மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித்பவார் ஒருபோதும் முதல்வர் ஆக முடியாது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் கடந்த ஜூலை மாதம் தனது ஆதரவாளர்களுடன் ஏக்நாத் ஷிண்டே - பாஜக கூட்டணி அரசில் இணைந்தார். இதன் மூலம் தேசியவாத காங்கிரஸ் இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. இந்த சூழலில் தாங்கள் தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று அஜித்பவார் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே அஜித்பவாருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று கூறப்பட்டது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “அஜித்பவாரால் ஒருபோதும் மராட்டியத்தின் முதல்வராக முடியாது. அவரால் கனவில் மட்டுமே முதல்ராக முடியும். பல்வேறு மாநிலங்களில் கட்சியை உடைத்து பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இருப்பினும் 70 சதவீத மாநிலங்களில் அந்த கட்சி ஆட்சியில் இல்லை. 2024 சட்டமன்ற தேர்தலில் மராட்டியத்திலும் பாஜக ஆட்சியை இழக்கும்.
ஒரு நேரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சுப்ரியா சுலேவை சகன் புஜ்பால் முன்மொழிந்தார். ஆனால் அவர் தற்போது வேறு அணிக்கு மாறி உள்ளார். வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியை இந்தியா கூட்டணியில் சேர்ப்பதற்கு நான் சாதகமாக இருக்கிறேன். பா.ஜனதாவில் ஓரங்கட்டப்படும் பங்கஜா முண்டே தனி அணியை உருவாக்கினால், அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்” என்றார்