2024 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி போட்டி: அகிலேஷ் யாதவ் அதிரடி!

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்2024 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி போட்டி: அகிலேஷ் யாதவ் அதிரடி!

காங்கிரஸின் கோட்டையாக இருந்த அமேதி தொகுதியில் வரும் 2024 மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளரை நிறுத்தலாம் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவரும், உ.பி.யின் முன்னாள் அமைச்சருமான காயத்ரி பிரசாத் பிரஜாபதியின் மகள் திருமணத்திற்காக நேற்று அமேதிக்கு அகிலேஷ் யாதவ் சென்றிருந்தார். அது தொடர்பாக அவரின் ட்வீட்டில், “அமேதியில் ஏழைப் பெண்களின் நிலையைப் பார்த்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். விஐபிகள் எப்போதும் இங்கு வெற்றியும் தோல்வியும் அடைந்துள்ளனர், ஆனால் இங்கே நிலைமை இப்படியேதான் இருக்கிறது. அடுத்த முறை அமேதியில் பெரிய ஆட்களைத் தேர்ந்தெடுக்காமல், பெரிய உள்ளம் கொண்டவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அமேதியில் இருந்து வறுமையை ஒழிக்க சமாஜ்வாதி கட்சி உறுதிமொழி எடுக்கிறது" என்று பெண்கள் தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

காங்கிரஸின் கோட்டையாக கருதப்பட்ட அமேதி நாடாளுமன்றத் தொகுதியில் தற்போது பாஜகவின் ஸ்மிருதி இரானி எம்.பியாக உள்ளார். அவர் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தோற்கடித்தார். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பெயரை குறிப்பிடாமல் அவரைத் தாக்கிய அகிலேஷ் யாதவ், “ நிச்சயமாக 2024 மக்களவைத் தேர்தலில் அவரை தோற்கடிக்க வேண்டும். முன்பு, பாஜகவினர் தலையில் சிலிண்டரைச் சுமந்து வந்தனர். இன்று, பணவீக்கம் உச்சத்தில் உள்ளது, ஆனால் அவர்களிடம் பதில் இல்லை” என்று தொகுதி மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

அமேதி தொகுதியில் சமாஜ்வாதி போட்டியிடும் என சூசகமாகத் தெரிவித்துள்ளதன் மூலமாக, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட அகிலேஷ் தயாராகிவிட்டார் என்பது தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in