு இடத்தில் உங்களுக்கு அதிக மரியாதை கிடைக்கும் என்று நினைத்தால் நீங்கள் சுதந்திரமாக வெளியேறலாம்” என தெரிவித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவை வீழ்த்த தனது சித்தப்பா ஷிவ்பால் சிங் யாதவ் பாஜகவின் வழிகாட்டல்களின்படி செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதுவரை சமாஜ்வாதி கட்சி கூட்டணியில் இருந்த ஓம் பிரகாஷ் ராஜ்பரின் எஸ்பிஎஸ்பி கட்சி, நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்தது. அதனைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு அவருக்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in