யோகி அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம்: அகிலேஷ் யாதவை தடுத்து நிறுத்திய போலீஸ்!

யோகி அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம்: அகிலேஷ் யாதவை தடுத்து நிறுத்திய போலீஸ்!

உத்தரபிரதேச சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்புவதற்காக, அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியினர் சட்டமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றதை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இன்று காலை லக்னோவில் தொடங்கிய பேரணிக்கு தலைமை தாங்கிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், 100 மீட்டர் தூரம் நடந்து சென்றபோது, அந்த வழியில் பேரணி நடத்த அனுமதி இல்லை என்று போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர்.

சமாஜ்வாதி கட்சியின் பேரணி குறித்து பேசிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "ஜனநாயக வழியில் எந்தக் கட்சியும் தங்கள் கேள்விகளைக் கேட்டால் எந்தப் பாதிப்பும் இல்லை. யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஊர்வலத்திற்கு சமாஜ்வாடி அனுமதி பெற வேண்டும்" என்று கூறினார்.

லக்னோவில் சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தில் தொடங்கி, ராஜ்பவன், காந்தி சிலை மற்றும் பொது தபால் நிலையம் வழியாக பேரணி நடைபெறும் என்று அக்கட்சி கூறியது. ஆனால், அவர்களின் பேரணியை போலீஸார் தடுத்ததையடுத்து, அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது கட்சித் தலைவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறி கட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.

இது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சி, “பேரணிக்கு அனுமதியளிக்காமல் பாஜக அரசு ஜனநாயகத்தைக் கொன்று வருகிறது" என்று தெரிவித்தது. சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் இந்த பேரணியின் போது வேலையின்மை, விலைவாசி உயர்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மாநிலத்தில் உள்ள மோசமான சட்டம்-ஒழுங்கு நிலைமை போன்ற பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டிருந்தனர்.

இது தொடர்பாக பேசிய சமாஜ்வாதி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி, "பழிவாங்கும் மனநிலையுடன் பாஜக அரசு செயல்படுவதால் சமூக நல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்கு மாறாக, பாஜக வெறுப்பு அரசியலை செய்கிறது” என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in