யோகி அரசு வேண்டுமா, யோக்கிய அரசு வேண்டுமா?

அகிலேஷ் யாதவ் அதிரடி
அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்கோப்புப் படம்

‘யோகி தலைமையிலான பாஜக அரசு விளம்பரத்தில்கூட பொய் சொல்லும் அரசு’ எனச் சாடியிருக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “யோகி அரசு வேண்டுமா அல்லது யோக்கியமான அரசு வேண்டுமா என்பதைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள்” என தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கியிருக்கிறார்.

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கியிருக்கும் கட்சிகள், பரஸ்பரம் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் முன்வைத்துவருகின்றன. அந்த வகையில், பாந்தா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசிய அகிலேஷ் யாதவ், யோகி அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

“பெட்ரோல், டீசலின் விலை விண்ணைத் தொடுகிறது. ஏழைகள் வாகனமே ஓட்ட முடியாத அளவுக்கு அவற்றின் விலை உயர்ந்திருக்கிறது. ‘ஹவாய் செருப்பு அணிந்துசெல்பவர்களை ‘ஹவாயி ஜஹா’ஜில் (விமானத்தில்) அமரவைப்போம்’ என்று சொன்னவர்கள் இவர்கள். ஆனால், இன்று எல்லாப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது” என்று பேசிய அகிலேஷ், “யோகி ஆட்சி வேண்டுமா அல்லது யோக்கிய (செயல் திறனுள்ள) ஆட்சி வேண்டுமா?” என்று வாக்காளர்களை நோக்கிக் கேள்வி எழுப்பினார்.

யோகி ஆட்சியில் உத்தர பிரதேசம் பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டதாகவும், வளர்ச்சி எனும் பெயரில் பாஜகவினர் வெளியிடும் விளம்பரங்களில் கொல்கத்தா மேம்பாலங்கள், அமெரிக்கத் தொழில் நிறுவனங்களின் படங்கள்தான் இடம்பெறுகின்றன என்றும் அகிலேஷ் குறிப்பிட்டார்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்கோப்புப் படம்

இந்தத் தேர்தலில், சைக்கிள், யானை, தாமரை என அரசியல் கட்சிகளின் வழக்கமான சின்னங்களைத் தாண்டி, புல்டோசர் எனும் வார்த்தைதான் பிரதானமாகப் பேசப்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்களின் கட்டிடங்கள், வீடுகளை புல்டோசர்கள் மூலம் தகர்த்துவிட்டு ஏழைகளுக்காக அந்த நிலங்களைப் பயன்படுத்துவதாக பாஜகவினர் பெருமிதத்துடன் சொல்லிக்கொள்கிறார்கள். அவர்களது பிரச்சாரப் பாடல்களிலும் புல்டோசர் எனும் வார்த்தை இடம்பெறுகிறது. மறுபுறம், ஏழைகளின் குடிசைகளையும் சேர்த்துதான் பாஜக அரசின் புல்டோசர்கள் இடித்துத் தரைமட்டமாக்கியிருக்கின்றன என சமாஜ்வாதி கட்சியினர் விமர்சிக்கிறார்கள். அயோத்தி ராமர் கோயில் கட்டும் பணிகளுக்காகப் பல ஏழைகளின் குடிசைகள் இடிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், இன்றைய தேர்தல் பிரச்சாரத்தின்போது, இது புல்டோசர்களின் அரசு என விமர்சித்த அகிலேஷ், “புல்டோசர்கள் சாலையில்தான் இயக்கப்பட வேண்டும்; மக்கள் மீது அல்ல. இந்த முறை மக்கள் அளிக்கப்போகும் வாக்குகளின் புல்டோசர், பாஜகவை இருந்த இடம் தெரியாமல் செய்துவிடும்” என்றும் சூளுரைத்தார்.

அகிலேஷ் முதல்வராக இருந்தபோது உத்தர பிரதேச இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் முறைகேடு நடந்ததாக யோகி குற்றம்சாட்டினால், “உங்கள் அரசு எத்தனை பேருக்கு வேலை தந்தது?” என்று அகிலேஷ் திருப்பி அடிக்கிறார். இப்படிப் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து இருவருக்கும் இடையில் வார்த்தைப் போர் நடந்துவருகிறது.

இந்தத் தேர்தலில், அகிலேஷுக்கும் யோகிக்கும் இடையில்தான் பிரதானமான பலப்பரீட்சை நடக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in