உத்தர பிரதேச எதிர்க்கட்சித் தலைவராகும் அகிலேஷ்!

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக நேற்று பதவியேற்றுக்கொண்ட நிலையில், அம்மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வாகிறார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.

உத்தர பிரதேச சட்டபேரவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 255-ல் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது பாஜக. இந்தத் தேர்தலில் பாஜகவுக்குக் கடும் சவாலை ஏற்படுத்திய சமாஜ்வாதி கட்சிக்கு 111 இடங்களே கிடைத்தன.

ஆஸம்கர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த அகிலேஷ் யாதவ், இந்தத் தேர்தலில் கர்ஹால் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். முதல் முறையாக அவர் எம்எல்ஏ-யாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ-க்கள் கூடி, அவரை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்திருப்பதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

மக்களவை உறுப்பினரான அகிலேஷ் யாதவ், உத்தர பிரதேச அரசியலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதால், எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு கர்ஹால் சட்டப்பேரவை உறுப்பினராக நீடிக்கிறார். சமாஜ்வாதி கட்சியின் வாக்குவங்கியாக இருக்கும் யாதவ்கள் மற்றும் முஸ்லிம்கள், பிற கட்சிகள் பக்கம் சென்றுவிடாமல் இருக்க அகிலேஷ் யாதவ், மாநில அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து எம்.பி பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவெடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய முக்கியப் பிரச்சினைகள் குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் அகிலேஷ் யாதவ் பேசவிருப்பதாகவும் சமாஜ்வாதி கட்சி செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in