மனம்மாறிய அகிலேஷ்... ஆஸம்கர் தொகுதியில் போட்டி?

யோகியால் உபி தேர்தலில் குதிக்கும் முதல்வர் வேட்பாளர்கள்
அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்hindu

இந்தமுறையும் தான் உபி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்திருந்த நிலையில், தேர்தலில் யோகி ஆதித்யநாத் களமிறங்க உள்ளதால் தனது முடிவை மாற்றியுள்ளார். அவர் ஆஸம்கர் தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற எம்பியாகவோ அல்லது எந்தப் பதவிகளும் இல்லாமலே நேரடியாக யார் வேண்டுமானாலும் முதல்வர் பதவியில் அமரலாம். ஆனால், அவர் பதவியேற்ற 6 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தலில் வென்று எம்எல்ஏவாவது அவசியம். குறைந்தபட்சம், அம்மாநிலத்தின் மேலவை உறுப்பினராகவாவது தேர்வாக வேண்டும். இதுபோன்ற மேல்சபைகள், இந்தியாவில் உத்தரப் பிரதேசம், பிஹார், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகம் ஆகிய 6 மாநிலங்களில் மட்டும் உள்ளன.

இதன் பலனை மற்ற அனைத்து மாநிலங்களைவிட, உபியில் முதல்வராக அமருபவர்கள் அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நடைபெறும் உபியின் சட்டப்பேரவை தேர்தலில் புதிய மாற்றம் உருவாகி உள்ளது. இதற்கு அங்கு ஆளும் பாஜகவின் முதல்வர் யோகி ஆதித்யநாத் காரணமாகி விட்டார். இவர், பாஜகவின் வேட்பாளராக தனது சொந்த மாவட்டமான கோரக்பூர் நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதனால், முதல்வர் யோகியை போன்றே உறுதியான வெற்றித் தொகுதியை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் தேடி வந்தார். இவருக்காக, முஸ்லீம்கள் மற்றும் யாதவர்கள் அதிகம் வசிக்கும் ஆஸம்கர் மாவட்டத்தின் கோபால்பூர் தொகுதி தேர்வாகி உள்ளதாகத் தெரிகிறது. உபியின் கிழக்குப்பகுதியிலுள்ள இந்த ஆஸம்கரின் மக்களவை தொகுதியில் தற்போதைய எம்பியாக உள்ளார் அகிலேஷ். எனவே, இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்hindu

போட்டியின் பின்னணி

கடந்த வருடம் நவம்பரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், இந்தமுறையும் தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருந்தார். உபியின் முன்னாள் முதல்வரான அவர் இந்தமுறையும் தனது கட்சியின் முதல் வேட்பாளராக உள்ளார். இவரது அறிவிப்புக்கு சற்று முன்னதாக பாஜக முதல்வரான யோகி ஆதித்யநாத், ’இந்தமுறை நான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடத் தயார்’ என்றார்.

நிலைப்பாட்டை மாற்றிய அகிலேஷ்

முதல்வர் யோகியின் அறிவிப்புக்குப் பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பால் அகிலேஷுக்கும் போட்டியிடும் கட்டாயம் உருவானது. முதல்வர் யோகியின் தேர்தல் போட்டி அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் அகிலேஷும் தனது நிலைப்பாட்டைப் பிறகு மாற்றிக் கொண்டார். இதன் மீது செய்தியாளர்கள் எழுப்பியக் கேள்விக்கு அவர் போட்டியிடுவதில், கட்சி எடுக்கும் முடிவுக்கு தாம் கட்டுப்படுவதாகப் பதில் அளித்தார்.

சமாஜ்வாதியின் களமாக கோபால்பூர்

இந்தத் தேர்தலில் அகிலேஷ் தேர்ந்தெடுக்கும் கோபால்பூரில், சமாஜ்வாதி அரசில் அமைச்சராக இருந்த நசீம் அகமது எம்எல்ஏவாக உள்ளார். இவருக்கு முன்பாக மற்றொரு முன்னாள் சமாஜ்வாதி அரசின் அமைச்சரான வசீம் அகமது, கடந்த 1996, 2002, 2012 என 3 முறை எம்எல்ஏவானார். இதனால், சமாஜ்வாதி கட்சியின் களமாகக் கருதப்படும் கோபால்பூரில் அதன் தலைவரே இந்தமுறை போட்டியிடுகிறார்.

முலாயம்சிங்
முலாயம்சிங்hindu

முலாயம்சிங் தொடங்கியக் கலாச்சாரம்

சமீப காலமாக உபியில் முதல்வர் பதவி ஏற்கும் கட்சி தலைவர்களில் பெரும்பாலானவர்கள், தேர்தலில் போட்டியிடாதவர்கள். சமாஜ்வாதி நிறுவனரான முலாயம்சிங் முதல்முறை முதல்வரான பின் இந்த வழக்கம் உபியில் தொடங்கியது. மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதியின் தற்போதைய தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜகவின் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். நாடாளுமன்ற எம்பியாக இருந்த இவர்கள், போட்டியின்றி உபி மேல்சபை மூலமாக அதன் முதல்வரானவர்கள்.

நெருக்கடிக்குள்ளான உபி துணை முதல்வர்கள்

முதல்வர் யோகி அறிவிப்பு அவரது துணை முதல்வர்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. மேலவை உறுப்பினராகி உபி துணை முதல்வராகப் பதவி வகிப்பவர்களான டாக்டர் தினேஷ் சர்மா மற்றும் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோரும் தேர்தலுக்காகத் தொகுதிகளை தேடத் தொடங்கி இருந்தனர். இதில், முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் துணை முதல்வரான கேசவ் பிரசாத் மவுரியாவின் பெயர் சிராத்துவில் போட்டி என வெளியாகிவிட்டது. மற்றொரு துணை முதல்வரான தினேஷ் சர்மாவின் பெயரும் பாஜகவின் வரவிருக்கும் வேட்பாளர்கள் பட்டியலில் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in