உ.பி தேர்தல் பிரச்சாரத்தில் இடம்பெறாத லாலு மகன்; அழைப்பு விடுக்காத அகிலேஷ்: பின்னணி என்ன?

உ.பி தேர்தல் பிரச்சாரத்தில் இடம்பெறாத லாலு மகன்; அழைப்பு விடுக்காத அகிலேஷ்: பின்னணி என்ன?
தேஜஸ்வி - அகிலேஷ்

உத்தரப்பிரதேசம் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வீ பிரசாத் யாதவ் இம்முறை பிரச்சாரம் செய்யவில்லை. தனது சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு கேட்டு அகிலேஷும், தேஜஸ்வியை அழைக்கவில்லை.

பாஜகவின் எதிர்கட்சிகளில் முக்கியமானது ஆர்ஜேடி. இக்கட்சியின் சார்பில் பிஹாரின் துணை முதல்வராகவும் தேஜஸ்வீ பிரசாத் யாதவ் இருந்திருக்கிறார். கடந்த பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் சுமார் 15 தொகுதிகள் வித்தியாசத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இவர்கள் இழந்தது குறிப்பிடத்தக்கது.

தேஜஸ்வீயின் கட்சியை போலவே உபியின் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங், யாதவர் மற்றும் இஸ்லாமியர் ஆதரவில் அரசியல் மேற்கொண்டு வருகிறார். இதனால், ஒவ்வொரு உ.பி தேர்தலிலும் சமாஜ்வாதி சார்பில், லாலுவை பிரச்சாரத்திற்கு அழைப்பது வழக்கம்.

ஆனால், தற்போது உபியின் சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக நடைபெற்று வரும் தேர்தலில் ஆர்ஜேடி தலைவர்கள் எவரும் இடம்பெறவில்லை. இதை உபியில் ஆளும் பாஜகவும் தனது பிரச்சார மேடைகளில் குறிப்பிட்டு விமர்சனம் செய்து வருகிறது.

இது குறித்து பிஹார் மாநில பாஜக துணைத் தலைவரான ராஜீவ் ரஞ்சன் கூறும்போது, ‘ஆர்ஜேடியின் தேஜஸ்வீ இதுவரை உபி சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்திற்காக எந்த கட்சியாலும் அழைக்கப்படவில்லை. இவரை போன்ற குடும்பக் கட்சியான சமாஜ்வாதிகூட தேஜஸ்வீயை கண்டுகொள்ளவில்லை. இதற்கு ஆர்ஜேடியிடன் ஊழல் தவிர வேறு எதுவும் இல்லை என்பது காரணம். தன் காலில் தானே கோடாலியால் வெட்டுவது போலாகும் என்பதால், பிஹாரில் கூட்டணியாக செயல்படும் காங்கிரஸும் இவர்களை அழைக்காது தவிர்த்துள்ளது’ எனத் தெரிவித்தார்.

இதன் பின்னணியில் மற்றுமொரு காரணமும் கூறப்படுகிறது. உ.பி அரசியல் சாதிமத ஆதிக்கம் நிறைந்தது என்பதால், இதற்கு தேஜஸ்வீ பொருந்த மாட்டார் என சமாஜ்வாதி கருதியதே காரணம் எனத் தெரிகிறது. ஏனெனில், கடந்த வருடம் டிசம்பரில் தேஜஸ்வீ மணமுடித்த ஹரியானா பெண், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என சொல்லப்படுகிறது. இதைக் குறிப்பிட்டு பாஜக கூட்டணி விமர்சனம் செய்யும் வாய்ப்புள்ளதால், தேஜஸ்வீ இந்த தேர்தலில் தவிர்க்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

தேஜஸ்வீ தந்தையான லாலு, கால்நடைதீவன ஊழலின் ஐந்தாவது வழக்கிலும் அண்மையில் தண்டனை பெற்றுள்ளார். இது தவிர்த்து லாலுவின் உடல்நலனும் மேலும் குன்றியுள்ளது. இந்த சூழலில் லாலுவால் பிரச்சாரத்திற்கு வர முடியாது என்பதாலும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று சமாஜ்வாதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உ.பி சட்டப்பேரவை தேர்தலில் இன்றைய தினம்(பிப்.20) மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதர 4 கட்ட வாக்குப்பதிவுகளும் முடிந்த பின்னர், உ.பி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மார்ச் 7 அன்று வெளியாக உள்ளன.

Related Stories

No stories found.