
`துணிவு' படத்தின் கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த நடிகர் அஜித்குமார் ரசிகர் வீட்டுக்கு சமத்துவ மக்கள் கட்சியை தலைவர் நடிகர் சரத்குமார் நேரில் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
நடிகர் அஜித்குமார் நடித்துள்ள `துணிவு' திரைப்படம் கடந்த 11-ம் தேதி வெளியானது. சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் அதிகாலையில் சிறப்பு காட்சியாக 'துணிவு' திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர் பரத், ரோகினி தியேட்டர் முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, லாரியில் மேல் ஏறி உற்சாகமாக ஆடிய மாணவர் பரத் கீழே குதிக்கும்போது முதுகுதண்டு உடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கல்லூரி மாணவர் பரத் வீட்டிற்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் இன்று காலை சென்றார். மாணவரின் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த பரத் திருவுருவப்படத்திற்கு சரத்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் பரத்தின் சகோதரருக்கும் அவரது பெற்றோருக்கும் ஆறுதல் கூறியதோடு நிதியுதவி வழங்கினார். அப்போது பரத்தின் தாயார், நடிகர் அஜித் தரப்பிலிருந்து எந்த ஒரு ஆறுதலும் தெரிவிக்காத நிலையில் நீங்கள் வந்து ஆறுதல் தெரிவித்தது எங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது என்று கண்ணீர் மல்க கூறினார்.
நடிகர் அஜித்தின் ரசிகர் உயிரிழந்த நிலையில் அவரது தரப்பில் இருந்து ஆறுதல் தெரிவிக்காமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.