மாயாவதியால் ஆளும் வாய்ப்பை இழந்த அகிலேஷ்

எதிர்க்கட்சிகளின் பிளவால் வென்ற பாஜக
மாயாவதியால் ஆளும் வாய்ப்பை இழந்த அகிலேஷ்

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் படைக்கு மத்தியில் தனி ஒருவராக நின்று சமாளித்தார் அகிலேஷ்சிங் யாதவ். சமாஜ்வாதி தலைவரான இவருக்கு எதிர்க்கட்சிகள் இடையிலான வாக்குகளின் பிளவால், ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தவறியுள்ளது. இவரது சகஎதிர்க்கட்சிகளான மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸின் வாக்குகள் பிரிந்து பாஜகவிற்கு பலனளித்துவிட்டன. பிரிந்த இவ்விரண்டு கட்சியின் வாக்குகளும் சமாஜ்வாதிக்கு கிடைத்திருந்தால், அகிலேஷ்சிங் இரண்டாவது முறையாக முதல்வராகி இருப்பார். இந்த பிளவு சதவீதத்தில் கணக்கிட்டால் நமக்கு தெளிவாகப் புரிந்து விடும்.

கடந்த 2017 தேர்தலில் 21 சதவீத வாக்குகளுடன் 47 தொகுதிகளை பெற்றார் அகிலேஷ். இந்தமுறை அது 32 சதவீதமாக உயர்ந்து இரண்டு மடங்கிற்கும் அதிகமாக 111 தொகுதிகள் கிடைத்துள்ளன. எதிர்க்கட்சிகள் இடையே பிரிந்த வாக்குகள் பாஜகவின் சதவீதத்தை 39 லிருந்து 42 என உயர்த்திவிட்டன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் 22.23 சதவீத வாக்குகள் வெறும் 12.5 சதவீதமாகக் குறைந்துள்ளன. 2017-ல் பிஎஸ்பிக்கு கிடைத்த 17 தொகுதிகள், ஒன்றாகச் சுருங்கியது. காங்கிரஸுக்கு 6 சதவீதத்துடன் இருந்த 7 தொகுதிகள் வெறும் 2-2 என்றானது.

இதுபோன்ற பிளவிற்கு பல்வேறு காரணங்கள் வெளியாகி உள்ளன. முக்கியமாக இந்தமுறை தேர்தலில் பிஎஸ்பி தலைவர் மாயாவதியின் நடவடிக்கை. 66 வயதான மாயாவதி, கரோனாவிற்கு பிறகு பொதுமக்களை சந்திப்பை நிறுத்தினார். தேர்தல் பிரச்சாரங்களின் பொதுக்கூட்டங்கள் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைத்தார். இதனால், மாயாவதியை கண்டு மகிழ்வுறும் முக்கிய வாக்காளர்களான ஜாட்டவ் பிரிவினர் அதிருப்தி அடைந்தனர். தமது வாக்குகளை அவர்கள் பாஜகவிற்கு அளித்து வெற்றுபெறக் காரணமாகி விட்டனர்.

தேர்தல் சமயத்தில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா தனது பேட்டியில் மாயாவதிக்கு சாதகமாகப் பதிலளித்திருந்தார். இதில் அவர், மாயாவதிக்கு உபியில் இன்னும் செல்வாக்கு குறையவில்லை எனக் குறிப்பிட்டார். இதற்கு நன்றி தெரிவித்ததுடன், இதை ஒப்புக்கொண்டது அமித்ஷாவின் பெருந்தன்மை எனவும் மாயாவதி கூறி இருந்தார். இந்த நட்புணர்வு கருத்துக்களால் பாஜக மற்றும் பிஎஸ்பிக்கு இடையே ரகசிய தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் பரவின. இதன் தாக்கமாக, பிஎஸ்பியின் வாக்குகள் பாஜகவிற்கு தாவி இருப்பதாகவும் கணிக்கப்படுகிறது. இது பாஜகவிற்கு செல்லாமல் சமாஜ்வாதிக்கு வந்திருந்தால், அகிலேஷின் அரசியல் வெற்றி அடைந்திருக்கும்.

இதேவகையில், காங்கிரஸின் வாக்குகளும் இந்தமுறை தேர்தலில் பாஜகவிற்கு சென்றுள்ளன. காங்கிரஸுடன், பிஎஸ்பியும் இணைந்து உபியின் சில தொகுதிகளில் பாஜகவிற்கு எதிரான மும்முனைப்போட்டி நிலவியது. மேலும், பல தொகுதிகளில் பிஎஸ்பி, சமாஜ்வாதிக்கு இடையே இருமுனைப்போட்டி நிகழ்ந்தது. இவற்றிலும் பிரிந்த வாக்குகள் பாஜகவிற்கு வெற்றியை தேடித் தந்துள்ளன. குறிப்பாக, முஸ்லீம்களின் வாக்குகள் மிக அதிகமாகப் பிரிந்துள்ளன. உபியில் சுமார் 28 சதவீதமுள்ள அவர்களது வாக்குகள் அம்மாநிலக் கட்சியின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவை. இவற்றில் 105 தொகுதிகளில் முஸ்லீம்களே முடிவுகளுக்கு காரணமானவர்களாக உள்ளனர். இவற்றில் 55 தொகுதிகளில் பிஎஸ்பி மற்றும் சமாஜ்வாதியின் முஸ்லீம் வேட்பாளர்களுக்கு இடையே மோதல் நிலவியது. இங்கு பாஜகவின் முஸ்லீம் அல்லாத வேட்பாளர்கள் வெற்றிக்கனியை பறித்துக் கொண்டனர்.

கடந்த 2012 சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதிக்கு 29.1 சதவீத வாக்குகளுடன் தனிமெஜாரிட்டி கிடைத்து ஆட்சி அமைத்தது. இத்தனைக்கும் அப்போதைய தேர்தல், பாஜக, பிஎஸ்பி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி என நான்குமுனைப் போட்டியாக அமைந்திருந்தது. இதில், சமாஜ்வாதிக்கு எதிரான வாக்குகள் எதிர்க்கட்சிகள் இடையே சரிசமமாக பிரிந்ததால் அகிலேஷால் முதல்வராக முடிந்தது. தற்போது 32 சதவீத வாக்குகள் கிடைத்தும் அகிலேஷுக்கு எதிர்க்கட்சியாக இருக்க வேண்டி உள்ளது.

பாஜகவிற்கு சாதகமான சட்டம் ஒழுங்கு

பாஜகவின் வெற்றிக்கு சமாஜ்வாதி ஆட்சிகளில் தந்தை முலாயம்சிங் மற்றும் மகன் அகிலேஷ்சிங்கின் சட்டம் ஒழுங்கு நிலையும் காரணமாகி விட்டது. உபியில் மிக அதிகமாக 15.2 கோடி வாக்காளர்களில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்துவது என்பது சவாலாகத்தான் உள்ளது. இவர்கள் ஆட்சியில் அதிகாரம் பெற்றிருந்த குற்றப்பின்னணி கொண்ட பலர் மீது பாஜக நடவடிக்கை எடுத்தது. இதில், காஜிப்பூரின் எம்எல்ஏ அன்சாரி, அலகாபாத்தின் முன்னாள் எம்.பி அத்தீக் அகமது உள்ளிட்டப் பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் அதிகம் இடம்பெற்ற முஸ்லீம்களால் எழுந்த மதவாதப் புகார் இந்த தேர்தலில் எடுபடவில்லை. குறிப்பாக, சமாஜ்வாதியின் நிறுவனர்களில் ஒருவரான ஆஸம்கானும் சிறையில் அடைக்கப்பட்டு, இவர் உள்ளிட்ட கிரிமினல்களின் சொத்துகள் ரூ.1,181 கோடியை அரசு பறிமுதல் செய்தது. மேலும் இவர்களது சட்டவிரோதக் கட்டிடங்களை முதல்வர் யோகி, புல்டோசர்களை வைத்து இடிக்க உத்தரவிட்டார்.

பிராமணரான விகாஸ் துபே என்கவுண்டர்

முன்னதாக, பாஜகவின் முதல்வராக அமர்ந்த யோகி ஆதித்யநாத் அரசு, துவக்கத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட என்கவுண்டர்களை அனுமதித்தது. பல வருடங்களாகக் கான்பூரின் கைதாகாமல் தப்பியிருந்த பிரபல ரவுடியான விகாஸ் துபேவை பிடிக்க காவல்துறையினர் சென்றனர். அப்போது, போலீஸார் மீது கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளியிருந்தார் துபே. இதில் டிஎஸ்பி உள்ளிட்ட எட்டு போலீஸார் பரிதாபமாகப் பலியாகினர். இதை தொடர்ந்து துபே கைதாகி என்கவுண்டர் செய்யப்படும் வரை நடந்த சம்பவங்கள் பிரச்சாரத்தில் பேசப்படவில்லை. எனினும், விகாஸ் துபேயின் பலியும், உபியில் பாஜகவின் செல்வாக்கை உயர்த்தியது.

பாஜகவின் குறைபாடுகள்

இதுபோன்ற காரணங்கள் பாஜகவிற்கு வெற்றி அளித்தாலும் அவர்கள் செய்த தவறுகளும் அதிகம். கரோனா பரவலில் மாநிலத்திற்கு வெளியே இருந்த உபிவாசிகளை மீட்பதில் சிக்கல், வேலை இழப்பு, விலைவாசி உயர்வு ஆகியவை பாஜக வெற்றியையும் அச்சுறுத்தின. நீதிமன்ற வழக்குகளால் கைதான முஸ்லீம்கள் மீதான வழக்குகள் வாபஸ், சிஏஏ உள்ளிட்டப் போராட்டங்களில் விதிக்கப்பட்ட அபராதம் வாபஸ் என பாஜகவிற்கு பின்னடைவைத் தந்தன. லக்கீம்பூர்கேரியில் வாகனம் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கிலும் பாஜக சுணக்கம் காட்டியது. இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகே மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனியின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைதானார்.

சிறந்த மாற்று கட்சி இல்லை

மத்தியில் ஏழு வருடங்களாக நீட்டிக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசிற்கு எதிரான போக்கும் உபி வாக்காளர்களிடம் இருந்தது. இதில், மூன்று வேளாண் சட்டத் திருத்தங்களுக்கு எதிரானப் போராட்டத்தில் 700 விவசாயிகள் பலியாகி இருந்தனர். இதுபோல், பல பிரச்சினைகள் உபி தேர்தலின் திரைகளுக்கு பின்னால் மறைந்தன. இதற்கு உபியின் அரசியல் கட்சிகளுக்கு சிறந்த மாற்று இல்லாததும் காரணம். எதிர்க்கட்சிகளும் ஒன்று சேராமல் உள்ளவரை வாக்குகள் பிரிந்து பாஜக ஆட்சி அமைவது இயற்கையே.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in