‘வேண்டும் மறுவாக்குப்பதிவு!’

கொந்தளிக்கும் அகிலேஷ்
‘வேண்டும் மறுவாக்குப்பதிவு!’

’ராம்பூர் இடைத்தேர்தலில் சமாஜ்வாடி தொண்டர்கள் முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்படாததால், அங்கு மறுவாக்குப்பதிவுக்கு உடனடியாக தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்’ என்கிறார் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்.

உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் தொகுதிக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரான ஆகாஷ் சக்சேனா வெற்றி பெற்றுள்ளார். சமாஜ்வாடி வேட்பாளரான அசிம் ராஜா தோல்வி அடைந்துள்ளார். ராம்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அஸம் கான், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதாக 3 ஆண்டு சிறை தண்டனைக்கு ஆளானார். அதனால் காலியான அவரது தொகுதியில் டிச.5 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

இடையில் ஒருமுறை வெற்றிவாய்ப்பை இழந்தது தவிர, 1980 முதல் அஸம் கானின் ஆஸ்தான வெற்றித்தொகுதியாக விளங்குவது ராம்பூர். இதன் காரணமாகவும் அஸம் கானின் பிரதிநிதியாக நிறுத்தப்பட்டதாலும், சமாஜ்வாடி வேட்பாளர் அசிம் ராஜாவின் வெற்றியை மிகவும் எதிர்பார்த்திருந்தார் அகிலேஷ் யாதவ்.

அகிலேஷ் யாதவ் - அஸம் கான்
அகிலேஷ் யாதவ் - அஸம் கான்

ஆனால் அங்கே பாஜக வேட்பாளர் வென்று ராம்பூர் தொகுதியில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சியினரை வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க விடாது விரட்டியடிக்கப்பட்டதே பாஜக வெற்றிக்கு காரணம் என குற்றம்சாட்டுகிறார் அகிலேஷ் யாதவ். அங்கு வாக்குப்பதிவு சுமார் 30 சதவீதம் மட்டுமே பதிவாகி இருப்பதை இதற்கு சான்றாக அவர் காட்டுகிறார்.

பாஜகவினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து அராஜகத்தை நடத்தியிருப்பதாகவும், இது தொடர்பான புகார்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செவிமெடுக்கவில்லை எனவும் சமாஜ்வாடி குற்றம்சாட்டுகிறது. இந்த புகார்களை ராம்பூர் மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது.

ராம்பூர் தொகுதியின் ஜனநாயகத்தை உறுதிசெய்ய அங்கு ’உடனடியாக மறுவாக்குப்பதிவு நடத்துமாறு’ இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அகிலேஷ் யாதவ் கோரிக்கையும் வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in